மன்னார் பொந்தீவுக் கண்டல் காணி விவகாரம் குறித்த ஒரு பல்கோணப் பார்வைFebruary 22, 2014 12:14 pm

மன்னார் பொன்தீவுக் கண்டல்காணிப் பிரச்சினை தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டணியின் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணலில் இருந்து....

பொது அறிமுகம்:

ASMIN AYYOBமன்னார் நானாட்டான் பிரதேச செயலகப்பிரிவிற்குள் ஒரு கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த(GN Division MN/121) பூவரசங்குளம் முஸ்லிம் சமூகத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட விவாசயக் கிராமம், 116 குடும்பங்கள். பொந்தீவுக் கண்டல் கிறிஸ்த்தவ மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிராமம் 96 குடும்பங்கள். இவ்விரண்டு கிராம மக்களிடையே மிக நீண்டகாலமாக அந்நியோன்யமான உறவும், கொடுக்கல் வாங்கல்களும் நிலவி வருகின்றது. 1990களின் வெளியேற்றத்தின் பின்னர்; 2005 முதல் குறித்த பிரதேசத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இடம்பெற்று வருகின்றது. மேற்படி பிணக்குடன் தொடர்புடைய இரு சமூகங்களையும் கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள் என அடையாளம் செய்வதைவிடவும் அவர்களுடைய பிரதேசங்களின் பெயரால் அடையாளம் செய்வது பொறுத்தமானதாக இருக்கும் என எண்ணுகின்றேன்.

பூவரசங்குளம் குளக்கட்டினை அண்டியதாகவும் பொண்தீவுக் கண்டல் கிராமத்தின் ஆரம்ப எல்லையில் அண்மித்து இருக்கும் 4.5 ஏக்கர் விஸ்தீரனமுள்ள மேட்டு நிலத்தில் பூவரசங்குளம் கிராம மக்களுக்கு காணிகள் பகிரப்பட்டு குறித்த காணியில் முஸ்லிம் மக்கள் வீடுகளை நிர்மானிக்கின்ற சந்தர்ப்பத்தில் 2013 ஒக்டோபர் மாதம் 28ம் திகதி பொண்தீவுக்கண்டல் மக்கள் நானாட்டான் பிரதேச செயலகத்தின் முன்னால் குறித்த காணியை பூவரசங்குளம் மக்களுக்கு வழங்கக் கூடாது எனக் கூறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை நடாத்தினார்கள். இதுவே பிரச்சினையின் தொடக்கமாக அமைந்தது.

பொண்தீவுக் கண்டல் மக்களின் நிலைப்பாடும் வேண்டுகோளும்:

மேற்படி விடயத்தில் பொண்தீவுக் கண்டல் மக்கள் எம்மிடம் கூறியவற்றை அவர்களுடைய வார்த்தைகளில் இங்கே முன்வைக்கின்றேன்.

1860களில் எமது மூதாதையர்கள் பொந்தீவுகண்டல் நிலப்பிரதேசத்தில் தமது குடியிருப்புகளை அமைத்தார்கள். அப்போது 6 குடும்பங்கள் ஆரம்பமாக குடியேறினார்கள். வீடுகளை அமைத்து குடித்தனங்களை நடாத்தினார்கள், வரட்சியான காலநிலை மற்றும் மேட்டுநிலமாக குறித்த பிரதேசம் காணப்பட்டமையால் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் குறித்த நிலப்பகுதியை கைவிட்டு மேட்டு நிலத்தில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கி ஆரம்பகாலக் குடும்பங்கள் நகர்ந்து சென்றன. மன்னார் மாவட்டத்தில் பொண்தீவுக் கண்டல் என்பது பழைமைவாய்ந்த ஒரு கிறிஸ்த்தவக் கிராமமாகும், பொண்தீவுக் கண்டல் என்ற பெயர் குறித்த கிராமத்திற்கு சூட்டப்பட்டதற்கு குறிப்பிட்ட கண்டல் பிரதேசமாகிய மேட்டுநிலப்பரப்பும் ஒரு காரணமாகியது. அதுவே பொண்தீவுக் கண்டல். எனவே எமது கிராம மக்களின் பாரம்பரிய நிலத்தை நாம் இன்னுமொரு சாராருக்கு விட்டுத்தரமுடியாது. அது எமது கிராம மக்களின் உரித்துடைய சொத்தாகும்.

