இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்! எப்படி முன் நகர்த்துவது? (பகுதி II)August 7, 2014 10:09 pm

-Dr: I.L. முஹம்மத் றிபாஸ்-
Dr.ILM.Rifaz.இன்னொரு புறத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் உதவியோடு இஸ்லாமிய பிரச்சாரமும் அதன் பரவலும் சகல தரப்பு மக்களுக்குமான தெளிவும் வழங்கப்படுகிறது. இதனூடு இஸ்லாம் தெளிவாக மக்கள் முன்வைக்கப் படுவதால் இஸ்லாமிய அறிவுப் பகிர்வு சகல மட்டத்தினருக்கும் கிடைப்பதற்கான வாய்ப்பு பெருகியுள்ளது. இஸ்லாம் மார்க்கத்தின்  உண்மைத் தன்மையும், அதன் அறிவார்ந்த கருத்துக்களும் மக்களை வெகுவாகக்  கவர்கின்றன. சிந்திக்கக் கூடிய மக்கள் தமக்குள்ள தளைகளை அறுத்தெறிந்து இஸ்லாத்தோடு இணைந்து கொள்வது அதிகரித்து வருகிறது. இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கின்ற  அதனை பின்பற்றி நடக்க முனைகின்ற மக்கள் நாளாந்தம் அதிகரித்தே செல்கின்றனர். இன்னும் இலங்கை முஸ்லிம்களும் தமது இஸ்லாமிய உணர்வினை தமது செயற்பாடுகளிலும் பிரதிபலிக்க முற்படுகின்றனர் குறிப்பாக தமது ஆடை அணிகளிலும் தாடி வளர்ப்பிலும் இதனை வெளிப்படுத்துகின்றனர் இது முஸ்லிம்களின் பிரசன்னத்தை எந்த அவையிலும் பிரிகோடிட்டுக் காட்டுகிறது. மட்டுமல்லாமல் நகரங்கள் சார்ந்தே முஸ்லிம்கள் அதிகம் குடி இருப்பதனால் அதிக அளவான சனத்தொகைப் பெருக்கம் உள்ளது போன்ற தோற்றப்பாடும் வெளித் தெரிகிறது.   
 

ஏனைய சமூகங்கள் என்ன  மனோபாவத்துடன் இந்த மாற்றத்தை அணுகுகின்றனர் என்பதுதான் இங்குள்ள சிக்கலாகும். ஏனெனில் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமிய கடும்போக்கு சிந்தனை எனும் பெயர்களில் அவர்களுக்கு உணர்த்தப் பட்டுள்ள கருத்தியலும் சர்வதேச கள நிலவரங்களும் அவர்களை அச்சப்படச்  செய்துள்ளன, மறுபுறத்தில் முஸ்லிம் சமுகம் தமக்குள்ளே குறுக்கிக் கொண்டுள்ள சமூகக் கட்டமைப்பும்  மாற்று மத சமூகத்தோடு  தெளிவான பிரி கோட்டுடன் உறவாடும் மநோபாவமும் முஸ்லிம்களைப் பற்றிய, அவர்களின் உன்னத மார்க்க விழுமியங்கள் பற்றிய புரிதலை அந்த மக்களுக்கு வழங்க தவறியுள்ளது. வெறும் வைபவ ரீதியான உறவாடலைத் தவிர பரஸ்பர புரிந்துணர்வையும் இஸ்லாமிய பண்பாட்டு மகத்துவத்தையும்  சகல தரப்பு சமூகக் கட்டமைப்பிற்குள்ளும் ஊடுபரவ வழி வகுக்கப்படவில்லை. மேலும்  இஸ்லாமிய போதனைகளின் உன்னதத் தன்மயினையும் அது மனித வாழ்வை நெறிப்படுத்தி வளப்படுத்தியுள்ள அழகையும் புரியக் கூடிய முறையில்  திட்டமிட்ட  பிரச்சார முறைமையூடாக  பெரும்பான்மை சமுகத்திற்கு முன்வைக்கத் நாம் தவறியுள்ளோம். இதற்கான காத்திரமான பிரச்சார ஒழுங்கும் எங்களிடம் கிடையாது.  மாற்று மத சகோதரர் இஸ்லாமிய சிந்தனையினை எவ்வாறு புரிந்து கொண்டுள்ளர் என்பதனை அவர்கள் எம்மிடம் கேட்கும் வழமையான கேள்விகளூடாகவே புரிந்து கொள்ள முடியும். இன்றும் முஸ்லிம் ஆண்கள் ஏழு திருமனங்கள் முடிக்க முடியுமாமே? என்று கேட்பவர்கள்தான் அதிகம் உள்ளனர் என்பது இதற்கு தற்க சான்றாகும்.

