சமூக வலைத்தளப் பாவனை பற்றிய அவதானக் குறிப்பு!October 12, 2015 9:23 am

ரா..அரூஸ்-

Aroozஒரு நிகழ்வு அல்லது நபர் பற்றிய எண்ணம்> அபிப்பிராயம் மற்றும் மதிப்பீடு ஆகியவைகளைத்தான் கருத்து என்கிறோம். ஒருவர் பற்றி எந்தவிதமான கருத்தையும் மனதில் கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு. அதே நேரம் அக்கருத்தை பகிர்ந்துகொள்வதிலும் வெளிப்படுத்துவதிலும் சில வரையறைகள் உண்டு. இது விடயத்தில் சமயங்களும் அழகான வழிகாட்டல்களைத் தருகின்றன. அதிக வறுமை மனித வாழ்வில் எப்படி ஒருத்தனைத் தவறு செய்யத் தூண்டுகின்றதோ அதுபோலவே அதிக வசதி வாய்ப்புக்களும் மனிதனைத் தவறு செய்யவே பெரும்பாலும் தூண்டுவதனை வாழ்வியல் எமக்குக் காட்டித்தருகின்றன. அவ்வாறான தொழிநுட்ப வசதி வாய்ப்புக்கள் இன்று எம்மை பெரும்பாலும் தவறுகளின் பால் அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றன. நாமும் அதன் பின்னே சிந்தனையின்றி ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

இன்று எம்மனைவரையும் பீடித்திருக்கும் முகப்புத்தகப் (Facebook) பாவனையானது பெரும்பாலான தீய செயல்களுக்கே இட்டுச்செல்வதனைப் பரவலாக அவதானிக்க முடிகிறது.

01. ஒருத்தரது அந்தரங்கத்தை அம்பலப்படுத்தல், இதனால் தற்கொலை செய்தல் மற்றும் பாரிய குடும்ப, சமூகப் பிரச்சினை

02. முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப் போவதாகப் பயமுறுத்தி பாலியல் இலஞ்சம் கோரல்

03. ஒருத்தரது குறைகளை உலகறியச் செய்தல்

04. ஒருத்தரை அவதூறு பேசுதல்

05. தகாத வார்த்தைகளால் விவாதங்களில் ஈடுபடுதல்

என இன்று முகப்புத்தகத்தால் அரங்கேற்றப்படும் மிலேசத் தனங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படுபவர்கள் ஆத்திரம் கொண்டு கொலை செய்யும் அளவுக்குச் செல்கின்ற நிலைமைகள் கூட இன்று தளையெடுக்கத் தொடங்கியிருக்கின்றன.

அதிலும் விசேடமாக இன்று முகப்புத்தகங்களில் உலாவும் பல்லாயிரக் கணக்கான போலிக் கணக்குகள் (Fake Accounts) பல்வேறு தீய விளைவுகளை சமூகத்தில் விதைத்துக்கொண்டிருக்கின்றன. தடியெடுத்தவனெல்லாம் தூண்டில்காரனாகிவிட்ட நிலை நிரம்பி வழிகின்றன. சாதாரணமாக நேரடியாக அநீதிகளைக் கண்டு தட்டிக்கேட்க வக்கின்றிப் பயந்தோடும் அனேகர் இன்று முகப்புத்தகத்தில் போலி எக்கவுன்ட்களை உருவாக்கி திரைமறைவிலிருந்து வரம்பு தாண்டிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் தம்மை சமூக ஆர்வலர்கள் என்றும் உண்மையை உலகறியச் செய்யும் உத்தமர்கள் என்றும் தமக்குள்ளேயே நினைத்தும் கிடக்கிறார்கள்.

சரியான எந்த விடமாக இருந்தாலும் அவை ஒருபோதும் குறுக்கு வழிகளால் அடையப்படக் கூடாது. அவ்வாறானால் அதன் விளைவுகள் ஆக்கபூர்வமானதாக இருக்காது.

எதிர்ப்பதானாலும் சரி ஆதரிப்பதானாலும் சரி> எல்லாவற்றுக்கும் வழி முறைகளிருக்கின்றன. அவைகளினூடாகத்தான் அவை அடையப்படவேண்டும். அவ்வாறில்லையாயின் சமூக ஒழுங்குகளும் மானுட மாண்புகளும் சிதைந்து விடும். உலக அமைதி அலைக்கழிக்கப்பட்டுவிடும்.

