அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளோடு மறைந்துபோகுமா ஒலுவில் கடலரிப்பு பிரச்சினை…!September 19, 2015 1:54 pm

தந்திமகன்-

கடந்த பொதுத்தேர்தலின்போது மக்களால் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தெரிவாகாமல் போனவர்கள், கட்சியாளர்கள் தங்களுக்கு வாக்குகளை அளித்தமைக்காக தங்களுடைய பிரதேச மக்களுக்கு நன்றிப்பூக்களைச் சொரிவதற்காக செல்வது வழமையாகும். அந்த நடைமுறையில் முஸ்லிம் கட்சியாளர்கள் குறிப்பாக அம்பாரை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் நீயா? நானா? என்று முந்திச் செல்வதிலும் தங்களுடைய போட்டியினையே காண்பித்திருக்கின்றார்கள். திகாமடுல்ல மாவட்டத்தில் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டவரும், இன்றைய அமைச்சராகவுமுள்ள தயாகமகே அவர்கள் உடன்செயற்பட்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் வந்து நன்றிகளை தெரிவித்திருந்தார். அம்பாரையின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் அவர் சென்று எதிர்காலத்தில் தன்னுடைய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், முஸ்லிம் பிரதேசங்களில் தனது செயற்பாடுகள், பொதுமக்கள் தொடர்புகொள்ள வேண்டிய தன்னுடைய பிரதிநிதிகள் தொடர்பாகவும் அவர் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். தன்னுடைய மகிழ்ச்சியினை பகிர்ந்து கொள்வதற்காக பால்சோறு சமைத்து மக்களுக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆனால் முஸ்லிம் கட்சியாளர்கள், அங்கத்தவர்கள் அம்பாரையில் வெற்றிபெற்ற கையுடன் கொழும்பு சென்று அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொண்டதன் பின்னர் தன்னுடைய தலைமைகளுடன் தத்தமது பிரதேசங்களுக்குச் நன்றியினை தெரிவிப்பதற்காக கடந்தவாரம் சென்றிருந்தனர். ஒவ்வொரு ஊர்களிலும் சிறிய கருத்தரங்குகளுடன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். பொதுத்தேர்தலின்போது கூறப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்கிற செய்திகளையும் மக்களுக்குத் தெரிவித்துக் கொண்டனர். இத்தகைய ஒன்றுகூடல் ஒன்று கல்முனையில் முஸ்லிம்காங்கிரஸ் தலைவரின் தலைமையில் நடைபெற்றபோது கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்லின்போது பிரபலமாக பேசப்பட்ட சாய்ந்தமருது உள்ளுராட்சிக்கான புதிய சபை அமைத்தல் தொடர்பாகவும் பேசப்பட்டது.

இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுத்தேர்தல் காலத்தில் கல்முனைக்கு வருகைதந்திருந்தபோது இந்தவிடயத்தை மேற்கொள்வதாக உறுதிப்படுத்தியிருந்தார். இதனை மேற்கொள்வதற்காகவே கல்முனையின் முன்னாள் மேயர் சிறாஜ் மீராசாகிபு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமில் அவர்களும் முகாவினருடன் உறவை முடித்துக் கொண்டு வன்னித்தலைமையுடன் இணைந்திருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும். இப்போது பிரதமரே கூறிவிட்டார் சாய்ந்தமருதுக்கான புதிய சபைக்கான அங்கீகாரத்தை. அதேவேளை அமைச்சரான வன்னி மைந்தனது பக்கமிருந்தும் புதிய சபைக்கான அங்கீகாரத்தை வென்றெடுப்பதற்கான கோரிக்கைகள் விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனையும் தாண்டி முகாவின் தலைவர் மற்றும் கல்முனையின் பிரதிநிதியும், பிரதியமைச்சருமான ஹரீஸ் போன்றோர் இது தொடர்பில் புதிய சபைக்கான அங்கீகாரத்தை வென்றெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சாய்ந்தமருது புதிய உள்ளுராட்சிக்கான நிறுவல் தொடர்பாக அமைச்சர் றவூப் ஹக்கீம் ஒருவரியில் விளக்கமளித்திருந்தார். அதாவது 'புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த துறைசார்ந்த அமைச்சருடாக சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி நிறைவேற்றிக் கொடுக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார். இந்த வார்த்தைகளுக்குள் புதிய உள்ளுராட்சிக்கான நிறுவலும் அமைந்துள்ளதாகவே பார்க்கப்படுகின்றது. கல்முனை நகர அபிவிருத்தி, சாய்ந்தமருது நகர அபிவிருத்தி, சாய்ந்தமருதுதோhணா அபிவிருத்தி, மற்றும் சாய்ந்தமருது மீன்பிடி துறைமுக அபிவிருத்தி, மாற்றுப்பாதைக்கான அபிவிருத்தி இவ்வாறு அனைத்து விடயங்களும் இதனுள் அடங்கியுள்ளன. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் இன்றைய நகர அபிவிருத்தி அமைச்சினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பான விடயமாகும்.

