“ஊழல் மோசடிகளுக்கெதிரான போரட்டமென்பது பொதுப்பணத்தை மாத்தரமின்றி பொது மக்களின் உயிர்களையும் பாதுகாப்பதற்கான போராட்டமாகும். பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்May 18, 2017 10:16 am

(NFGGஊடகப் பிரிவு)

"ஊழல் மோசடிகளுக்கெதிரான போரட்டமென்பது பொதுப்பணத்தை மாத்தரமின்றி பொது மக்களின் உயிர்களையும் பாதுகாப்பதற்கான போராட்டமாகும். அது, ஒரு சமூக்கடமை Rahuman Engமாத்திரமல்ல; மார்க்க கடமையுமாகும்"

நேற்று முன்தினம் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் தற்போது இருதய சத்திர சிகிச்சைக்காக கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்னரும் இவர் என்னைத் தொடர்பு கொண்டு தனது நிலைமையை விளக்கியிருந்தார். தனது இருதயத்தில் மூன்று அடைப்புக்கள் இருப்பதாகவும், உடனடியாக சத்திர சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என டாக்டர்கள் சொல்லியிருப்பதாகவும் சொன்னார்.

ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையான இவரின் வயது ஐம்பதுதான். சாதாரண தொழில் செய்யும் இவரின் வருமானத்தை நம்பியே முழுக்குடும்பமும் வாழ்ந்து வருகிறது. இதற்கிடையில் தனது கடைசி மகளுக்கு திருமண வயதாகி விட்டது. சத்திர சிகிச்சை செய்வதற்காக கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கொழும்பு வைத்திய சாலைக்குச் போவதும் வருவதுமாக அலைந்து திரிவதாகவும் தனக்கு உடனடியாக சிகிச்சை வழங்க முடியாது என கைவிரித்து விட்டதாகவும் பெரும் கவலையோடு தெரிவித்தார்.

எந்த நேரத்திலும் தான் மரணிக்கலாம் என்ற நிலையில் இருந்த அவருக்கு நான் பொருளாதார உதவி செய்வதாகவும் இன்னும் சிலரிடம் உதவியினைப் பெற்றுக் கொண்டு தனியார் வைத்தியசாலையிலாவது சத்திர சிகிச்சை செய்யுங்கள் எனச் சொன்ன போது, 'இல்லை, நான் வாழ்வதா அல்லது எனது மகளை வாழ வைப்பதா என்ற போராட்டத்தில் இருக்கிறேன். உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள் நான் பொருத்தமான முடிவை எடுக்கிறேன்' என்று விரக்தியோடு சொன்னார். நான் ஒரு பொருளாதார உதவியை அவருக்கு வழங்கி வைத்தேன். சிறிது நாள் கழித்து தன்னிடம் இருக்கின்ற பணத்தைக் கொண்டு தனது மகளின் திருமணத்தை செய்து வைப்பதாகத் தெரிவித்தார். தனது உயிரைப் பணயம் வைத்தாவது தனது மகளுக்கு வாழ்வைத் தேடிக் கொடுக்க வேண்டும் என்ற அவரது தியாக உணர்வு என்னைப் பிரமிக்க வைத்தது.

அதே வேளை ஒரு ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியது.

'அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு இன்னும் எத்தனை காலம் இவர் காத்திருக்க வேண்டும்; அதற்கிடையில் அவரது உயிருக்கு ஆபத்து வந்து விட்டால் அவரது குடும்பத்தின் நிலை என்னவாகும்' என்பது எனது மனதில் தொடர்ச்சியான கவலையாக ஓடிக்கொண்டிருந்தது.
இப்போது சத்திர சிகிச்சைக்கான தினம் கிடைத்துள்ளது என நேற்று முன்தினம் என்னிடம் அவர் சொன்னபோது மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

இதற்கிடையில் இரு தினங்களுக்கு முன்னர் மற்றுமொருவர் என்னை சந்தித்தார். 45 வயதான தனது சகோதரியின் கணவரின் இருதயத்தில் ஏழு அடைப்புக்கள் இருப்பதாகவும் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்றால் உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னார். ஆனால் இதை செய்வதற்கு அரசாங்க ஆஸ்பத்திரியில் வசதியியில்லை எனவும் இதனால் பத்து இலட்சம் வரையில் செலவு செய்து தனியார் ஆஸ்பத்திரியில் சத்திர சிகிச்சை மேற் கொள்வதற்காக பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அவருக்கும் பொருளாதார உதவியொன்றை செய்வதாக உறுதியளித்து அனுப்பி வைத்தேன்.

இந்த நாட்டில் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழும் ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகளில் இவை இரண்டு உதாரணங்கள் மாத்திரமே..! இது போன்ற இன்னும் பல நூற்றுக் கணக்கான ஏழைகள் அரசாங்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடியாமல் இப்படித்தான் வருடக்கணக்கில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.தங்களது வறுமை காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடியாமல் இன்னும் பலபேர் இறந்து போகிறார்கள்.

இந்த இடத்தில் என்னை ஒரு விடயம் சிந்திக்க வைத்தது; அத்தோடு ஆத்திரத்தையும் தந்தது.