நான் இந்தப் பதிவை எழுதுவதற்கான காரணம்> இந்தப் போலி முகங்கள் திருந்த வேண்டும் என்பதற்காக அல்ல. ஏனெனில் தாம் செய்வது தவறு என்பதை அடிப்படையிலேயே அவர்கள் தம் மனச்சாட்சியினால் அறிந்திருப்பதனால்த்தான் ஒளிந்திருந்து வேறு பெயர்களில் போலியாக இயங்குகிறார்கள். எனவே இவர்கள் தெரிந்துகொண்டே தவறு செய்பவர்கள். ஆக> அவர்களில் மாற்றத்தை அவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்க முடியாது, இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடினாலன்றி!

இவ்வாறான போலிகளை நாம் இனங்கண்டு அவ்வாறானவர்களை நிராகரிப்பதே எமது சமூக ஒழுங்கிற்காய் நாம் ஆற்றுகின்ற பாரிய பங்களிப்பாக இருக்கும். அவ்வாறில்லாமல் இவ்வாறான போலிகளை நாமும் எமது முகப்புத்தகத்தில் இணைத்துக்கொள்வதானது அவர்களது தவறுகளுக்குத் துணை போவதாகும். நாமும் மறுமையில் இறைவனிடத்தில் இதற்காய் விசாரிக்கப்படலாம். எனவே எமது முகப்புத்தகத்தில் நண்பர்களை இணைத்துக்கொள்ளும் போது பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்வதன் மூலம் மேலே நான் சொன்ன தவறுகளுக்கு நாம் நம்மையறியாமலேயே துணை போவதிலிருந்து தவிர்ந்துகொள்ளலாம்.

01. ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ தமது சொந்தப் பெயரிலன்றி பொய்யான பெயர்களுடனும் பொய்யான புகைப்படத்துடனும் முகப்புத்தகத்தில் இயங்கினால் அவ்வாறானவர்களை எமது நண்பர் பட்டியலிலிருந்து நீக்கிவிடுதல் அல்லது இணைத்துக்கொள்ளாமலிருத்தல்.

02. ஒருவரை நண்பர் பட்டியலில் இணைப்பதற்கு முன்னர் அவரது முகப்புத்தகத்தை சற்று ஆராய்ந்து முடிவெடுத்தல். உதாரணமாக அவர் தன்னைப் பற்றி வழங்கியிருக்கும் தகவல்கள் (பெயர்> முகவரி> கல்வி> தொழில் போன்றவைகள்) என்பதை சற்று ஆராய்ந்து அவை பற்றிய உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தல்.

03. ஒருவர் எவ்வாறான பதிவுகளைக் கடந்த காலங்களில் இட்டுள்ளார் என்பதை நன்கு ஆராய்தல்.

04. குறித்த முகப்புத்தகம் நல்ல விடயங்களைப் பேசுவதான உணர்வு உங்களுக்கு வந்தாலும் அவர்கள் பொய்யான பெயரில் ஒளிந்திருந்து பேசுவார்களேயாயின் நாம் அதனை நிச்சயம் நிராகரிக்கவேண்டும். ஏனெனில் உண்மை ஒரு போதும் ஒளிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை.

05. ஒருவர் எவ்வாறான பின்னூட்டங்களை வழங்குகிறார் என்பதில் கூடுதல் கவனம் தேவை. அநாகரிகமான வசனங்கள்> புகைப்படங்கள்> விவாதங்கள்> தனிநபர் மீதான தாக்குதல்கள் என்பவற்றுக்காய் முகப் புத்தகத்தைப் பயன்படுத்துபவராயின் உடனடியாக அத்தகையோரை உங்கள் நண்பர் பட்டியலிலிருந்து நீக்கிவிடுவது அல்லது இணைத்துக் கொள்ளாமலிருப்பது நல்லது.

06. சமூக வலைத்தளம் என்பது மிகவும் சமூகப் பொறுப்புடன் கையாளப்படல் வேண்டும். இத்தகைய சமூகப் பொறுப்பு அவரது பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் தென்படுகின்றதா என்பதனையும் கூர்ந்து அவதானிக்க வேண்டும்.

மேற்படி விடயங்களில் கரிசணை செலுத்தி நாம் எமது சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்துவோமானால் இந்தத் தொழிநுட்ப வளர்ச்சியை எமது சமூகக் கட்டமைப்பிற்கும் மானுட  மாண்புக்கும் பங்கமின்றி யாவருக்கும் நன்மையளிக்கும் விதமாய் மாற்றியமைக்கலாம்> இன்சா அல்லாஹ்!


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.