உயர்தர பரீட்சை பெறுபேறுகளும் உயர்கல்வியும்..January 9, 2016 11:38 pm

(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)

2015 ஆம் ஆண்டு 309,069 பரீட்சார்த்திகள் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றினார்கள், 236,072 பாடசாலை மாணவர்களும் 72,997 பிரத்தியேக பரீட்சார்த்திகளும் பரிட்சை எழுதினர். நேற்று Untitledஅவர்களது பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

மிகச்சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களை ,சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்கள், சித்தியடைந்தவர்கள் என சகலருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, இன்ஷா அல்லாஹ் உங்களது எதிர்கால உயர்கல்வி வாழ்வு எல்லா வகையிலும் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன்.

சித்தியடைகின்ற இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் சுமார் 25,000 மாணவர்களுக்கே பல்கலைக் கழகங்களில் இடம் இருக்கின்றது அதற்கேற்பவே புள்ளிகள் வழங்கப்படுகின்றன, குறிப்பிட்ட ஒரு துறைக்கு குறைவாக புள்ளிகளை பெறத் தவறியவர்கள் அந்த துறைக்கு தகுதியற்றவர்கள் என்பது அர்த்தமல்ல. அவர்கள் கவலை கொள்ளவோ விரக்தியடையவோ அவசியமில்லை.

சாதாரண தரத்தில் சிறப்பாக தேறிய பலர் உயர்தரத்தில் பலகலைக் கழகங்களிற்கு குறிப்பாக தாம் விரும்பிய துறையில் கற்பதற்கு போதிய புள்ளிகளை பெற்றிராது விட்டிருக்கலாம், இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒருமுறை முயற்சித்துப் பார்ப்போம், அல்லது இதுவரை நாம் ஆர்வம் காட்டத வேறேதேனும் துறைகளில் உயர்கல்வியை தொடர்வதற்குரிய சந்தர்ப்பங்களை அறிந்து எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்வோம்.

அந்த வகையில் பல்கலைக் கழக மாணவர் அமைப்புக்கள் நாடளாவிய ரீதியில் இளம் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் செயலமர்வுகளை நடத்துவதும், பாடசாலைகள், சமூக நலஅமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சமூகத்தினர், ஊர்ஜமாத்துக்கள் அதற்கான வளங்களை, வசதிகளை பெற்றுக் கொடுப்பதுவும் மிகப்பெரிய தர்மமாக இருக்கும்.

இலங்கையில் சுமார் 15 பல்கலைக் கழகங்கள், அவற்றிலும் பல்வேறு துறைகள், துறை சார்ந்த வெவ்வேறு கற்கைகள் , 18 கல்விக் கல்லூரிகள், 9 தொழில் நுட்பவியல் கல்லூரிகள், 29 தொழில் நுட்பக் கல்லூரிகள், 116 தொழிற்பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் 10 இணைய கல்வி மையங்கள் இருக்கின்றன....

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குப் பின்னர், உயர் தரமென்றும் அதன் பிறகு பல் கலைக்கழக மென்றும் அதிலும் குறிப்பாக விஞ்ஞானம், பொறியியல் , வர்த்தகம் (பெரும்பாலும்) கலைத்துறை என்றும் தான் பெரும் பாலான முஸ்லிம் மாணவர்கள் மாத்திரமல்லாது பாட சாலை அதிபர்களும் ஆசிரியர்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

உயர் கல்வியைத் தொடர முடியாது போகின்ற சமூகத்தில் ஒரு பகுதியினருக்காவது மூன்றாம் நிலைக் கல்வி, தொழில் நுட்ப மற்றும் வாழ்வாதாரத் தொழிற்கல்வி பயிற்சி நெறிகளை வழங்க இலங்கையில் பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன; இத்தகைய பல்வேறு நிறுவனங்கள் தற்போதைய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன் விருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

மூன்றாம்நிலை வாழ்க்கைத்தொழிற் கல்வி ஆணைக்குழு (TVEC) - www.tvec.gov.lk

மூன்றாம்நிலை வாழ்க்கைத்தொழிற் கல்வி ஆணைக்குழுவானது 1990 ம் ஆண்டின் 20 ஆம் இலக்க மூன்றாம்நிலை வாழ்க்கைத்தொழிற் கல்வி சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது. தொழில்நுட்ப, வாழ்க்கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சித் துறையின் அதியுயர் அமைப்பாகிய இந்நிறுவனம், சமூக மற்றும் பொருளாதார இலக்குகள், மாற்றப்படுகின்ற சந்தைத் தேவைகளுடன் தொடர்புபட்ட பயனுறுதியும் வினைத்திறனும் வாய்க்கப்பெற்ற முறைமையை தாபித்தும் அதனைப் பேணியும் வருகின்றது.

தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் (DTET) - www.techedu.gov.lk

1893 ஆம் ஆண்டு மரதானையில் 'தொழில்நுட்பப் பாடசாலை' தொடங்கியதிலிருந்து ஆரம்பித்த தொழில்நுட்பக் கல்வி 116 ஆண்டு வரலாற்றை உடையது. அதன் முன்னோடியான தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களமானது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 38 தொழில்நுட்பக் கல்லூரிகளின் மூலம் தற்கால உலகிற்குத் தேவைப்படும் தொழில்நுட்பவியல் அறிவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடாத்துதல் மற்றும் அது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளல் தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தின் பொறுப்பாகும்.

வாழ்க்கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (VTA) - www.vtasl.gov.lk

தேசிய வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனங்களையும் 22 மாவட்ட வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிலையங்களையும் 238 கிராமிய வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிலையங்களையும் உள்ளடக்கிய இலங்கை வாழ்க்கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையானது 1995 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க இலங்கை வாழ்க்கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை சட்டத்தின் கீழ் திறன் பயிற்சிகளை கிராமிய இளைஞர்களுக்கு வழங்குவதற்காக தாபிக்கப்பட்டது.

வாழ்க்கைத்தொழில் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் (UNIVOTEC)

வாழ்க்கைத்தொழில் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் (UNIVOTEC) ஆனது வாழ்க்கைத்தொழில் தொழிநுட்பப் பயிற்சி அமைச்சின் கீழ் NITESL வளாகத்தினுள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி மற்றும் வாழ்க்கைத்தொழில் பயிற்சி துறையில், பல்கலைக்கழக கல்வியில் மாணவர்களின் ஆர்வம் மற்றும் ஆற்றலைப் பொறுத்து ஓர் மேல்நோக்கிய பாதையினை வழங்குவதே UNIVOTEC இன் பொதுவான நோக்கமாகும்.

தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) - www.naita.slt.lk

1971 ன் 49ம் இலக்க தேசிய தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி சபையாக தாபிக்கப்பட்ட இத் தாபனம், 1990ன் 20ஆம் இலக்க மூன்றாம் நிலை மற்றும் வாழ்க்கைத்தொழில் கல்வி சட்டத்தின் கீழ், தொழிற்பாடு மற்றும் பொறுப்புகளின் விரிந்த நோக்கெல்லையுடன் தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையாக மாற்றம் பெற்றது.

தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் (NIBM) - www.nibm.lk

1968 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் (NIBM) பின்னர் 1976ம் ஆண்டு பாராளுமன்ற சட்டவாக்கம் இல. 23 இதன்படி கூட்டிணைக்கப்பட்டது. இது தற்போது இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் அதிகார வரம்பினுள் சட்ட பூர்வ நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்துவதற்காக அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கணணி உபயோகம், ஆலோசனை சேவை மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாடு போன்ற பயிற்சி நெறிகளை வழங்குகின்றது.

வரையறுக்கப்பட்ட திறன் அபிவிருத்தி நிதியம் (SDFL)

1999ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட திறன் அபிவிருத்தி நிதியம் தொழில் வழங்குனர்களுக்கு அவசியமான மனித வளத்தினை அபிவிருத்தி செய்வதில் ஈடுபடும் அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் ஒன்றிணைக்கப்பட்ட வியாபாரமாகும். இது சுய நிதியீட்டத்தினை மேற்கொள்ளும் பணிப்பாளர் சபையினால் பரிபாலிக்கப்படும் நிறுவனமாகும்.

இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் - www.cgtti.slt.lk

மோட்டார் வாகன மற்றும் ஏனைய தொழில்நுட்ப துறைகளுக்கு அவசியமான தொழில்நுட்பம் தொடர்பில் சிறிய அபிவிருத்தியினை மேற்கொள்வது இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் முக்கியமான நோக்கமாகும். மேலும் மோட்டார் வாகன பயிற்சித் துறையில் மாணவர்களுக்கு உயரிய அங்கீகாரத்துடன் கூடிய பயிற்சிகளை வழங்குவதில் உயர் தரத்தினை பராமர்pக்கும் மேன்மையான நிறுவனமாக இலங்கையில் காணப்படுகின்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் - www.srilankayouth.lk

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், 1979ம் ஆண்டு சட்டமூலம் இல 69 மூலம் உருவாக்கப்பட்டது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தொழில்நுட்ப திறன்கள், தலைமைத்துவ பண்புகள், தொண்டர் சேவைகள், என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்காக இளைஞர்களை இலக்காகக் கொண்டு படைப்பாற்றல், சௌந்தரியம், கலை ஆகிய துறைகளில் பல்வேறுப்பட்ட செயற்றிட்டங்களையும், நிகழ்ச்சித்திட்டங்களையும் வருடாந்தம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

தேசிய இளைஞர் படையணி

தேசிய இளைஞர் படையணியானது 2003 ம் ஆண்டு பாராளுமன்ற சட்ட மூலம் இல 21 2002 மூலம் உருவாக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் 36 பிரதேச பயிற்சி நிலையங்களை இது கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் கீழ் இளைஞர்கள் சுய அபிவிருத்தி தொழில் வழிகாட்டல், தேசிய உரிமை, அழகியற் திறமை அபிவிருத்தி மற்றும் தொழில்சார் தொழில்நுட்ப பயிற்சி போன்ற பாடநெறிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

