நடைபெறவிருக்கும் ஜெனீவா மனித உரிமை மாநாடு தொடர்பில் NFGGயுடன் இராஜதந்திரிகள் மேற்கொண்ட சந்திப்பு!January 17, 2018 7:01 pm

(NFGG ஊடகப் பிரிவு)

ஜெனீவா மனித உரிமை மாநாட்டோடு தொடர்புபட்ட உயர்மட்ட இராஜதந்திரிகள்  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யுடன்   விசேட சந்திப்பொன்றினை மேற்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு நேற்று (16.01.2018) NEWS PHOTO-01 - Copyகொழும்பில் இடம் பெற்றது. ஜெனிவாவில் இருந்து வருகை தந்திருக்கும் பிரித்தானியாவைப் பிரதிநிதிதுவப்படுத்தும் மனித உரிமை தொடர்பான இராஜ தந்திரியான பொப் லாஸ்ட்  அவர்களும்,   இலங்கை தொடர்பான ஜெனிவா பிரகடன விடயங்களின் முன்னேற்றம் தொடர்பாக கவனம் செலுத்தி வரும் இராஜ தந்திரியான போல் கிறீன்  அவர்களும் NFGG பிரதி நிதிகளை சந்தித்து பேச்சு வார்த்தைகளை நடத்தினர்.

 இச்சந்திப்பில்,  NFGG சார்பாக அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மற்றும்  பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 கடந்த நவம்பர் மாதம் ஜெனிவாவில் இடம்பெற்ற மனித உரிமை மீளாய்வு மாநாட்டில் சுயாதீன பங்கு பற்றுனராக பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டிருந்தார். அத்தோடு ஜெனிவாவை தளமாகக் கொண்டியங்கும் பல்வேறு உயர் மட்ட இராஜ தநதிரிகளுடனான சந்திப்புக்களையும் அவர் மேற்கொண்டிருந்தார். அந்த வகையில் பொப் லாஸ்ட் அவர்களையும் ஜெனிவாவில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை அப்துர் ரஹ்மான் மேற்கொண்டிருந்தார்.

 

இந்த சந்திப்புக்களின் போது,  முஸ்லிம்களுக்கெதிராக மேற் கொள்ளப்படும் இனவாத நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள், இனவாத சக்திகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் காட்டி வரும் அசமந்தப் போக்கு,  முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயங்களில் காட்டப்படும் பாரபட்சமான அணுகு முறைகள்,  புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திலும் அரசியல் தீர்வு விடயத்திலும் முஸ்லிம்கள் கொண்டுள்ள கரிசனைகள் மற்றும் வட கிழக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட  பல்வேறு விடயங்கள் பற்றி  இராஜ தந்திரிகளோடு அப்துர் ரஹ்மான்  உரையாடியிருத்ததுடன் அறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தார். குறிப்பாக ஜிந்தோட்டை கலவரம் தொடர்பாக உரிய நேரத்தில் எடுத்துரைத்திருந்ததுடன் அளுத்கம வன்முறைகள் தொடர்பான விரிவான அறிக்கைகளையும் சம்ர்ப்பித்திருந்தார்.

 

NFGG தவிசாளரினால் மேற்கொள்ளப்பட்ட இந்த சந்திப்புக்கள் பலதரப்பட்ட இராஜதந்திர மட்டங்களில் காத்திரமான தாக்கங்களை செலுத்தியிருந்தன. அத்தோடு முஸ்லிம் மக்களின் விவகாரம் தொடர்பில் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கும் இந்த சந்திப்புக்கள்  பெரும் உதவியாகவும் இருந்தன. இந்த விஜயத்தினைத் தொடர்ந்து பல்வேறு தொடர்பாடல்கள் ஜெனிவா இராஜதந்திரிகளுடன் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பின்னணியிலேயே நேற்றைய சந்திப்பும் இடம் பெற்றது.

 

ஏதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள  மனித உரிமை மாநாட்டில் இலங்கை தொடர்பான விசேட  கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன. குறிப்பாக, இலங்கையின் மனித உரிமை விடயங்கள் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பில் ஏற்கனவே மேற்கொள்ளபட்டுள்ள தீர்மானங்களின் அடிப்படையில் இலங்கை எந்தளவு தூரம் தனது கடமைகளை நிறைவேற்றியுள்ளது என்பது பற்றி விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. 

 

இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாக எடுத்துக் கூறினர்.

மீள் குடியேற்ற விடயங்களைப் பொறுத்த வரையில் இலங்கை அரசாங்கத்தைப் போலவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் வட மாகாண சபையும் தமது கடமைகளை உரிய முறையிலும், இதய சுத்தியுடனும் செய்யவில்லை என்பதும் NFGGஇனால் சுட்டிக் காட்டப்பட்டது.

குறிப்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் NFGG செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறைவேற்ற வேண்டிய கடமைகளில் போதுமான அக்கறை காட்டவில்லை என்பதை NFGG பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், அரசியல் தீர்வு விடயங்களில் முஸ்லிம் மக்களின் நியாயமான அபிலாசைகள் உள்வாங்கப்பட்டு சகலரும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இறுதித்  தீர்வு அமைய வேண்டும் என்பதனையும் NFGG பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

 அது போலவே, தேசிய நல்லணக்கத்தை நோக்கி நாடு முன்னேற வேண்டும் என்றால் சகல இன மக்களும் தத்தமது விகிதாசாரத்திற்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவங்களை  சகல மட்டங்களிலும் பெற வேண்டியது அவசியமாகும். ஆனால் இந்த அரசாங்கம் தற்போது அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ள புதிய தேர்தல் சட்டங்கள், சிதறி வாழும் சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய பிரிதிநிதித்துவங்களை கடுமையாக மட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது, என்றும் இது ஒரு போதும் தேசிய நல்லிணக்கத்திற்கு உகந்ததல்ல என்பதையும் NFGG பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

 முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் கவனமாக உள்வாங்கிக் கொண்ட இராஜதந்திரிகள் தொடர்ந்தும் NFGG யோடு கலந்துரையாடல்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

NEWS PHOTO-01

 


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.