“அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான செயற்பாடுகளில் முஸ்லிம் கட்சிகள் மக்களை தொடர்ந்தும் இருட்டில் வைத்திருப்பதனை அனுமதிக்க முடியாது”.நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசனம்!May 18, 2017 10:18 am

அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக தொடர்ந்தேர்ச்சியான பல செயற்திட்டங்களை கடந்து இரண்டு வருடங்களாக முன்னெடுத்து வருகிறது. இது பல NFGG-Logoகட்டங்களைத் தாண்டி தற்போது முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்துள்ளது. அதாவது பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பிரதமர் தலைமையிலான வழிநடாத்தல் குழுவிடம் அரசியலமைப்பு மாற்றத்திற்கான முன்னோடி ஆலோசனைகள் அல்லது முன்மொழிவுகள் அடங்கிய ஆவணம் ஒன்று சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் கையளிக்கப்பட்டுள்ளது.

இம்முன் மொழிவுகள் குறித்து தமது கருத்துக்களை நிலைப்பாடுகளை ஆலோசனைகளை முன்வைக்குமாறும் வழிநடத்தல் குழுவில் உள்ள அங்கத்தவர்களிடம் கோரப்பட்டுள்ளது. இது சம்பந்தமான கலந்துரையாடல் அடுத்த வாரம் அதாவது எதிர்வரும் மே 23,24,25 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

எனவே இது அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான முயற்சிகளில் ஒரு முக்கிய கட்டமாகவே காணப்படுகிறது. அரசாங்கம் இந்த விடயங்களை ஆரவாரமின்றி செய்தாலும் அரசியலமைப்பு மாற்றத்திகான முயற்சிகள் உறுதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதையே அவதானிக்க முடிகிறது.

எல்லா சிறுபான்மைக் கட்சிகளும் குறிப்பாக தமிழ்க் கட்சிகள் இது விடயத்தில் அதிக அக்கறையோடு செயற்படுவதையும் அரசியலமைப்பு சார்ந்த விடயத்தில் துறை சார்ந்தோர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை இணைத்துக்கொண்டு தமது சமூகம் சார்ந்த அரசியலமைப்பு ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் ஆலோசனைகளையும் தீவிரமாக ஆலோசித்து வரும் இத்தருணத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதிதத்துவப் படுத்துகின்ற முஸ்லிம் கட்சிகளோ குறிப்பாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இவ்விடயத்தில் எந்தவொரு அக்கறையும் ஈடுபாடும் காட்டாமலே இருந்து வருகின்றனர்.

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான செயற்பாடுகள் முக்கிய கட்டத்தை அடைந்துள்ள இத்தருணத்தில் முஸ்லிம் கட்சிகள் இதுவிடயத்தில் என்ன செய்துள்ளார்கள், முஸ்லிம் சமூகம் சார்ந்து என்ன தீர்வு யோசனைகளை முன்வைக்கவுள்ளார்கள் என்பதை மக்களுக்கு தெளிவாக முன்வைக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகளும் இது விடயத்தில் பாராமுகமாக இருந்து விடாமல் உடனடியாகத் தலையிட்டு முஸ்லிம் கட்சிகளிடம் இது சம்பந்தமாக விளக்கங்களைக் கோர வேண்டும்.

மேலும் மக்களும் சிவில் சமூகமும் இத்தருணத்தில் விழித்துக் கொள்ளா விட்டால் வழமையைப் போன்று முஸ்லிம் கட்சிகள் இந்த முக்கிய யாப்பு சீர்திருத்த விடயத்திலும் உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மக்களை இருட்டிலே வைத்துக் கொண்டிருந்துவிட்டு நட்டாற்றிலே கை விட்டுவிடுவார்கள். இதற்கு ஏராளமான உதாரணங்கள் நாளாந்தம் முஸ்லிம் அரசியலில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக இந்த யாப்பு சீர்திருத்த முயற்சிகளில் ஒன்றான யாப்பின் முக்கிய சில விடயங்களுக்கான முன்மொழிவுகளை பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பெற்று அவற்றை அறிக்கையாக சமர்பிக்கவென பாராளுமன்ற பிரதிநிதிகளைக் கொண்ட ஆறு உப குழுக்கள் கடந்த வருடம் நியமிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குழுவிலும் முஸ்லிம் உறுப்பினர்களும் இருந்தனர். இவர்கள் முஸ்லிம் சமூகம் சார்ந்த முன்மொழிவுகளையும் முன்வைப்பதற்கான அருமையான ஒரு சந்தர்ப்பம் அப்போது இருந்தது. அப்போதும் முஸ்லிம் உறுப்பினர்கள் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கவுமில்லை, சமூகம் சார்ந்து உருப்படியான எந்தவொரு பங்களிப்பினையும் செய்யவுமில்லை என்பதே கசப்பான உண்மை.

எனவே யாப்பு சீர்திருத்தம் தொடர்பான அடுத்தடுத்த கட்டங்களிலும் முஸ்லிம் சமூகம் தொடர்பாக முஸ்லிம் கட்சிகள் இவ்வாறு நடந்து கொள்வதற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுகின்றன என்பதுவே கவலைக்குரிய அவதானமாகும்.

எனவே இந்த அபாயத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தை காப்பாற்றுவது அனைவரதும் கடமையாகும். இந்த விடயத்தை சமூகத்திற்கு தெளிவு படுத்தி விழிப்படையச் செய்வது எமது சமூகக் கடமை என்ற வகையிலேயே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எப்போதும் இது பற்றி எடுத்துரைத்து வருகிறது.

எனவே சமூக அக்கறை கொண்ட அனைவரும், அனைத்து சிவில் அமைப்புகளும் இது விடயத்தில் தங்களால் முடியுமான அழுத்தங்களை முஸ்லிம் கட்சிகளுக்கு கொடுப்பதன் மூலமே நாம் எதிர்பார்க்கும் விளைவுகளை அடைய முடியும். குறிப்பாக அரசியலமைப்பு மாற்றத்திகான பிரதமர் தலைமயிலான வழி நடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் கௌரவ அமைச்சர்களான ரவூப் ஹகீம், ரிஷாத் பதிஊதீன் ஆகியோர் இதற்கான முழுப் பொறுப்பினையும் ஏற்று செயற்படவேண்டும். அதற்கான அழுத்தங்களையும் சிவில் சமூகம் அவர்கள் மீது பிரயோகிக்க வேண்டும் என நல்லட்சிக்கான தேசிய முன்னணி கேட்டுக்கொள்கிறது.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.