தேசிய இளைஞர் பரிசளிப்பு அதிகாரசபை (NYAA)

தேசிய இளைஞர் பரிசளிப்பு அதிகார சபையானது இளைஞர்களின் மனோபாவத்தினை பரந்துபட்ட அளவில் அறிவு மற்றும் திறன் என்பவற்றில் அதிகரிப்பதற்கான பங்களிப்பினை மேற்கொள்கிறது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கங்களை இளைஞர்களுக்கு வழங்குவதன் மூலம் இளைஞர் அபிவிருத்திக்கான உள்ளார்ந்த அனுபவத்தினை விருத்தி செய்யும் சந்தர்ப்பத்தினை வழங்குவது NYAA யின் முக்கிய செயற்பாடாக காணப்படுகின்றது. NYAA இன் நிகழ்ச்சிகள் 240 பாடசாலைகளில் பரந்து காணப்படுகின்றது.

தேசிய மனிதவள அபிவிருத்திச்சபை (NHRDC) - www.nhrdc.lk

இந்நாட்டின் மனிதவளத்தை மேம்படுத்துவதற்கு தேவையான மனிதவள அபிவிருத்திக் கொள்கைகளை உருவாக்குவதும் விருத்தி செய்வதுமே இவ்வமைப்பின் முக்கிய நோக்கமாகும். மனிதவள அபிவிருத்தித் திட்டத்தை அமுல்படுத்துவதும் மனிதவள அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட கற்கை, ஆய்வு மற்றும் அளவீடுகளை மேற்கொள்வதும் கருத்தரங்குகள் பயிற்சிப்பட்டறைகளை நடாத்துவதும் அவர்களின் நோக்கை அடைவதற்காக செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆகும்.

வரையறுக்கப்பட்ட இளைஞர் சேவைகள் நிறுவனம்.

இந் நிறுவனத்தின் பிரதான நோக்கம் தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்குதலாகும்.

கிராமிய தலைவர்களைப் பயிற்றும் சர்வதேச பயிற்சி மத்திய நிலையம் (ICTRL)

கிராமிய தலைவர்களை பயிற்றும் சர்வதேச பயிற்சி மத்திய நிலையம் ஆனது சமூகத்தினை மையமாகக் கொண்ட அபிவிருத்தி நிகழ்ச்சிகளின் கீழ் முகவர் பயிற்சி, முயற்சியாண்மை பயிற்சி மற்றும் கிராமிய தலைவர்கள் பயிற்சி என்பவற்றை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது.

இலங்கை அச்சிடுதல் நிறுவனம்

அச்சிடல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் என்பவற்றில் ஊழியர் பங்குபற்றலுடனான பயிற்சி மூலம் அச்சிடல் தொழிற்துறையின் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கை அச்சிடுதல் நிறுவனம் உருவாக்கப்பட்டது. மேலும் சர்வதேச ஒத்துழைப்புடன் புதிய தொழில்நுட்பம் மற்றும் அறிவினை சம்பாதித்துக் கொள்வதும் இதன் நோக்கமாகும்.

கடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் தேசிய நிறுவகம் (சமுத்திர பல்கலைக்கழகம்)

1999ம் ஆண்டு 39ம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட கடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் தேசிய நிறுவகம் இலங்கையில் மீன்பிடி மற்றும் தொடர்புடைய துறைகளை உள்ளடக்கும் பிரதான கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமாகும். இந் நிறுவனத்தின் மூலம் நடமாடும், பல பயிற்சி மற்றும் டிப்ளோமா பாநெறிகளும் மூன்று பட்ட பாடநெறிகளும் நடாத்தப்படும்.

வரையறுக்கப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கம் (NYSCO)

தொழில் முயற்சி பயிற்சி வழங்குதல், சுயதொழில் வாய்ப்புக்காக கடனுதவி மற்றும் வழிகாட்டல் செய்தல், இலகு வங்கி முறைமூலம் கடன் வசதிகளைப் பெறுவதற்கு வழிநடாத்துதல் போன்ற செயற்பாடுகள் மூலம் இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக்குவதற்கு இந்நிறுவனம் உதவி செய்கிறது.

இளைஞர் தொழிலாக்கல் வலையமைப்பு (YEN)

இளைஞர் தொழிலாக்கல் வலையமைப்பானது ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச தொழிலாளர் அமையம் மற்றும் உலக வங்கி ஆகிய அமைப்புக்களுடன் ஏனைய தொடர்புடைய சர்வதேச நிபுணத்துவ முகவர் நிறுவனங்களின் கூட்டிணைப்பினால் உருவாக்கப்பட்டது. இளைஞர் தொழிலின்மை சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு அரசிற்கு உதவிகளை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.