அதேவேளை இம்முறை அம்பாரையில் களமிறங்கிய அமைச்சர் றிஷாத்தின் மயில் சின்னம் பெற்றுக் கொண்ட வாக்குகளுக்காக நன்றியினைத் தெரிவிக்க வருகைதந்திருந்தார். இதனைக் கேள்விப்பட்டு தான் முந்திச் செல்லவேண்டும் என்கிற நிலையில் முகாவின் தலைவைர் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஒலுவிலுக்கு சென்றிருந்தார்கள். அங்கு துறைமுக அபிவிருத்திக்கென பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளுக்குரிய நஷ்டஈட்டுத் தொகையும், கடலரிப்பினால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமும், ஆயிரக்கணக்கான தென்னை மரங்களும் அழிவுக்குள்ளானதையும் பார்வையிட்டிருந்தார்கள். இதற்கான நஷ்டஈட்டினை பெற்றுத்தருமாறு அந்த மக்கள் வேண்டிக் கொண்டனர். கடல் அரிப்பின் காரணமாக தற்போது மீன் பிடியாளர்களின் இருப்பிடம், அல் மினாரா பாடசாலை, வெளிச்சவீடு, மகாபொல நிலையம் போன்றனவும் பாரிய நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன.

இவ்வாறு பாதிக்கப்படுகின்ற ஒலுவில் பிரதேசத்தை பார்வையிடுவதும், பின்னர் மறந்துபோவதுமாகவே அமைச்சர்களும், அதிகாரிகளும் இருந்துவருகின்றனர். ஆனால் இனிமேல் அதுநடக்காது என்கிற வகையில் அமைச்சர்கள் போட்டிபோட்டுக் கொண்டு ஒலுவிலுக்கு வருகைதந்திருக்கின்றார்கள். இந்த செயற்பாடுகள் கடந்த பல வருடங்களாகவே கூறப்பட்டு வருவதையும், பார்வையிடுவதையுமே நோக்காக கொண்டுள்ள அமைச்சர்கள் இன்றைய நல்லாட்சியிலாவது இந்த மக்களின் வாழ்வாதாரத்தையும், இந்தப் பிரதேசத்தையும் அழிவிலிருந்து காப்பாற்றுவார்களா? என்று மக்கள் கேட்கின்றார்கள்.

அமைச்சர் றிஷாட் அவர்களும் இப்பிரதேசத்திற்கு வருவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில்தான் முகாவின் அமைச்சர்களும் அதே தினத்தில் வருகை தந்திருந்தனர். அமைச்சர் றிஷாட் அவர்கள் இதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளவும், ஜனாதிபதி, பிரதமர், உரிய அமைச்சர், அதிகாரிகள் மட்டத்தில் உடனடியாக தெரிவித்து மாற்று நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அங்கு குழுமிய மக்களிடம் தெரிவித்திருக்கின்றார். இப்போது பலமான போட்டி நிகழ்கிறது. யார் என்ன செய்தாலும் ஒலுவில் பிரதே மக்களின் விடியலில் யார் முந்திக் கொள்கின்றார்களோ அவர்களுக்குத்தான் இனிமேல் அந்த மக்களின் வாக்குகள் விழும்.

