இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்! எப்படி முன் நகர்த்துவது? (பகுதி I)August 4, 2014 5:35 pm

-Dr: I.L. முஹம்மத் றிபாஸ் -

Dr.ILM.Rifaz.இலங்கையின் இஸ்லாமிய சமுகம் வரலாறு நெடுகிலும் காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர் நோக்கியே வந்திருக்கிறது. இந்த பிரச்சினைகளின் வீரியமும் வடிவங்களும் மாறுபட்டவை. ஆயினும் இந்த பிரச்சினைகளை முஸ்லிம் சமுகம் கால வர்த்தமானங்களுக்கு ஏற்ப முகம் கொடுத்து சமாளித்தே வந்துள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளின் மூல காரணங்களை கண்டறியும் முயற்சிகளோ அல்லது இவற்றிற்கான விஞ்ஞான பூர்வமான அறிவுடமையான ஆய்வுகளோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அத்தோடு இந்த பிரச்சினைகளுக்குரிய அடிப்படை காரணங்களையோ, பிரச்சினகளுக்கு காரணமாகவுள்ள சமுக, கலாச்சார, சகவாழ்வு சார்ந்த விடயங்கள் தொடர்பாகவோ அல்லது ஏனைய சமூகங்களின் முஸ்லிம் சமுகம் பற்றிய மனோபாவம் சார்ந்த விடயங்கள் தொடர்பாகவோ ஆழமாக சிந்திக்காது எமது சமுகத்தின் பிரச்சினைகளை தற்காலிகமாக் தீர்த்துக்கொள்ளும் பாங்கில் சுய நலப் போக்கிலேயே நாம் தீர்வுகளிப்பெற முனைந்திருக்கிறோம்.

இது எமது சமுகம் எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்சினைகளின் தீவிரத்தை, ஆழத்தை புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக எடுக்கப்பட்ட தற்காலிக தீர்வுகளாக இருப்பதால் எமது சமுகம் எதிர் நோக்கும் எந்த சவாலையும் இதுவரை நிரந்தரமாக தீர்த்து வைக்க நமது சமுகத்தால் முடியவில்லை. இதன் காரணமாக நாம் சந்திக்கும் பிரச்சினைகளின் வடிவங்களும் தீவிரமும் அதிகரித்தே செல்கிறது.

எமக்கான பிரச்சினைகளை சரியாக விளங்கி அதற்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டியுள்ளது. எமது தேசத்தின் பல்லினத்துவ, மற்றும் மாறுபட்ட கலாச்சார நடைமுறைகளை புரிந்து கொண்டும் எமது இஸ்லாமிய விழுமியங்களையும் நன்கு உள்வாங்கிக் கொண்டும் சம கால செல்நெறிக்கு ஏற்றவாறு தீர்வுகளை முன்வைக்க வேண்டும். இதற்கு சிறந்த அறிஞர்களின் தலைமைத்துவ வழிகாட்டல் எமக்கு தற்போதைய அதிமுக்கிய தேவையாகும்.

இன்னுமொரு தேசத்தின் தீர்வுகள் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவமான பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்த தீர்வாக அமைய முடியாது.

எனவேதான் நமது நாட்டிற்கு பொருத்தமான அறிவுபூர்வமான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியுள்ளது. இதன் அவசியத்தை ஓரளவாவது புரிந்து கொண்டு சுய நல அரசியல் அபிலாசைகளை ஒதுக்கிவிட்டு சமுகத்தின் பிரச்சினைகளுக்கு ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டியது முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களின் கூட்டுப் பொறுப்பாகும்.

இதற்காக தமது காத்திரமான பங்களிப்புகளை செய்ய முஸ்லிம் அரசியல் தலைமைகள் தயங்காது முன்வர வேண்டியுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலை உருவாகாத வரையில், முஸ்லிம் சமுகம் தனக்கு முன்னால் உள்ள சவால்களுக்கு சரியாக முகம் கொடுக்க முடியாது போகும்.

