ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை உயர் ஸதானிகர் அலுவலகத்தில் NFGG தவிசாளர் விசேட சந்திப்பு! காலி முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் தொடர்பிலும் எடுத்துரைத்தார்!!November 18, 2017 7:52 pm

(NFGG ஊடகப் பிரிவு)
ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்றும் (17.11.2017) மாலை இலங்கை முஸ்லிம்களின் விவகாரம் தொடர்பாக WhatsApp Image 2017-11-18 at 3.33.51 PMமுக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டார்.

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் தலைமை காரியாலயத்தில் நேற்று மாலை 03.00மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது , சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் விசேட அதிகாரியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இலங்கையில் முஸ்லிம்களை இலக்குவைத்து நடாத்தப்படும் இனவாத வெறுப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது NFGG தவிசாளர் விரிவாக எடுத்துரைத்தார். வெறுப்புணர்வுப் பிரச்சார நடவடிக்கைகளை அரசாங்கங்கள் உரிய நேரத்தில் கட்டுப்படுத்தத் தவறியதன் காரணமாகவே அளுத்கம கலவரம் போன்ற பாரிய வன்முறைகளாக அவை மாறியது எனவும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்தே இந்த இனவாத தாக்குதல்கள் பெரும்பாலும் இடம்பெறுவதனையும் அவர் தெளிவு படுத்தினார்.

அவ்வாறான இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி சகல மக்களும் சமத்துவமாகவும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய ஒரு புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்காகவே புதிய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கிய போதிலும் தற்போதைய அரசாங்கம் கூட அதனை செய்வதற்கு தொடர்ந்தும் தவறி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதன் விளைவாக தற்போது காலி - ஜின்தோட்டையிலும் முஸ்லிம்களை இலக்கு வைக்கும் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன என்பதனையும் எடுத்துரைத்த அப்துர் ரஹ்மான் சட்டம் ஒழுங்குகளை நிலை நாட்டுவதில் பாராபட்சமான போக்கு நிலவுவதே இதற்கான அடிப்படைக் காரணம் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களைக் கொடுத்து சிறு பான்மை மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதுபோன்று, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான பிரச்சினைகளையும் வடகிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்கள் எதிர் கொள்ளும் காணிப்பிரச்சினைகள் குறித்தும் அவர் எடுத்துக் கூறினார். மேலும், அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் புதிய தேர்தல் முறையானது சிதறி வாழும் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெருமளவில் பாதிக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்ற விடயத்தையும் அவர் விளக்கியதோடு இந்த விடயங்கள் தொடர்பான ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்தார்.

NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் முன்வைத்த விடயங்களை ஆர்வத்துடன் செவிமடுத்த அந்த அதிகாரி இது தொடர்பில் உரிய இடங்களுக்கு தான் அறிக்கைகளை அவசரமாக சமர்ப்பிப்பதாகவும் இவை தொடர்பாக தொடர்ச்சியான அவதானங்களையும் அறிக்கைகளையும் தொடர்ந்தும் அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

உரிய இராஜதந்திர வழி முறைகள் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு இது தொடர்பில் தெரியப்படுத்துவதாகவும் அவர் இச்சந்திப்பின் போது உறுதியளித்தார்.

இந்த சந்திப்புக்களின் போது NFGGயின் சிரேஸ்ட செயற்குழு உறுப்பினரான முஹம்மட் இஸ்ஸதீன் அவர்களும் ஜெனிவாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரான முயீஸ் வஹாப்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 WhatsApp Image 2017-11-18 at 3.33.15 PM WhatsApp Image 2017-11-18 at 3.33.51 PM WhatsApp Image 2017-11-18 at 3.34.43 PM WhatsApp Image 2017-11-18 at 3.34.55 PM WhatsApp Image 2017-11-18 at 3.35.18 PM WhatsApp Image 2017-11-18 at 3.41.31 PM


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.