கடந்தபொதுத்தேர்தலில் மூன்று அங்கத்தவர்களை திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து முகாவின் உறுப்பினர்கள் வந்திருந்தாலும், கடந்தகாலத் தேர்தல்களுடன் ஒத்துப்பார்க்கின்றபோது இம்முறை ஐ.தே.கட்சியுடன் இணைந்தும் பெற்றுக் கொண்ட வாக்குகள் குறைவானதாகும். ஏனெனில் வாக்குறுதிகள் கூறப்படுவதும், பின்னர் மறைக்கப்பட்டு மறக்கப்படுவதும் அப்பிராந்திய மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதும் காரணமாக இம்முறை முகாவிற்கு எதிர்பார்த்த வாக்குகள் விழவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள சரிவுகள் காரணமாக எதிர்காலத்தில் இப்போது அதாவது கடந்த பொதுத்தேர்தலின்போது வாக்குறுதி வழங்கப்பட்ட கூற்றுக்கள் சரியான முறையில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுமானால், மக்கள் எதிர்காலத்தில் முகாவினை ஏந்திப்பிடிப்பார்கள். இல்லையேல் அப்படியே இறக்கிவிட்டு மக்களுக்கு சேவை செய்கின்றவர்களை நாடுவார்கள்.

அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக பாராளுமன்றத்திற்குத் தெரிவான ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த வாரத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்றபோது அங்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் முகாவின் தலைமைப்பீடத்தையும், அதன் தலைவரையும் கடுமையாக சாடியிருந்தார். அதாவது, 'கல்குடாதொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மாத்திரம்தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெறலாம் என்கிற மாயையை கடந்த பொதுத்தேர்தலில் கூட அக்கட்சியின் போராளிகள் அதன் தலைவர்கள் கிளப்பியிருந்தார்கள். ஆனால் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த மண்னை சேர்ந்த ஒருவரை பாராளுமன்றம் அனுப்பலாம் என்ற உண்மை செய்தியை நாம் தேசியத்திற்கும், உலகிற்கும் சொல்லி இருக்கின்றோம் அது நடைபெற்றிருக்கிறது' என்றும் கூறியிருந்தார்.

மேலும், 'முகாவின் தலைவரின் நோக்கமெல்லாம் அவருடைய கட்சி வாழ வேண்டும், மரணிக்கும் வரை தலைவராக இருக்க வேண்டும், அமைச்சராக இருக்க வேண்டும் என்பவற்றினைத் தவிர அவரிடம் நோக்கங்கள் எதுவும் கிடையாது. கிழக்கில் இருக்கின்ற முஸ்லிம்மக்களுடைய காணிப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றோ, சவூதி அரசு கொடுத்த 500 வீடுகள் திறக்கப்படாமல் இருக்கிறது அதனை திறந்து கொடுக்க வேண்டும் என்றோ, அல்லது பெரும் தலைவர் அஷ்ரப் கட்டிய தென்கிழக்கு பல்கலைக்கழகம் இன்னும் பல வீரநடை போட்டு இயங்க வேண்டும் என்றோ, ஓலுவிலில் துறைமுகத்தினை கொண்டுவந்த அந்த தலைவர் மரணித்து விட்டார் அவருடைய கனவினை எவ்வாறு நினைவாக்கலாம் என்றோ எந்த ஒருதிட்டமும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவராகிய றவூப் ஹக்கீம் அவர்களிடம் கிடையாது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி துஆக்களினால், தியாகத்தினால், இறையச்சத்தினால் வளர்த்த கட்சி. கூலி வேலை செய்தவர்கள், விவசாயிகள், மீன்பிடித்தொழில் செய்பவர்கள் தங்களுடைய பணங்களை செலவு செய்து, வியர்வை சிந்தி, நோன்பு நோற்று உருவாக்கிய அந்த இயக்கம் இன்று எவ்வாறு தேர்தல் காலங்களில் செயற்படுகின்றது என்று பார்த்தால் அரிசி கொடுத்து மா கொடுத்து தேர்தல் காலங்களிலே வாக்கு கேட்குமளவுக்கு மாறிவிட்டது. இதனைத்தான் கடந்த மாகாண சபைத் தேர்தலிலும் செய்தார்கள். மட்டக்களப்பிலும் மன்னாரிலும் இம் முறை எழுச்சி மாநாடு நடாத்தினார்கள்.