எமது கிராம மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து இந்தியாவில் வசிக்கின்றார்கள். அவர்கள் மீளத்திரும்பும் போது அவர்களுக்கு வழங்குவதற்கும், அல்லது எமது குடும்பங்கள் பல்கிப்பெருகும் நிலை ஏற்படும்போது அவர்களுக்கு வழங்குவதற்கும்ம் காணிகள் எமது கிராமத்தை அண்டிய பகுதிகளில் இல்லை, இருக்கும் இந்த நிலத்தை இழந்தால் நாம் எமது வயல் நிலங்களைத் தூர்த்து குடியிருப்பு நிலங்களாக மாற்றவேண்டிய நிலை ஏற்படும் எனவே எமது மக்களின் எதிர்கால நலன்கருதி குறித்த நிலத்தைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். எனவே குறித்த நிலத்தை எம்மால் வேறு எவருக்கும் வழங்க முடியாது.

எமது பூர்வீக நம்பிக்கைகளின் பிரகாரம் பூதத்தினால் பாதுகாக்கப்படும் பொற்பேழை தற்போது குடியிருப்பிற்காக பகிர்ந்தளிக்கப்படுகின்ற நிலத்தில் இருப்பதாக நாம் நம்புகின்றோம். அதுவே எமது மக்களின் பட்சியாகும், இதனை நாம் இழக்க விரும்பவில்லை. இதன் காரணத்தினாலும் குறித்த எமது பாரம்பரிய நிலத்தை நாம் எவருக்கும் தருவதற்கு முடியாது என முக்கிய காரணங்களை முன்வைத்து பொண்தீவுக் கண்டல் மக்கள் தமது கருத்துக்களை உறுதியாக முன்வைக்கின்றார்கள்.

பூவரசங்குளம் கிராம மக்களின் கருத்துகளும் வேண்டுகோளும்.

ஏற்கெனவே பொண்தீவுக் கண்டல் மக்கள் குறிப்பிட்டது போலவே பூவரசங்குளம் மக்கள் எம்மிடம் தொரிவித்த கருத்துக்களை அவர்களுடைய வார்த்தைகளில் இங்கே முன்வைக்கின்றேன்.

