நேர்காணல்: அஷ்ஷெய்க் நஜா முஹம்மத்February 21, 2014 9:23 am


அஷ்ஷெய்க் எம்.ஆர்.நஜா முஹம்மத் ஹபுகஸ்தலாவையை பிறப்பிடமாகக் கொண்டவர். இஸ்லாஹியா அரபுக் கல்லூரி பட்டதாரியான இவர் இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞான துறையில் விசேட பட்டத்தையும் பெற்றிருக்கிறார். அத்துடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியிருக்கிறார். பல வருடங்கள் ஐக்கிய இராச்சியத்தில் வசித்த இவர் அங்கு ஸ்ரீ லங்கா இஸ்லாமிக் போரம் எனும் அமைப்பையும் தோற்றுவித்து சமூகப் பணியாற்றினார். தற்போது நாடு திரும்பி நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் தலைவராகச் செயற்படுகிறார். இவருடன் சமகால அரசியல் போக்குகள் தொடர்பில் விடிவெள்ளி மேற்கொண்ட நேர்காணலை இங்கு தருகிறோம்.

205225_10150869454792992_2024122601_nகேள்வி: போருக்குப் பின்னரான அரசியல் களநிலைவரம் எவ்வாறு இருக்கிறது? முஸ்லிம் அரசியல் சரியான பாதையில்தான் பயணிக்கிறதா?

பதில்: போருக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் போக்குகளைப் பொறுத்தவரையில் சிறுபான்மை சமூகம் அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் புதிய அல்லது மாற்று அரசியல் அணுகுமுறை ஒன்றை கைக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதே எனது அவதானமாகும்.

போர் முடிவுக்கு வந்த பிற்பாடு அண்மைக்காலமாக சிங்கள தேசியவாத உணர்வு மேலோங்கி வருவதையும் அது நிறுவனமயப்பட்டு இயங்குவதையும் நாம் இந்த இடத்தில் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

தமிழ் மக்கள் தங்களது சுயநிர்ணயத்துக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இராணுவ ரீதியாக முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தமக்கு அரசியல் தீர்வு தேவை என்ற கோரிக்கையில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் சமூகம் இன்னமும் தனது நிலையை சுதாகரித்துக் கொண்டதாகவோ அல்லது சமகால சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியதாகவோ தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பது துரதிஷ்டவசமானதாகும்.

எனவேதான் இந்த இடத்திலாவது முஸ்லிம் சமூகம் தான் கடந்து வந்த அரசியல் பாதையை ஒருமுறை திரும்பிப்பார்த்து அதிலிருந்து பாடங்களைக் கற்று எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டும். இன்றேல் அது நமது கண்முன்னாலேயே அழிவடைந்து போகின்ற துரதிஷ்டம் நிகழ்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும்.

கேள்வி: அப்படியானால் முஸ்லிம் அரசியல் இப்போது எந்தக் கட்டத்தில் நிற்கிறது. அது மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பது பற்றிச் சொல்லுங்கள்?

பதில்: தமிழர் தரப்பின் அரசியலைப் பொறுத்தவரை சுதந்திரத்துக்கு முன்னரும் சுதந்திரத்துக்குப் பின்னரும் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுடன் முரண்பட்ட அரசியலைத்தான் முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். அதற்கு பல்வேறு நியாயங்களும் அரசியல் சூழ்நிலைகளும் அவர்களது தரப்பில் இருப்பதை மறுப்பதற்கில்லை. எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து தமிழ் சமூகமும் இந்தத் தருணத்தில் மீள்பரிசீலனை செய்வது பொருத்தம் எனக் கருதுகிறேன்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலானவர்கள் வடக்குக் கிழக்குக்கு வெளியிலேயே வாழ்கிறார்கள். போருக்குப் பின்னர் அரசாங்கமும் தென்னிலங்கை சிங்கள தீவிரப் போக்குடைய சக்திகளும் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளைப் பார்க்கின்றபோது வடக்குக் கிழக்கில் மீண்டும் ஒரு முரண்பாடு வெடிக்குமோ எனும் அச்சம் தோற்றம் பெறுவதை தவிர்க்க முடியவில்லை.