இந்த ஏழை மனிதர்கள் ஏன் இவ்வாறு அநியாயமாக இறந்துபோக வேண்டும்? மிகவுமே உயர்ந்த வைத்தியம் உயிரைப்பாதுகாக்கும் வைத்தியம் அல்லவா… ?அவசியப்படும் அத்தனை பேருக்கும் அதனை வழங்குவது அரசாங்கத்தின் கடமை அல்லவா.. ? இரத்தமும், வியர்வையும் சிந்தி உழைக்கும் ஏழைகளிடமிருந்து கூட அவர்களின் வருமானத்தில் அரைவாசிக்கும் மேல் அதற்காகத்தானே அரசாங்கம் வரியாகப் பிடுங்கிக் கொள்கிறது..? இவ்வாறு கறக்கப்படும் வரிகள் அத்தனையும் அந்த மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்குக் கூட பயன்படவில்லையென்றால் இது எத்தனை துரோகமானது.. ? வரி கட்டுகின்றன மக்களுக்கான வைத்தியம் உரிய நேரத்தில் கிடைக்காது செத்து மடிகின்ற நிலையில் அம்மக்கள் கட்டிய வரிப்பணத்தை துஸ்பிரயோகம் செய்வதும் ஆடம்பரங்களை அனுபவிப்பதும் எவ்வளவு அநியாயமானது..?

அரசினால் போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படாதாதன் காரணமாகவே இது போன்ற பல உயிர் காக்கும் சத்திர சகிச்சைகள் தாமதிக்கப்படுகின்றன. ஒரு இருதய சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு அரசாங்க வைத்திய சாலையில் ஏற்படும் செலவு ஒரு ஐந்து இலட்சம் என வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் ஆட்சியாலாளர்களினால் மேற்கொள்ளப்படும் ஊழல்கள், மோசடிகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் எத்தனை கோடிகளாகும். அவை எத்தனை உயிர்களை பாதுகாக்கப் போதுமானது. ?

இதற்கு இரண்டு உதாரணங்களை சொல்ல விரும்புகின்றேன்.

தனக்கு நெருக்கமான ஒருவர் கொள்ளை இலாபம் அடைவதற்காக இந்நாட்டின் முக்கிய அரசியல் பதவியில் இருப்பவரால் ஒரு காரியம் செய்யப்பட்டது. எந்த வகையிலும் அவசியப்படாத ஒரு தேவையைக் காரணம் காட்டி மாதமொன்றுக்கு இரண்டே கால் கோடி ரூபா வாடகைக்காக ஒரு கட்டடம் பெறப்பட்டது. அதற்கு முற்பணமாக 50 கோடி ரூபாவும் வழங்கப்பட்டது. இத்தனையும் நடந்த பிறகு அந்தக் கட்டடம் பாவிக்கப்படாமல் கடந்த 15 மாதங்களாக மூடிக்கிடக்கிறது.

ஆக, ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுக்கின்ற விடயத்தில் மாத்திரம் ஏழை மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் 70 கோடி ரூபா நாசம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த தொகையானது இருதய சத்திர சிகிச்சையை எதிர்பார்த்திருக்கும் 1400 ஏழைகளின் உயிர்களை பாதுகாக்கப் போதுமானது.

அது போலவே, கடந்த 18 மாதங்களில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அரசியல் வாதிகளுக்காக மேலதிக ஆடம்பர வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு 120 கோடி ரூபாவரை அரசாங்கம் செலவு செய்திருந்தது. இது 2400 ஏழை உயிர்களை பாதுகாக்க போதுமானதாகும். இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிதி அனைத்துமே ஏழைகளும் சேர்ந்து கட்டிய வரிப்பணமேயாகும்.
ஆக, இரண்டே இரண்டு விடயங்களில் மாத்திரம் இந்த அரசாங்கம் செய்த மோசடிகள் துஸ்பிரயோகங்கள் காரணமாக நாசமாக்கப்பட்ட தொகை என்பது சாதாரணமான ஒன்றல்ல. 3500க்கும் அதிகமான ஏழை உயிர்களை பாதுகாக்கப் போதுமானது. இன்னுமொரு வகையில் சொன்னால் பல ஆயிரம் பொது மக்களின் உயிர்களைப் பணயம் வைத்து அல்லது பலி கொடுத்துத்தான் துரோகத்தனமான இந்தத் துஸ்பிரயோகங்களளை ஆட்சியாளர்கள் செய்திருக்கிறார்கள்.

இதை ஏன் இப்படி முன்வைக்கிறேன் என்றால், பொதுப்பணம் மோசடி செய்யப்படுவது பற்றி பேசுகின்ற போது அதன் பாரதூரத்தினை நாம் புரிந்து கொள்வதில்லை. "நமக்கென்ன..பொதுப்பணத்தைத்தானே திருடுகிறார்கள்" எனப் பொறுப்பற்ற வகையில் கருத்து சொல்லிவிட்டு நாமெல்லோரும் அலட்சியமாக இருந்து விடுகிறோம்.

இப்போதாவது ஊழல் மோசடிகளின் பாரதூரத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல் மோசடிகளுக்கான போராட்டம் என்பது வெறுமனே பொதுப்பணத்தை பாதுகாக்கின்ற போராட்டமல்ல. மாறாக நமது உறவுகள், நண்பர்கள், அயலவர்கள், நம்மை சுற்றிவாழும் ஏழைகள் என ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களை பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.

உண்மையில் ஒரு உயிரைப் பாதுகாப்பது பற்றிய பொறுப்பினை மிகப் பாரதூரமான கடமையாக நமது இஸ்லாம் மார்க்கம் சொல்லித்தருகிறது. அந்த வகையில் இந்த நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக போராடுவது என்பது நமக்கான ஒரு சமூகக் கடமை மாத்திரமல்ல; அது ஒரு மார்கக்கடமையுமாகும்.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.