பூவரசங்குளம் கிராமிய மக்களும் பொண்தீவுக் கண்டல் கிராமிய மக்களும் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்த மக்களாவார்கள், இவர்களிடையே எவ்விதமான பிணக்குகளும் சர்ச்சைகளும் ஏற்பட்டதாக எமக்குத் தெரியாது. 1990ம் ஆண்டு வெளியேற்றத்தின் போது 95 குடும்பங்களாக இருந்த எமது மக்கள் தொகையானது தற்போது 180 குடும்பங்களாக பெருகியுள்ளது. நாம் எமது கிராமத்தில் மீளவும் குடியேற விரும்புகின்றோம். 2005ம் ஆண்டு சுமூக நிலை தோன்றியிருந்த காலத்தில் நாம் எமது கிரமத்தை நோக்கி வந்தோம். பலருக்கு குடியேறுவதற்கு காணிகள் இருக்கவில்லை, இதனால் அப்போது முதல் நாம் நானாட்டான் பிரதேச செயலகத்தில் எமக்கு காணிகளைப் பெற்றுத்தருமாறு விண்ணபித்தோம், இருப்பினும் அப்போதிருந்த அதிகாரிகள் காணிகளைப் பெற்றுத்தருவதில் இருக்கும் சிக்கல்களை எடுத்துக்கூறினார்கள். இதனால் எமது மீள்குடியேற்றத்தில் காலதாமதம் ஏற்பட்டது. 2009 யுத்த முடிவிற்குப் பின்னர் எமது கோரிக்கைகளும் முன்பைவிட வலுவாக முன்வைக்கப்பட்டது. இதனால் பூவரசங்குளம் குளக்கட்டிற்குரிய (அரசவரைபுகளில் இது தெளிவாக வரையப்பட்டுள்ளது) மேட்டுநிலத்தை எமக்குப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாம் வேண்டுகோள்விடுத்தோம். குறித்த காணி பூவரசங்குளத்திற்கு சொந்தமான அரச காணியாகும். எனினும் குறித்த காணியை அரச அதிகாரிகள் எமக்குப் பெற்றுத்தரவில்லை. மாற்றமாக குறித்த காணியின் ஒரு பகுதியை பொண்தீவுக் கண்டல் பாடசாலைக்கும், பொது மைதானத்திற்கும் வழங்கினார்கள். பொண்தீவுக் கண்டல் கிராம மக்கள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களிடம் உதவிகளைப் பெற்று குறித்த பாடசாலை மற்றும் பாடசாலை மைதானத்தை புனரமைத்தார்கள். எமக்கு காணிகள் தரப்படவில்லை. 2012ம் ஆண்டு குளக்கட்டுக்குப் பின்புறமாக இருக்கும் அதே காணியின் ஒரு பகுதியை பொது மயானம் அமைப்பதற்காக இந்து சமூகத்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்த்தவர்களுக்கும் தலா 3 ஏக்கர் அளவுக் காணி பகிர்ந்தளிக்கப்பட்டது. முஸ்லிம் மையவாடியில் முஸ்லிம் ஜனாஸாக்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2013ம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்திய வீட்டுத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு எமது கிராமத்தைச் சேர்ந்த 45 குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது, இதனைக் கருத்தில் கொண்டு நாணாட்டான் பிரதேச செயலகம் 2010ம் ஆண்டுமுதல் காணிகளுக்காக விண்ணப்பித்த 96 குடும்பங்களில் இருந்து மிகுந்த தேவையுள்ளவர்களை முதன்மைப்படுத்தி 55 குடும்பங்களை காணிகளை வழங்குவதற்காக தெரிவு செய்தார்கள். இவை அனைத்தும் அரச சட்ட நியமங்களுக்கு அமைவாக காணிக் கச்சேரி நடாத்தப்பட்டு கிரமா உத்தியோகத்தர் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டு முறையாக நடந்தேறியது.

இந்நிலையில் குறித்த மேட்டுநிலத்தில் அடர்ந்த பற்றைக்காடு காணப்பட்டதோடு மண் அகழ்வுகள் இடம்பெற்றமையால் பாரிய கிடங்குகளும் காணப்பட்டன. இதனைச் சீர்செய்தால் மாத்திரமே காணிகளைப் பகிர்ந்தளிக்கமுடியும் என பிரதேச செயலகம் தெரிவித்தமைக்கு அமைய நாம் எமது சொந்த முயற்சியில் எமது சொந்தச் செலவில் குறித்த காணியை 2013 மே மாதம் அளவில் துப்பரவு செய்யத் தொடங்கினோம். எமது கடுமையான உழைப்பை நாம் வழங்கினோம். மூன்று மாதங்களாக நாம் கொஞ்சம்கொஞ்சமாக நிலத்தை துப்பரவு செய்தோம் இதன்போது பொண்தீவுக் கண்டல் மக்களும் எமக்கு ஒத்துழைத்தார்கள் அவர்களது கனரக வாகனங்களை வழங்கி, கூலியாட்களாக தொழில் செய்து உதவியிருக்கின்றார்கள். இதன் பின்னர் காணி உத்தியோகத்தர்கள் காணிகளை உரியமுறையில் அளந்து 55 பயனாளிகளுக்கும் பகிர்ந்தளித்தார்கள். இதில் ஒரு வீடு முழுமையாக நிர்மானிக்கப்பட்டுள்ளது 14 பேர் அத்திவாரங்களை அமைத்துள்ளார்கள். இந்த நிலையில்தான் ஒக்டோபர் 28ம் திகதி பொண்தீவுக் கண்டல் மக்கள் எமக்கு காணிகளை வழங்கக் கூடாது என ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இது எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. பொண்தீவுக் கண்டல் மக்கள் தாமாக இதனை முன்னெடுக்கவில்லை, எவரோ அல்லது வேறு சக்தியொன்று அவர்களை இயக்குகின்றது என நாம் நம்புகின்றோம்.
இப்போது அவர்கள் சொல்கின்ற நியாயங்கள் எல்லாமே போலியானதும் பொய்யானதுமாகும்.