வடக்குக் கிழக்கில் பெளத்த ஆக்கிரமிப்பு, மாகாண சபையை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள், உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மீள்நிர்ணயம், தமிழ் மக்களின் புலம்பெயர்வு, சனத்தொகைப் பரம்பலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சிறுபான்மை மக்கள் தங்களுக்குரிய நிலப் பிரதேசங்களை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளமை என்பனவும் நாம் இந்த இடத்தில் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களாகும்.

இந்தப் பின்னணியில்தான் தொடர்ந்தும் ஒரு இனக்குழுவை மாத்திரம் மையப்படுத்திய அரசியலை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது. வடக்கில் தமிழ் மக்கள்தான் பெரும்பான்மையினர் எனும் நிலைமை தற்போதிருந்தாலும் கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் இன்று எல்லா சமூகங்களும் பரவலாக வாழ்கின்ற நிலை தோற்றம் பெற்றிருக்கிறது. அந்தவகையில் தொடர்ந்தும் சிறுபான்மை அரசியலை முன்கொண்டு செல்ல முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது.

இது ஒருபுறமிருக்க இலங்கையில் ஜனநாயகம் என்பதும் நல்லாட்சி என்பதும் கேள்விக்குட்படுத்தப்படுகின்ற ஒரு சூழலும் தோற்றம் பெற்றிருக்கிறது.

எனவேதான் இந்த இரண்டு காரணங்களினதும் அடிப்படையில் தொடர்ந்தும் நாம் ஒரு சிறுபான்மை அரசியலை முன்னெடுப்பதில் இருக்கின்ற பிரச்சினைகளை நாங்கள் இப்பொழுதே உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றிய மாற்று வழிமுறைகள் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

இந்த இடத்தில்தான் முழு இலங்கைக்குமே ஒரு முன்மாதிரியான அரசியலை செய்து காட்டவேண்டிய ஒரு தார்மீக கடப்பாட்டை முஸ்லிம் சமூகம் சுமந்திருக்கிறது. முஸ்லிம் சமூகம் வெறும் உரிமைக்கான அரசியல் அல்லது இன அடையாளத்துக்கான அரசியல் என்ற வரையறைக்குள்ளிருந்து வெளியேறி நல்லாட்சிக்கும் ஜனநாயகத்துக்கும் சிறந்த நிர்வாகத்திற்கும் முன்மாதிரியாக இருக்கின்ற ஒரு அரசியலை இந்த நாட்டிலே முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த அரசியல் முன்னெடுப்பை ஒரு சமூகக் கடமையாக மட்டுமன்றி சன்மார்க்கக் கடமையாகவும் நாம் கருதி செயற்பட வேண்டியுள்ளது. அதிகாரம் என்பது அமானிதமானது. அதற்கு உலகத்தில் மட்டுமல்ல மறுமையிலும் நாம் பொறுப்புச் சொல்ல வேண்டியிருக்கிறது.

நமது அரசியலை முஸ்லிம் தேசிய அரசியல் என்று கூட நாம் அழைக்க முடியாது. ஏனெனில் தேசியமாக தங்களை முன்கொண்டு வருவதற்கு பல்வேறுபட்ட அடிப்படைகள் இருக்கின்றன. அந்த அடிப்படைகளை முஸ்லிம் சமூகம் அன்றும் பெற்றிருக்கவில்லை இன்றும் பெறவில்லை. முஸ்லிம் தேசிய அரசியல் என்பது ஒரு கோஷமாக இருக்கிறதே தவிர யதார்த்தத்தில் அதனை எம்மால் காண முடியவில்லை.

