“முஸ்லிம் சமூகப்பிரச்சனையாக மட்டும் முன்வைத்து தேசிய அரங்கில் நமது பிரச்சினைகளை தனிமைப் படுத்தி விடக்கூடாது” NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்.May 23, 2017 11:51 am

(NFGG ஊடகப் பிரிவு)
"நமது பிரச்சினைகளை முஸ்லிம் சமூகப் பிரச்சினையாக மாத்திரம் முன்வைத்து தேசிய அரங்கில் அதனை தனிமைப் படுத்தி விடாமல் நாட்டின் குடி மக்களுக்கு ஏற்பட்ட ஒரு தேசியப் 14445981_1100255570009604_4826998796458589254_nபிரச்சினையாகவே முன்வைக்க வேண்டும். அது போலவே நமது சொந்த விடயங்களில் மாத்திரம் அக்கறை காட்டுபவர்களாக இருக்காமல் நாடு எதிர் கொண்டிருக்கும் பொதுப் பிரச்சினைகள் அத்தனையிலும் சம பங்காளிகளாக நின்று உழைப்பவர்களாக நாம் மாற வேண்டும். அப்போதுதான் நமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் அடுத்தவர்களின் ஒத்துழைப்புடன் பெறுவது சாத்தியமாகும்"
இவ்வாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது தலைதூக்கியுள்ள இனவாத நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது

"கடந்த கால மஹிந்தவின் ஆட்சியில் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைககளை கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே மைத்திரி ரணில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
ஆட்சி மாற்றத்திற்காக மக்கள் ஆணையைக் கோரிய போது மக்களுக்கு வழங்கியிருந்த இன்னும் பல வாக்குறுதிகளை மீறிவிட்டது போலவே இந்த வாக்குறுதியினையும் செய்வதற்கு இந்த அரசு தவறி விட்டது.

கடந்த ஆட்சியில் இருந்தது போலவே பெரும்பான்மை இனவாத சக்திகள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தமது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து அவர்கள் தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு தம்மைக் கட்டுப்படுத்தாது என்கின்ற துணிவோடு மிக அநாகரிகமான வன்முறைகளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். சகவாழ்வுக்கு பொறுப்பான அமைச்சரையே அவரது அலுவலகத்திற்கு தேடிச்சென்று அச்சுறுத்துகின்ற நிலைக்கு அவர்களது நடவடிக்கைகள் சென்றிருப்பது மாத்திரமில்லாமல் அவர்களை கட்டுப்படுத்த நினைக்கும் பொலிஸாரை பகிரங்கமாக இம்சித்து அவமானப்படுத்தும் செயல்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எல்லாவற்றிக்கும் மேலாக நீதி மன்ற தடை உத்தரவுகளையும் கிழித்து பொலிஸாரின் முகங்களிலேயே தூக்கியெறிகின்ற அளவிற்கு அவர்களின் வரம்பு மீறல்கள் சென்றிருக்கிறன.

நாட்டின் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் விரும்புகின்ற அத்தனை பேரையும் இது மீண்டும் கவலையடையச் செய்திருக்கின்றது.
குறிப்பாக முஸ்லிம் சமூகம் அச்சப்பட வேண்டிய சூழல் மிண்டும் தோன்றியிருக்கிறது. பழைய பாணியிலேயே தமது அரசியல்வாதிகளும் 'அங்கு முறைப்பாடு செய்கிறோம், இங்கு முறைப்பாடு செய்கிறோம்'எனப் படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பொது மக்களால் செய்யப்படக்கூடிய பொலிஸ் முறைப்பாடு போன்ற காரியங்களைத்தான் இன்னு முஸ்லிம் அமைச்சர்களும் கூட செய்கிறார்கள். எதிர்கட்சியில் இருப்பவர்களால் செயயப்பட வேண்டிய காரியங்களைத்தான் ஆளும் கட்சியல் இருக்கும் எமது அரசியல் வாதிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள். இது மக்களை இன்னும் விரக்தியடைய செய்திரக்கன்றது. இதை எப்படிக் கையாளலாம் என்ற கலந்துரையாடல்கள் சமூக வலைத்தளங்களிலும் ஏனைய இடங்களிலும் மிகத் தீவிரமடைந்திருக்கின்றன.