· அது அவர்களது பூர்வீக பிரதேசம் அல்ல மாற்றமாக அது ஒரு காட்டுப்பகுதியாகும். குறித்த காணியில் ஆவிகளின் நடமாட்டம் இருக்கின்ற எனக் கூறி மக்களால் கைவிடப்பட்ட காட்டுப்பிரதேசமே அதுவாகும், குறித்த காணியில் 60-70 வருடங்களுக்கு முந்திய மரங்கள் காணப்படுகின்றன, இது ஒருபோதும் அவர்களால் குடியிருப்புக்காக பாவிக்கப்பட்ட காணி அல்ல
· இப்போது முஸ்லிம்களுக்கு காணி தரமுடியாது என்றால் காணியில் முடிவுப்பகுதியில் முஸ்லிம் மையவாடி வழங்கப்பட்டபோதும் அதில் மையங்கள் அடக்கப்பட்டபோதும் எவ்வித எதிர்ப்பும் ஏற்படாமைக்கான காரணம் என்ன
· 2013 மே மாதம் முதல் காணிகளைத் துப்புரவு செய்யும்போது எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படாமைக்கான காரணம் என்ன?
· காணிகளைத் துப்புரவு செய்வதற்கு எம்மோடு ஒத்துழைத்துவிட்டு இப்போது வந்து முட்டுக்கட்டைகள் போடுவதற்கான நியாயம் என்ன?

இப்போது எமக்குக் கிடைத்திருக்கின்ற இந்திய வீட்டுத்திட்ட உதவிகள் எமக்குக் கிடைக்கக்கூடாது என்ற எண்ணமே இத்தகைய குழப்பங்களுக்கும் எதிர்ப்புக்களுக்கும் காரணம் என நாம் உறுதியாக நம்புகின்றோம். அத்தோடு நானாட்டானைச் சேராத ஒரு சில மதகுருமார்கள் மக்களை ஏவிவிட்டு எம்மிடையே காணப்படும் ஒற்றுமையினை சீர்குலைக்க முனைகின்றார்கள். இதற்கு எமது அயலவர்களாகிய பொண்தீவுக் கண்டல் மக்கள் பலியாகக்கூடாது இதுவே எமது வேண்டுகோளாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாடு என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் முடிவு என்பதைவிட வடக்கு மாகாணசபையின் மன்னார் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர்களின் முடிவு என இதனை குறிப்பிட முடியும்.
மேற்படி விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சருடன் கலந்துரையாடினோம், விடயங்களையும் கள நிலைகளையும் உள்வாங்கிக்கொண்ட முதலமைச்சர் அவர்கள் மேற்படி விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாரையும் தொடர்புகொண்டு மேலதிக விளக்கங்களைப் பெற்றுக்கொண்டார். இதன் பிற்பாடு குறித்த இரண்டு கிராம மக்களையும் முதலமைச்சர் நேரடியாக அவர்களுடைய பிரதேசத்திற்குச் சென்று சந்திப்புகளை நடாத்தினார்.

இதன் பின்னணியில் பூவரசங்குளம் கிராம மக்களுக்கு வேறு பிரதேசத்தில் காணிகளை வழங்க முடியுமாக இருந்தால் அது நீண்டகால நோக்கில் சிறப்பானதாக இருக்கும். அவ்வாறு வழங்க முடியாத நிலை ஏற்படுகின்றபோது குறித்த காணியில் இரண்டு சமூகத்தவர்களுக்கும் பாரபட்சமற்ற வகையில் சமமான அடிப்படையில் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவது பொறுத்தமாக இருக்கும், ஆனால் இரு சமூகத்தவரதும் நல்லிணக்கம் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிசெய்துகொள்தல் வேண்டும் என்பதாக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டல்கள் இருந்தன, இதனையே எமதும் நிலைப்பாடுகளாக நாம் அமைத்துக்கொள்கின்றோம்.