தமிழ் தரப்பு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளாலேயே முஸ்லிம் தேசிய அரசியல் எனும் கோஷம் முனைப்புப் பெற்றது. என்றாலும் அது தொடர்பில் தென்னிலங்கை சிங்கள அரசியல் தரப்புக்கு போதிய தெளிவு இருக்கவில்லை. அந்தத் தெளிவை நாம் வழங்கவும் இல்லை. அதனால்தான் இன்று வடக்கையும் கிழக்கையும் முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து ஆளப்போகிறார்கள் என்று சிங்கள மக்கள் அச்சப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால் இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம் தனி அலகு என்ற கோரிக்கை கூட தமிழ் தேசியத்துக்கு எதிரான கோரிக்கையே அன்றி சிங்கள தேசியத்துக்கோ அல்லது நாட்டுக்கோ எதிரான கோரிக்கை அல்ல என்பதை தென்னிலங்கை இன்னமும் உணரவில்லை அல்லது அவர்களுக்கு நாம் உணர்த்தவில்லை.

இந்தப் பின்னணியில்தான் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற அல்லது அதிலிருந்து பிரிந்து வந்திருக்கின்ற முஸ்லிம் அடையாளத்தைக் கொண்டிருக்கின்ற கட்சிகளுடைய முன்னெடுப்புகள் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் எந்தளவுக்கு பொருத்தப்பாடு என்பது கேள்விக்குறியே.

கேள்வி: போருக்குப் பின்னரான இலங்கையில் தேசிய விவகாரங்களிலும் சமூக விவகாரங்களிலும் முஸ்லிம் கட்சிகளுடைய வகிபாகம் போதுமானது எனக் கருதுகிறீர்களா?

பதில்: எந்தவொரு முஸ்லிம் கட்சியும் நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலையில் இல்லை. சில தனி மனிதர்கள் அக் கட்சிகளின் தலைவர்களாக இருக்கிறார்கள். அந்தத் தலைமைத்துவத்தைச் சுற்றியே சில வேலைத்திட்டங்களை அவர்கள் முன்னெடுக்கிறார்கள். அதனால் சமூகத்திற்கு அவ்வப்போது நன்மைகள் கிட்டாமலில்லை. ஆனால் அது ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகத்தினதும் நாட்டினதும் நலன்களை முன்னிறுத்திய வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படவில்லை. மாறாக தேர்தல்களை மையப்படுத்தியதாகவும் தேர்தல் காலத்தில் மாத்திரமே இயங்குவதாகவுமே அக் கட்சிகளின் நிலை மாறியிருக்கிறது.

தேர்தல்கள் வருகின்றபோது இந்தக் கட்சிகள் தங்கள் வாக்குகளை தக்க வைப்பதற்காகவும் ஏற்கனவே தம்மிடம் இருக்கின்ற உள்ளூராட்சி, மாகாண சபை அல்லது பாராளுமன்ற ஆசனங்களை பாதுகாக்கவும் மாத்திரமே மக்களை உணர்ச்சியூட்டுகின்ற அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஆராய்ந்து எதிர்காலத்தில் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்துவதற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் எதுவும் எமது முஸ்லிம் கட்சிகளிடம் இல்லை என்பதுதான் கசப்பாயினும் உண்மை.

கேள்வி: முஸ்லிம் சமூகம் அண்மைக்காலமாக எதிர்நோக்குகின்ற எந்தவொரு சவால்களின்போதும் இந்த முஸ்லிம் கட்சிகள் சமூக நலன்களை முன்னிறுத்திச் செயற்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இதில் நியாயம் இருக்கிறதா?

பதில்: நிச்சயமாக. இந்தக் குற்றச்சாட்டுக்கள் பெருமளவு உண்மையானவை. சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்னர் இக் கட்சிகள் தமது நிர்வாக உட்கட்டமைப்பைச் சீர்செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்தக் கட்சிகள் முதலில் ஒரு பொது நோக்கத்திற்காக செயற்பட வேண்டும். ஆனால் இவர்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்படாது தன்னிச்சையாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கட்சிகளில் தலைமைத்துவக் கட்டுப்பாடு கிடையாது. கட்சிகளுக்குள் நிலவுகின்ற கட்டுக்கோப்பில்லாத தன்மையானது இன்று அக் கட்சிகளின் பேரம்பேசும் சக்தியைக் கூட பலவீனப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் இந்த பேரம் பேசும் பலத்தை இழந்திருக்கிறது.