பல சந்தர்ப்பங்களில் உணர்ச்சி வசப்பட்ட கருத்துக்களே முன்வைக்கப்படுகின்றன. இன்னும் பல இடங்களில் தாம் சார்ந்திருக்கும் கட்சிகளை அல்லது தமக்கு விருப்பமான அரசியல் வாதிகளை நொந்து கொள்ளாத வகையில் ஒவ்வொரு தரப்பினரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதனை எப்படிக் கையாள்வது என்ற விடயத்தில் தொடர்நதும் ஒரு தெளிவற்ற நிலை நமது சமூகத்தில் காணப்படுகின்றது.

ஒரு அடிப்படை விடயத்தை நாம் இங்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.

நமது முஸ்லிம் சமூகம் ஒரு சிறுபான்மை சமூகமாக இந்த நாட்டில் வாழ்ந்த போதிலும் கூட இலங்கையர் என்ற பெரும்பான்மை சமூகத்தில் நாமும் ஒரு அங்கமே. நமக்கான உரிமைகள் சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை சுதந்திரமாக நாம் அனுபவிப்பதனை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்.
அந்த வகையில் இதை ஒரு முஸ்லிம் சமூக பிரச்சினையாக மாத்திரம் முன்வைக்காமல் இலங்கைக் குடிமக்களுக்கு ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சினையாகவே இதனை முன்வைக்க வேண்டும். அத்தோடு சட்டம் ஒழுங்கு இங்கே மீறப்படுகின்றது. நீதி மன்றத்தின் தீர்ப்புகள் அவமதிக்கப்படுகின்றன. இது நாட்டின் இறைமைக்கே அச்சுறுத்தலான விடயமாகும். எனவே, இது ஒரு தேசிய பிரச்சினை மாத்திரமின்றி நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலான ஒரு விடயமாகும்.
எனவே, இதனை ஒரு முஸ்லிம் சமூக பிரச்சினையாகச் சுருக்கி நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. இதை ஒரு தேசியப் பிரச்சினையாக முன்வைத்து சகல தரப்பினரையும் இதற்காகப் பேச வைத்து எல்லோரையும் இணைத்துக் கொண்ட ஒரு பொதுப் போராட்டமாக இதனை மாற்ற வேண்டும்.

ஆனால் நமக்கு இங்கிருக்கின்ற குறைபாடு என்னவென்றால் ஏனைய தேசிய பிரச்சினைகளில் அக்கறை காட்டுபவர்களாகவோ அல்லது அதில் பங்களிப்புச் செய்பவர்களாகவோ நமது அரசியல் வாதிகளும் இருக்கவில்லை; நமது மக்களும் இருக்கவில்லை. ஏனைய பல பொது விடயங்களில் நமது சிவில் சமூக அமைப்புகளும் பெரிதளவில் அக்கறை காட்டுபவையாக இருக்கவில்லை.
அதனால் நமக்கு அநீதி இழைக்கப்படும் சந்தர்பங்களில் அதற்கு நீதி பெற்றுத் தருமாறு அடுத்தவர்களையும் நாம் அழைக்கும் போது நம்மை அவர்கள் சுயநலவாதிகளாகவே பார்க்கிறார்கள்.தேசிய நலன்சார்ந்த எல்லா விடயங்களிலும் அமைதியாக இருந்து விட்டு நமக்கென்று ஒரு பிரச்சினை வருகின்றபோது மாத்திரமே வாய் திறந்து பேசுபவர்களாக நம்மைப் பார்க்கிறார்கள்.

இக்கட்டதிலிருந்தாவது நாம் இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாட்டின் குடி மக்கள் என்ற வகையில் நமக்கேற்படும் பிரச்சினைகளை முன்வைக்கும் போது நமது முஸ்லிம் சமூகப் பிரச்சினையாக அதனைத் தனிமைப் படுத்தி விடாமல் நாட்டின் குடி மக்களுக்கு ஏற்பட்ட ஒரு தேசியப் பிரச்சினையாக முன்வைக்க வேண்டும். அது போலவே நமது மத கலாசார விடயங்களில் மாத்திரம் அக்கறை காட்டுபவர்களாக இருக்காமல் நாடு எதிர் கொண்டிருக்கும் பொதுப் பிரச்சினைகள் அத்தனையிலும் சம பங்காளிகளாக நின்று உழைப்பவர்களாக நாம் மாற வேண்டும். சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட நாட்டின் பொது நலன்களை பாதுகாப்பதன் மூலமே நமது நலன்களை பாதுகாக்க முடியும் என்ற யதார்ர்த்தத்தை ஒரு போதும் மறந்துவிடக்கூடாது "

 


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.