பிரதேச செயலகத்தை தாக்கிய நிகழ்வானது உண்மையில் வருந்தத்தக்க விடயமாகும். மக்களை அவ்விடத்துக்கு அழைத்து வந்தது யார் என எமக்குத் தெரியாது. காணி விவகாரம் தொடர்பாக இறுதிப் பேச்சுவார்த்தை என்றும் பொண்தீவுக் கண்டல் மக்கள் பூவரசங்குளம் மக்களுக்கு காணிகளை வழங்குவதில் சில நிபந்தனைகளுடன் உடன்பாடு கொண்டிருக்கின்றார்கள் என்றும், குறித்த கூட்டத்தில் அவசியம் பங்கேற்குமாறும் நானாட்டான் பிரதேச செயலாளர் அழைப்பு விடுத்திருந்தார், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் மேற்படி விடயத்தை உறுதிப்படுதியிருந்தார். இந்த அடிப்படையில் நான் பேச்சுவார்த்தையில் கல்ந்துகொள்ளவே பிரதேச செயலகத்திற்கு சென்றேன். அங்கே நிலைமை வேறுவிதமாக இருந்தது. மக்கள் அதீதமாக உணர்ச்சிவயப்பட்டிருந்தார்கள். மக்களை அமைதியடையும்படி நாம் வேண்டுகோள்விடுத்தோம் அவர்கள் எமக்கு செவிசாய்க்கவில்லை.

இறுதியில் மன்னார் ஆயர் அவர்கள் ஸ்தலத்திற்கு வருகை தந்தார்கள். குறித்த காணிவிடயத்தால் எழக்கூடிய பிரச்சினைகளை கையாள்வதற்கு உயர்மட்டக்குழுவொன்றினை அமைக்க வேண்டியுள்ளது என ஆலோசனை வழங்கினார். இதன் அடிப்படையில் மன்னார் அரசாங்க அதிபர் அவர்களை சந்தித்தல் என முடிவு செய்யப்பட்டது. அதுவரைக்கும் குறித்த காணியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என மக்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கு பிரதேச செயலாளும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இவ்வாறு மக்கள் கலைந்து சென்றார்கள், இருப்பினும் தாக்குதல் நடாத்திய ஒரு சிலர் அரச உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தினார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது கவலை தரும் விடயம்தான். ஆனால் சட்டம் ஒழுங்கு மீறப்படுவதை எம்மால் அங்கீகரிக்க முடியாதுள்ளது.

பிரச்சினைக்கான தீர்வு குறித்து தங்களது கருத்து என்ன?

பொண்தீவுக் கண்டல் மக்கள் 2010ம் ஆண்டு திகதியிட்டு பலரது கையொப்பங்களுடன் குறித்த காணியை வேறு சமூகத்தவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள், எனினும் குறித்த கடிதம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. என்றாலும் குறித்த காணி தமது பாரம்பரிய பிரதேசம் என மக்கள் கருதினாலும் அதனைப் பாதுகாப்பதில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பது நிலைமைகளைப் பார்க்கின்றபோது புரிந்துகொள்ள முடியுமாக இருக்கின்றது. அதுமாத்திரமன்றி குறித்த காணி அரசகாணி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவை சுவீகரிக்கப்பட்ட காணிகள் அல்ல, மாறாக நிலையான அரசகாணியாகும். இரண்டு கிராமத்தவரிடையே பிரச்சினை வருகின்றபோது எவருக்கும் நூறுவீதம் சாதகமான தீர்வினை வழங்க முடியாது. ஒரு சில விட்டுக்கொடுப்புக்களை செய்வதற்கு இரு சாராரும் முன்வரவேண்டும் அப்போது மட்டும்தான் சுமூகமான தீர்வை எட்ட முடியும். தமது நிலைகளில் இருந்து இறங்கிவராமல் தமக்குச் சார்ப்பான தீர்வினை எதிர்பார்ப்பது சிறப்பானதாக இருக்காது. இதனை இரண்டு தரப்பினரும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடாகும். விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாராகின்ற நிலையில் குறித்த விடயத்தில் எம்மால் சுமூகமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.