18 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்தபோது தமது கட்சியைப் பாதுகாக்கவே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகச் சொல்லிவிட்டு பின்னர் கண்ணைத் திறந்து கொண்டு குழியில் வீழ்ந்துவிட்டதாக அதே கட்சித் தலைமை வருத்தப்பட்டதையும் நாம் இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்ப்பது பொருத்தமானது.

திவிநெகும சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த சட்டமூலத்தை படித்தறிய கால அவகாசம் தருமாறு காலையில் கோரிக்கைவிடுத்துவிட்டு பின்னர் மாலையில் ஆதரித்து வாக்களித்த சம்பவத்தையும் நாம் அறிவோம். முஸ்லிம் கட்சிகள் மத்தியில் கட்டுக்கோப்போ அல்லது கூட்டுப் பொறுப்போ இல்லை என்பதற்கு இது நல்லதோர் உதாரணமாகும்.

இந்த நிலை தொடருமென்றால் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் பாரிய கேள்விக்குறியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கேள்வி: நீங்கள் தலைமை வகிக்கும் நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியை ஏன் தோற்றுவித்தீர்கள்? இதன் நோக்கம் என்ன?

பதில்: இது வெறுமனே ஓர் அரசியல் கட்சியோ அல்லது தேர்தல்களை மாத்திரம் மையப்படுத்திய அமைப்போ அல்ல. இதனை ஓர் அரசியல் இயக்கமாகவே நாங்கள் பார்க்கிறோம்.
வேறுமனே தேர்தல் காலத்தில் மாத்திரம் பணி செய்கின்ற அரசியல் பாரம்பரியத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு மக்களை அரசியல் ரீதியாக அறிவூட்டி அவர்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டிய தேவை முஸ்லிம் சமூகத்தில் மாத்திரமன்றி எனைய சமூகங்கள் மத்தியிலும் உணரப்பட்டுள்ளது.

எனவேதான் எமது இயக்கத்தின் பெயரைக் கூட மிகவும் பொதுவான முறையில் நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி எனச் சூட்டியிருக்கிறோம். இதன் ஆரம்பக் கட்டமாக பல்வேறு பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

முரண்பாட்டு அரசியல்தான் இன்று எல்லாக் கட்சிகளினுடையதும் வழிமுறையாக மாற்றம் பெற்றிருக்கிறது. முரண்பாட்டினால்தான் எல்லா அரசியல் கட்சிகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகள் அல்லது சிறிய கட்சிகள் தமது வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்காக மக்களை உணர்ச்சியூட்டுகின்றன. மக்களை சிந்திக்கத் தூண்டாமல் வெறும் வார்த்தை ஜாலங்களால் உணர்வூட்டும் வங்குரோத்துத்தனமான நிலையையே இந்தக் கட்சிகளிடம் அவதானிக்க முடிகிறது.

மக்களது சிந்தனைக்கு அரசியலைப் பேசினால் சில வேளை அவர்கள் தங்களுக்கு எதிராக திசைதிரும்பிவிடுவார்கள் என்பதற்காக அவர்களது சிந்தனைகளை மழுங்கடித்து அவர்களது அரசியல் உணர்வுகளுக்குத் தீனி போடுகின்ற வேலைத்திட்டத்தைத்தான் கட்சிகள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு முற்றிலும் மாற்றமான வழிமுறையிலேயே எமது இயக்கம் செயற்படக் காத்திருக்கிறது.

முஸ்லிம் என்பதற்காக முஸ்லிம் கட்சிக்கு வாக்களிக்கின்ற அல்லது தமிழன் என்பதற்காக தமிழ் கட்சிக்கு வாக்களிக்கின்ற நிலை மாறி தமது பிரதேசத்தினதும் பிராந்தியத்தினதும் நலனுக்காகப் பாடுபடக் கூடிய, சிறந்த சேவையை வழங்கக் கூடிய, தன்னலமற்ற, சேவைமனப்பாங்குள்ள வேட்பாளர் யார் என்பதைச் சிந்தித்து இன வேறுபாட்டுக்கு அப்பால் வாக்களிக்கக் கூடிய ஒரு அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அத்துடன் தனிமனித நலன்களை புறந்தள்ளி பொது நலனை முன்னிறுத்திச் செயற்படக் கூடிய கட்சியின் தலைமைத்துவம் முதல் அடிமட்டத் தொண்டன் வரை அனைவரும் ஒரே நோக்கிலும் ஒரே இலக்கிலும் செயற்படக் கூடிய ஒரு அரசியல் இயக்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தோடே நாம் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.

