சர்வதேச மற்றும் உள்ளக பொறிமுறையில் முஸ்லிம்களது விவகாரம் முறையாக உள்வாங்கப்படல் வேண்டும்September 29, 2015 10:51 am

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

Inamஇந்த நாட்டின் நிலையான சமாதானமும், ஸ்திரப்பாடும், அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை போருக்குப் பின்னரான இலங்கையில் அர்த்தமுள்ள விதத்தில் கட்டி எழுப்புவதிலேயே தங்கியுள்ளது என அண்மையில் இராணுவ வெற்றி குறித்த ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்தினார்.

உண்மையில் கடந்த மூன்று தசாப்த கால இனப்பிரச்சினை வரலாற்றில் பாதிப்புக்குள்ளான சகல சமூகங்களுக்கும் உரிய நீதியை நியாயத்தை பெற்றுக் கொடுப்பதிலேயே யதார்த்தபூர்வமான இன நல்லிணக்கமும் சமாதான சகவாழ்வும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

LLRC கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் முதல் 2009 யுத்த நிறைவு வரை இடம் பெற்ற விவகாரங்கள் குறித்தே ஆராய்ந்து சிபாரிசுகளை முன்மொழிந்துள்ளது.

குறிப்பிட்ட ஆணைக்குழுவில் கூட முஸ்லிம் சமூகம் சார்பாக முறையான சாட்சியங்களைமுன்வைக்கவோ அல்லது அது முஸ்லிம்களது விவகாரங்களை உள்வாங்க போதுமானதல்ல என்பதனை வலியுறுத்தவோ எந்தவொரு முஸ்லிம் கட்சிக் காரரும் முன்வரவுமில்லை, சரவதேச அரங்கில் சமர்ப்பிக்கத் தராதரம் கொண்ட எத்தகைய ஆவணங்களை தயாரிக்கவோ, தரவுகளை திரட்டவோ இல்லை.

குறிப்பாக மாவில் ஆற்றில் (2006) யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டு வெள்ளை முள்ளி வாய்க்காலில் (2009) முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து LLRC அதிவிஷேட கவனம் செலுத்துகின்றது.

தமிழர்கள் விடயத்தில் பாரிய அளவில் சர்வதேச அழுத்தங்கள் இருப்பதனால் சிபாரிசுகளை அமுல் நடத்துவதிலும் குறிப்பாக மீள்குடியேற்றம், மீள் கட்டமைப்பு, புனர்வாழ்வு, புனர் நிர்மாணம், இன நல்லிணக்கம், காணிகளை மீட்டுக்கொடுத்தல், வீடுகளை கட்டிக் கொடுத்தல், உள்கட்டமைப்பு அபிவிருத்தி என பல்வேறு கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது.

வட கிழக்கு வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 கைச்சாத்திடப்பட்டது முதல்2009 யுத்தம் நிறைவுறும் வரையும் குறிப்பாக 2002 மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் கைச்சத்தப் படுகின்ற வரையும் பாரிய உயிர் உடமை காணி இழப்புக்களை சந்தித்ததோடு ஒட்டு மொத்த வடபுல முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டனர், வட கிழக்கு எங்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வடபுல முஸ்லிம்களின் காணிகள் விடுதலைப் புலிகளால் தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் முஸ்லிம்களது பூர்வீக் காணிகள் வன பாதுகாப்பு அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன, மறிச்சிக்கட்டி வில்பத்து விவகாரம் இதற்கு சிறந்த உதாரணமாகும். கிழக்கில்புல்மோட்டை முதல் பொத்துவில், தீகவாபிய வரை முஸ்லிம்களது காணிகள் பறிக்கப்பட்டுள்ளன.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மூன்று தசாப்தகாலமாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களது விவகாரங்களை ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிந்து நிவாரணம் வழங்குகின்ற தேசிய மற்றும் சர்வதேச கடப்பாடுகளையுடைய ஆணைக்குழு ஒன்றை 1987-2009 வரையிலான காலப்பகுதியை மையப்படுத்தி அமைக்க தவறியுள்ளன.

அவ்வாறான ஒரு ஆணைக்குழுவை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினதும், ஜனாதிபதிகளினதும்தீர்மானிக்கும் சக்தியாக இருந்த தனித்துவ முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இன்று வரை கோரி நிற்கவுமில்லை,போராட்ட அரசியலை சூதாட்ட அரசியலாக மாற்றி ஈற்றில் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற சரணாகதி அரசியலாக மாற்றிவிடும் கையாளாகா அரசியலையே பலரும் செய்து வருகின்றனர்.

அமெரிக்க மற்றும் இலங்கை அரசினால் முன்வைக்கப்படும் யோசனைகளை சர்வதேச மனித உரிமை ஆணையம், மற்றும் சம்பந்தப்படும் தரப்புக்கள் அங்கீகரிக்கின்ற பட்சத்தில் உள்ளக மற்றும் சர்வதேச பொறிமுறை ஒன்றின் கீழ் உருவாக்கப்படும், உண்மை கண்டறியும் ஆணைக்குழு, சட்ட உதவி வழங்கும் ஆணையம், கருணை மன்று, அவற்றின் கீழ் வரும் சகல உப குலக்கல் என்பவற்றில் உரிய முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

சர்வதேச தீர்மானங்களை வரவேற்று அறிக்கைகள் விட்ட பின்னர் வெறும் கையுடன் பேச்சுவார்த்தைகளில் காலத்தை கடத்தாது உரிய நிபுனர் குழுக்களை அமைத்து முஸ்லிம் விவகாரங்களை தரவுகளுடன் ஆவணப்படுத்தி முறையாக சர்வதேச மற்றும் உள்ளக பொறிமுறையின் கவனத்திற்கு கொண்டுவருவதனை முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும்.

2002 -2004 நோர்வே மத்தியஸ்தத்தில் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளின் பொழுது தனித்தரப்பு கோஷத்தை தூகஈப் பிடித்து ஈற்றில் எந்தவொரு அரங்கிலும் முஸ்லிம் சமூகம் சார்ந்த எந்தவொரு ஆவணத்தையும் முறையாக உள்வாங்கச் செய்யாது வெறும் கையுடன் நாம் மேற்கொண்ட சர்வதேச சவாரிகள் போல் இந்த இறுதிக்கட்ட முனைப்புக்களை நாம் கையளாகாமல் கடத்தி விட்டு பெரும் வரலாற்றுத் தவறினை செய்து காலம் கடந்து கைசேதப் படக்கூடாது.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.