ஏனெனில் நாம் முகங் கொடுக்கப் போகும் பிரச்சினைகள் பல்வேறு வடிவங்களில் அதிகரித்த தீவிரத்தோடு எம்மை எதிர்நோக்கியிருக்கின்றன என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இத்தகைய போக்கையே அண்மைக்காலமாக நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் எதிர்வு கூறுகின்றன. எமக்கு எதிராக சதி செய்வோர் பிரச்சினைகளை புதிது புதிதாக உருவாக்கி காலத்திற்கு காலம் எமது இயங்கு தளத்தையும் வினைத் திறனையும் பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்கும் பாங்கையும் அவதானித்து அதற்குத் தகுந்தவாறே செயற்பட்டு வருகின்றனர்.

இதனை நாம் சரியாக புரிந்து கொள்ளாது எமது சமுகம் எதிர்நோக்கும் சவால்களை அவ்வப்போது சமாளித்து வருகிறோமே தவிர, அந்த சவால்களுக்கான சரியான தீர்வுகளை அடையாளம் கண்டு அறிவுபூர்வமாக ஒன்றுபட்ட சமுக அமைப்பாக செயற்பட்டு பிரச்சினைகளை எதிர்கொள்ள தொடங்கவில்லை.

அவரவர் சார்ந்துள்ள இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளின் கொள்கை அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தனித்தனி குழுக்களாகவே நாம் குரல் கொடுத்து வருகிறோம். அல்லது எமக்குள் இருக்கும் முரண்பாடான கருத்துகளை முற்படுத்தி மோதிக் கொள்கிறோம். இது எமது பொது எதிரியை இன்னும் பலமுறச் செய்துள்ளது.

எனவே எமது சமுகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வெறும் பௌதீக வளங்களை ஓடோடிச் சென்று வழங்குவதாலும் தற்போதுள்ள தொலைத் தொடர்பு வசதிகளைக் கொண்டு எமது நிலைமையினை உலகறியச் செய்வதாலும் நாம் எமது பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்த்துவிட முடியாது.

இவ்வாறு உணர்ச்சிப் பெருக்குடன் தம்மாலான பங்களிப்பை சமூகத்திலுள்ள பலரும் மிக தீவிரமாக செய்வதூனாடாக எமக்கான தற்காலிக ஆறுதல் கிடைத்தாலும் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் நிரந்தரமான தீர்வுகளை அடைந்து கொள்வதற்காக இன்னும் கடுமையாக திட்டமிட்டு உழைக்க வேண்டியுள்ளது.

முஸ்லிம்கள் மீது வன்முறையினை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள மிகக் குறைந்த அழுத்தமும் அதுமட்டுமல்லாமல் அவர்கள் தமது நகர்வுகளை எந்த தடையும் இன்றி முன்னெடுத்து செல்வதும் இதற்கான தேவைப் பாடுகளை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.

இந்த சவால்களுக்கான சரியான தீர்வு என்ன? அதற்கான பொறிமுறை யாது? அந்த பொறிமுறைகளை அறிவு பூர்வமாக முன்வைப்பவர் யார்? இதனை முன்கொண்டு சென்று சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் செயல்பட வைப்பவர் யார்? இதற்கான சமுக அங்கீகாரத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பதே எமக்கு முன்னாலுள்ள பெரும் சவாலாகும்.

உலகளாவிய ரீதயில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இஸ்லாமிய தீவிர வாதம் அல்லது பயங்கரவாதமென்ற சொற் பதங்களும் அதனைப் பிரச்சாரம் செய்யும் ஊடகங்களின் வீரியமும் அதிகரித்தே வருகின்றன.