அதுமாத்திரமன்றி பொறுப்புவாய்ந்த, மக்களின் நலன்களுக்காகப் பாடுபடக் கூடிய அரசியல் தலைவர்களை உருவாக்குவதையும் எமது இலட்சியமாகக் கொண்டிருக்கிறோம். அதற்கான பயிற்சித்திட்டங்களையும் யோசித்திருக்கிறோம். அரசியலை ஒரு சேவையாகவும் புனிதப் பணியாகவும் கருதுகின்ற மனிதர்களையே நாம் உருவாக்க விரும்புகிறோம். அரசியலின் ஊடாக அல்லாஹ்வின் பொருத்தத்தை எதிர்பார்க்கின்ற அதனை ஒரு இபாதத்தாகக் கருதுகின்ற மனிதர்களே எங்களுக்குத் தேவைப்படுகிறார்கள்.

இந்த வேலைத்திட்டங்கள் எமது இயக்கத்திற்கு மாத்திரம்தான் பொருத்தம் என்று நான் சொல்லவில்லை. இந்த நாட்டில் ஏலவே அரசியல் களத்தில் இருக்கின்ற முஸ்லிம் கட்சிகள் இவற்றைக் கருத்திற்கொண்டு நாட்டிலே பாரிய மாற்றம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை வழங்கவும் நாம் தயாராகவிருக்கிறோம்.

இன்று கொள்கைகளையும் விழுமியங்களையும் மையப்படுத்திய அரசியலையே முழு நாடுமே வேண்டி நிற்கிறது. அந்தவகையில் இதனூடாக இந்த நாட்டில் வாழுகின்ற சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எங்களால் முன்மாதிரியாக நடந்து கொள்ள முடியும் என்றால் அதுவே எமக்குப் பெரும் வெற்றியாகும். இந்த உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்காக சமூகம் எமக்கு ஒத்துழைப்புத் தரும் என்றும் எதிர்பார்க்கிறோம்.


பதியப்பட்ட கருத்துக்கள்

2 கருத்துக்கள் “நேர்காணல்: அஷ்ஷெய்க் நஜா முஹம்மத்” க்கு.
  1. முஹம்மத் ரமீஸ் says:

    என்னால் மிகவும் தெளிவான கொள்கை ஒன்றை இங்கு கவனிக்க முடிகிறது இதை நடைமுறையில் நடதிக் காட்டினாள் நிச்சயம் மக்கள் அனைவரும் ஆதரவாக இருப்பார்கள். இன்ஷா அல்லா.

    இஸ்லாமிய சமூகம் அல்லது இஸ்லாமியா அரசியல் கட்சிகள் முஸ்லிம்களின் நலன்களை மட்டும் கருத்தில் கொள்ளாது அணைத்து சமூகத்தையும் கருத்தில் கொண்டே அரசியலில் ஈடுபடவேண்டும். மேலும் ஒரு சமூகத்துக்கு அநீதி இழைக்கப்படும் போது வெறுமெனே அறிக்கை விட்டுவிட்டு இருக்காமல் காத்திரமான நடவடிக்கை எடுக்க கூடியதாக அமைந்து காணப்பட வேண்டும். அப்போதுதான். முஸ்லிம் சமுதாயம் அணைத்து சமூகம்களுக்கும் முன்மாதிரியாக திகழும்.

  2. Mohamed Thamby says:

    Keep it up.May Almighty accept all our good deeds. It would be very much better if your group can work together with PMGG and to look into the possibility of working together in forming a Natioal level movement( organisation) which is the need of the hour to to preserve the Political identity we(the muslim)have in this country. We, muslims today have a big challenge in working together and maintaining social co-oherence and our cultural identity.Its a big task.Almighty will make it easy if its entrusted to him seeking his guidance in achieving the overall objective.Lets pray for. We would see this one day as a reality with Almighty’s willing. Thanks.

கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.