எனவே எமது மார்கத்தையும் எமது கலாசார விழுமியங்களையும் பெரும் பான்மை சமுகத்திற்கு அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் முன்வைப்பதும் அதற்கான பொறிமுறைகளை உருவாக்குவதும் மிக அவசியமாகவுள்ளது. இதனை குறிப்பிட்ட ஒருசாரார் மட்டும் முன்னெடுக்க முடியாது, மட்டுமல்லாமல்  மிகச் சரியாகவும் தெளிவாகவும் இதனை நாம் முன்வைக்க வேண்டும். இல்லையேல் அதுவும் கூட எமது மார்கத்தை பரப்புவதாக எமக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவேதான் சிறந்த அறிஞர்களும் சமுக தலைவர்களும் கல்லூரிகள் மற்றும்  பல்கலைக் கழகங்களிலுள்ள அறிவு ஜீவிகளும் இதற்கான காத்திரமான பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும். இவர்களின்  பங்களிப்புகளை உள்ளடக்கியதாக இஸ்லாமிய கருத்தியலை எமது தேசத்தின் மனோபாவத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு முன்வைப்பது என்பதற்கு ஆய்வு ஆதரங்கள் அடங்கிய சிந்தனை முன்வைக்கப் பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இஸ்லாமிய சிந்தனையினை  இந்நாட்டின் ஏனைய சமூகத்தினருக்கு முன்வைக்க முற்படும் போது   நமது சமூகத்துக்குள் இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக தற்போது நாம் கடைப்பிடித்து வரும் அதே ஒழுங்கிலேயே பிரச்சாரம் செய்ய முற்படுவோமாயின் அது நாம் எதிர்பார்கின்ற பிரதிபலன்களுக்கு நேர் எதிரான விளைவுகளையே தொற்றுவிக்கும். எனவே தற்போதைய கால சூழலை சரியாக புரிந்து கொண்டு ஏனைய சமுகத்தின் எம்மீதான பார்வையினையும் சந்தேகங்களையும் பற்றிய தெளிவோடுதான் முஸ்லிம் சமுகத்தின் தன்னிலை விளக்கத்தையும் இஸ்லாமிய விழுமியங்களின் தாற்பரியத்தையும் முன்வைக்க வேண்டும். அத்தோடு தேசிய முக்கியத்துவமுள்ள விடயங்களிலும் கல்வி சுகாதாரம் மற்றும் பரவலாக அனுஸ்டிக்கப்படும் சிறப்பு தின நிகழ்வுகள் போன்ற விடயங்களில் முஸ்லிம் சமுகத்தின் சமய, அரசியல் மற்றும் கல்விசார் விடயங்களில்   தலைமைத்துவங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவோர்  வெறுமனே பார்வையாளர்களாகவோ அல்லது விருந்தினராகவோ மாத்திரம் பங்குகொள்வதைத் தவிர்த்து முஸ்லிம் சமுகத்தினை  மற்றும் இஸ்லாமிய விழுமியங்களை சரியாக பிரதி பலிக்கக் கூடிய வகையில் தமது பங்களிப்பினை வழங்க வேண்டும். 

முஸ்லிம் சமுகம் தேசிய முக்கியத்துவம்மிக்க விடயங்களில் ஒதுங்கி இருக்கும் சுயநலமிக்க  ஒரு சமூகம் போன்றே  பார்க்கப் படுகிறது. இதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கின்றோம் ஏனெனில் நமது சமுகம் இதுவரை இந்த தேசத்திற்கு வழங்கியுள்ள காத்திரமான எந்த பங்களிப்புகளையும் சரியாக ஆவன்ப்படுத்தவோ பிரச்சாரப் படுத்தவோ தவறியுள்ளோம். உதாரணமாக பயங்கரவாதத் திற்கு எதிரான போரில் இந்த நாட்டின் இராணுவத்தில் இணைந்து போராடி உயிர் நீத்த முஸ்லிம் வீரர்களின் பெயர்ப் பட்டியலோ அல்லது ஞாபகச் சுவடுகளோ எதுவும் கிடையாது. இதனால் இந்த உயிர்த்தியாகிகளின் வரலாறு  பெரும்பான்மை சமூகத்திடம் சரியாக முன்வைக்கப் படாததனால் இந்நாட்டின் விடுதலையில் சமாதானத்தை நிலை நாட்டுவதில் நாம் வழங்கிய பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப் பட்டுவருகிறது. 