ஆனால் முஸ்லிகளை அடித்துத் துவம்சம் செய்து இல்லாதொழிக்கும் சக்திகளை இந்த ஊடகங்களும் சர்வதேச சக்திகளும் கண்டும் காணததுபோல் விட்டு விடுகின்றன அல்லது அந்த அராஜகங்களைப் புரியும் கொடுங்கோலர்களின் பாதுகாப்பு உரிமை என நியாயப் படுத்துகின்றன. இதனை நாம் தொடர்ச்சியாக அவதானித்தே வருகிறோம்.

இதற்கு காசாவில் இடம்பெறும் கொடூரமான மனிதப் படுகொலைகளே தக்க சான்றாகும். ஆனால் இலங்கையில் ஏற்பட்ட பதட்ட நிலைமையின் போது இந்த ஊடகங்கள், அரசுகள் முஸ்லிம் சமுகத்தின் மீது பெரும் அக்கறையோடு செயற்பட்டது போன்ற தோற்றப்பாட்டை நாம் அவதானிக்கக் கிடைத்தது.

இதுவும் இந்த ஊடகங்களின், அரசுகளின் இரகசிய நிகழ்ச்சி நிரலில் உள்ளவைதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களின் இந்த தந்திரோபாயங்களினால் முஸ்லிம் சமுகத்தை உணர்ச்சியூட்டி நமது சகோதர இனங்களுடனான ஐக்கியத்திலிருந்தும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான பங்களிப்பிலிருந்தும் எம்மை தூரப்படுத்தி தேச துரோகிகளாக சித்திரிக்கும் அளவிற்கு எமது செயற்பாடுகளை தூண்டிவிடுவதே இவர்களது உள்நோக்கமாக இருக்க முடியும்.

இவ்வாறன கள நிலவரங்களை வைத்துக் கொண்டு எமது சமுகம் வெறுமனே வாழாவிருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இலங்கையின் பெரும் பான்மை சமுகத்தை விட்டும் தூரமாகி பகைமைப் போக்குடன் எத்தனை காலத்திற்கு இந்த தேசத்தில் நாம் அமைதியாக வாழ முடியும்?

இலங்கையில் முஸ்லிம் சமுகத்திற்காக குரல் கொடுக்கும் எமது அரசியல் தலைவர்களும் இதனை மனதில் வைத்தே செயற்படவேண்டிய தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டிய கடப்பாடு இருக்கிறது, ஏனெனில் எமது அரசியல் தலைவர்களின் கருத்துக்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் தேச துரோக செயல்களாக அடையாளப் படுத்துவதிலும் நாட்டுக்கு வைக்கப் படும் வெடிகுண்டுகளாக சித்திரிப்பதிலும் சில இனவாதத்தைத் தூண்டும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் முனைப்புடன் செயற்படுகின்றன.

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் இராஜதந்திர நடவடிக்கைகளை, வெளிநாட்டு உறவுகளை குறிப்பாக முஸ்லிம் நாடுகளுடனான உறவுகளை திரிபு படுத்தி கருத்துகளை வெளியிட்டு முஸ்லிம்களை இனவாதிகளாக தேசிய உணர்வற்றவர்களாக அடையாளப் படுத்துவதில் மிக தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.

இந்த இனவாதிகள் தமக்கு கிடைக்கும் சிறியதொரு சந்தர்ப்பத்தையும் தவறவிடாமல் இந்த பரப்புரைகளை மேற்கொள்வதை அண்மைக்காலமாக தெளிவாக அவதானிக்க முடிகிறது.

எனவேதான் முஸ்லிம் தலைமைத்துவங்கள் முஸ்லிம் சமுகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கின்றபோது தேசிய நலன்களைப் பாதிக்காத வகையிலும் முஸ்லிம் சமுகத்தின் மீது அக்கறையுடனும் இனவாதத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கும் பெரும்பான்மை இன சகோதரர்கள் எம்மீது சந்தேகம் கொள்ளாத வகையிலும் மிக நுணுக்கமாகவும் இராஜதந்திரமிக்கதாகவும் எமது அரசியல் சமுக செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

தொடரும்…

 


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.