இன்று நிறைய தேவையுடைய சமூகமாக நாம் இருக்கின்றோம் மூன்றில் இரண்டு சமூகம் வட, கிழக்கிற்கு வெளியே வாழ்கின்றது. வைத்தியர்கள், சட்டத்தரனிகள், பொறியலாளர்கள் இல்லை என்று இவ்வாறு எமது சமூகம் கஷ்டப்பட்டுகொண்டிருக்கின்றது. எமது சமூகம் மிக மிக பின்தள்ளப்பட்டிருக்கின்றது. எந்தளவுக்கு என்றால் கல்வி, வைத்தியதுறை மற்றும் விஞ்ஞானத்துறைகளில் மூன்று வீதமும் ஏனைய திட்டமிடல், பொது நிருவாகம் போன்ற துறைகளில் 2 வீதமும் தாம் நாம் இருக்கின்றோம். இந்த நாட்டில் 10 வீதம் வாழ்கின்றோம் என்று பெருமையாக சொல்கின்றோம் எங்களுடைய வளர்ச்சிதான் கூடுதலாக இருக்கின்றது என்று பெருமையாக பேசுகின்றோம்.

நாம் எமது வாக்குகளை தேர்தல் காலங்களில் வெறும் 10 கிலோ அரிசிக்கும், மாவுக்கும், பணத்திற்காகவும் வாக்களித்தோமா? அல்லது எமது நியாயமான கோரிக்கைகளையும், அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்காக வாக்களித்தோமா? என்று நாம் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்ல கடமை பட்டிருக்கின்றோம். இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரினது குறிக்கோளினை பாருங்கள். யாரைத் தோற்கடிக்க வேண்டுமென கூறினாரோ அவர்கள் வெற்றிபெற்று அமைச்சர்களாகவும் வந்துவிட்டார்கள்.

எது எவ்வாறாயினும் நாம் எமது சமூகத்திற்காகவும், எமது மக்கள் இந்நாட்டில் தலை நிமிர்ந்து வாழ்வதற்காகவும், எமது இளைஞர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதற்காகவும் அன்று நாம் எந்த ஒரு சிறுபான்மை இனத்தின் கட்சிகளும் தீர்மானிப்பதற்கு முன்பாக நாம் மைத்திரி அணியில் இணைந்து கொண்டோம். எனவே எமது சமூகத்திற்கு யார் அநீதி இழைத்தாலும் நாம் எமது பதவியினை இழந்துதான் குரல் கொடுக்க வேண்டியநிலை வந்தாலும் அதையும் நாம் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்' எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியில் விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் வழங்குவதாக வாக்களிக்கப்பட்டபடி அட்டாளைச்சேனைக்கு கிடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் அந்த உறுப்புரிமை சிலவேளைகளில் திருமலைக்கு, வன்னிக்கு கைமாறலாம் என்கிற கதைகளும் பேசப்படுகின்றன. அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் கடந்த பலவருடங்களாக முகாவிற்கு வாக்களிப்பதே கடமையாகக் கொண்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, முன்னாள் அமைச்சர் உதுமாலெவ்வை போன்றோர்களுக்கு வாக்களிக்காமல் விட்டது மாத்திரமன்றி அவர்களுடைய சேவைகள் எதுவும் தேவையில்லை என்று கூறிய அந்த மக்கள் இன்று முகாவிடமிருந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை அட்டாளைச்சேனை மண்ணுக்கு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றார்கள். ஆனால் அமைச்சர் றவூப் ஹக்கீம் இதுவரை வாய்திறந்தாக தெரியவில்லை. இருப்பினும் விரைவில் இதற்கான முடிவு கிட்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

இப்பிராந்தியத்தின் வடிகாலமைப்புக்கள், சம்புக்களப்பு பிரச்சினை, மாற்றுப்பாதை அமைப்பு விவகாரம், தொழில்வாய்ப்பு, கல்வி மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்திகள் கடந்தகாலத்தில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதனை நிறைவேற்றும் வகையில் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை இப்பிராந்தியத்தில் வாக்குறுதியளித்தது போல் மேற்கொள்ள வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். வெறுமனே எம்பி பதவியின் ஊடாக இந்த அபிவிருத்திகளை மேற் கொள்ள முடியாது. முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்தி மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்த முனையுமாறு மக்கள் வேண்டுகின்றார்கள்.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.