இலங்கை பொலிஸ் வரலாற்றில் நூறு வருடங்களுக்கு முன்னால் முதன் முதலாக உயிர்த்தியாகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் துவான் தொடக்கம்  எண்பத்து மூன்றாம் ஆண்டு இனப் பிரச்சினையின் தொடக்கப் புள்ளியாக வைக்கப் பட்ட கன்னி வெடியில் தனது இன்னுயிரை இந்த தேசத்திர்காக ஈர்ந்தளித்த முதல் தியாகி கண்டியைச் சேர்ந்த கெப்டன் முஹம்மது அலி தொடங்கி ஆழ ஊடுருவும் படையில் உயிர் நீத்த கேணல் லாபிர், புலனாய்வுப் படையில் படைத்துறை சார்ந்தவர்களின் சதியில் உயிர்நீத்த முத்தலிப் வரை  இந்ததேசத்தில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக  முஸ்லிம் சமுகம் செய்த  பல நூறு உயிர்த் தியாகங்கள்  எந்த கணக்கிலும் வரவில்லை. 

கல்விசார் விடயங்களிலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் முஸ்லிம் சமுகத்தின் பங்களிப்புகள்  மறக்கடிக்கப் பட்டுள்ளதோடு முஸ்லிம் சமுகத்தின் அடைவுகள் தேசிய முன்னேற்றத்தின் பங்களிப்புகளாக அல்லாமல் தனியே முஸ்லிம் மக்களின் அடைவுகளாகவே சித்திரிக்கப் படுகிறது.இது எமது சமுகத்தை வந்தான்வரத்தான் போலவும் இங்கிருந்து பொருளாதாரத்தை சூறையாடி வேறு தேசங்களுக்கு எடுத்துச் செல்வது போலவும்தான் பெரும்பான்மை சமுகத்திற்கு உணர்த்தப் பட்டுள்ளது. அவ்வாறல்லாமல் முஸ்லிம் சமுகத்தின் கடின உழைப்பும் புது முயற்சிகளும் இந்த தேசத்தின் பொருளாதாரத்தையே உறுதிப்படுத்துகின்றது என்பதை நாம் பெரும்பான்மை சமுகத்திற்கு சாதுரியமாக புரியவைக்க  வேண்டும்.  எனவேதான் எம்முடையதுமான இந்த பூர்வீக தேசத்தில் முஸ்லிம் சமுகம் தேசிய ரீதியாக ஆற்றிய பங்களிப்புகளை சரியாக அடையாளம் கண்டு  முன்வைப்பதோடு எதிர்காலத்திலும் இவ்வாறன பங்களிப்புகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது எனவும் திட்டமிட்டு  செயற்படுத்த வேண்டியுள்ளது  

இதற்கான களத்தினை ஏற்படுத்திக்  கொடுக்க வேண்டியது இஸ்லாமிய இயக்கங்களதும் சிவில் அமைப்புகளினதும் பொறுப்பாகும். இந்த நிறுவகங்கள் தமது  இயங்கு தளத்தில் மாத்திரம் நின்றுகொண்டு தமது  செயற்திட்டங்களை மாத்திரம் நடைமுறைப் படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல் கூட்டாக ஒத்து இயங்கவேண்டிய தளத்தில் ஒற்றுமையோடும் தூர நோக்கோடும் இயங்கியாக வேண்டும்.  எமது கருத்து ரீதியான முரண்பாடுகளை பெரிது படுத்தி சமுகம் பிளவு பட்டிருப்பதாக காட்டுவது எம்மை திட்டமிட்டு நசுக்க எத்தனிக்கும் சக்திகளை மேலும்  பலப் படுத்தும். அவ்வாறான சக்திகள் எம்மை குறி வைகின்றபோது எமது எந்த வேறு பாடுகளையும் கருத்தில் கொள்ளாது முஸ்லிம் என்ற ஒரே அடையாளத்திற்காக எம்மை ஓரினமாகவே  பலிகொள்ளும் என்பதனை யாரும் மறந்துவிடக் கூடாது.  


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.