முஸ்லிம் அரசியல் என்ற அமானிதம் பாழ் படுத்தப் படுகின்றது.!March 24, 2016 8:59 am

(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
போராட்ட அரசியல் பதவிகளுக்கும் சலுகைகளுக்குமான சூதாட்ட அரசியலாக மாறியமையே அத்தனை பிளவுகளிற்கும் பின்புலம்.
ME-TPகடந்த மூன்று தசாப்தங்களாக எமது கசப்பான அரசியல் வரலாறு எழுதப்பட்டு வருகின்றது, சாதனைகளை விட சோதனைகளையே நாம் சந்தித்து வருகின்றோம்.
சமூகத்தின் இருப்பும் பாதுகாப்பும் எப்படிப் போனாலும் பிளவுபட்டு நிற்கின்ற அரசியல் குழுக்கள் தத்தமது இருப்பையும் பாதுகாப்பையும் ஸ்திரப்படுத்திக் கொள்வதிலேய தமது முழுப் பலத்தையும் பிரயோகித்து வருகின்றார்கள்.
ஒவ்வொருவரும் சமூகத்திற்கான அடைவுகளை விடவும் தத்தமது அடையாளங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள், தேசிய அரசியல் கட்சிகள் தமது நிகழ்ச்சி நிரல்களின் பலிக்கடாக்களாக இவர்களை காவு கொள்கின்றார்கள்.
தன்னார்வ தொண்டர் நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், இஸ்லாமிய அழைப்பு அமைப்புக்களில் பெரும்பாலும் அல்லாஹ்வின் திருப்தியை ஒன்றை நாடி பலரும் இணைந்து கொள்கின்றார்கள்.
ஆனால், உரிமைப் போராட்ட அரசியலுக்கு அப்பால் ஆட்சி அதிகாரம், அபிவிருத்தி என்ற அரசியல் தளத்தில் உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரை பெரும் பாலானவர்கள் தமக்காகவோ தாம் சார்ந்த பிரதேச மக்களிற்க்காகவோ என பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் தான் ஆதரவாளர்களாக அபிமானிகளாக தொண்டர்களாக இணைந்து அர்பணிப்புடன் பணியாற்றுகின்றார்கள்.
கடந்த காலங்களில் முஸ்லிம் அரசியல் குழுக்கள் மாறி மாறி வந்த அரசாங்கங்களிற்கு ஆதரவு அளித்த பொழுது சமூக உரிமைகள் சார்ந்த எந்தவித நிபந்தனைகளையும் முன்வைத்து எந்தவொரு தெளிவான உடன்பாடுகளிலும் கைச்சாத்திட வில்லை, அவ்வாறான எந்த ஆவணமும் இல்லை.
அதேபோன்றே கட்சியின் உயர்மட்டத்தினரை கலந்து கொள்ளாது தேசியக் கட்சிகளுடன் பேரம் பேசல்கள் இடம் பெற்றமை, வெளிப்படைத் தன்மைகள், பொறுப்புக் கூறல்கள் பேணப்படாமை சமூகத்தின் அரசியலை கூட்டுப் பொறுப்புக்களில் இருந்து தனி நபர் நகழ்ச்சி நிரல்களுக்குள் தள்ளி விட்டது, ஒரே கட்சிக்குள் பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் தோன்றின.
தலைவர்கள் முதல் உய்ர்பீடத்தினர்கள் அமைப்பாளர்கள் என சகலரும் தங்களது அமைச்சுக்கள், பிரதியமைச்சுக்கள், தேசியப்பட்டியல், வேறு உயர்பதவிகள, மாகாண உள்ளூராட்சி பதவிகள் என பல்வேறு இலக்குகளுகே முக்கியத்துவம் வழங்கினார்கள்.
அபிவிருத்தி அரசியலில் உரிமைகளை விட சலுகைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது எமது வரலாற்றில் பதிவாகி விட்ட உண்மையாகும்.
இவ்வாறான ஒரு சூழ் நிலையில் தனி ஒருவரின் எதேச்சதிகார செயற்பாடுகள் மேலோங்குகின்ற பொழுது பதவிகளை சலுகைகளை பகிர்ந்து கொள்வதற்கான பொறிமுறைகள் இல்லாமல் போவதனால் பிளவுகள், பிணக்குகள் ஏற்பட அதிகரித்த வாய்ப்புக்கள் உள்ளன.
அதிகாரங்கள் முறையாக பகிரப்படுவதற்கான ஒரு ஒழுங்கு அல்லது பொறிமுறை இல்லாது ஒரு தனி நபரின் கைகளில் அதிகாரங்கள் குவிக்கப்படுவது ஜனநாயக விரோதமான அல்லது கலந்தாலோசனை ஷூரா பொறிமுறைக்கு விரோதமான பிணக்குகளையும், பிரிவினைகளையும் தோற்றுவிக்கின்ற முறையாகும்.
ஒரு கட்சியின் தலைமைத்துவக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தி அதிகாரங்களை பரவலாக்குகின்ற ஏற்பாடுகள் செய்யப்படாதவிடத்து கட்சியில் ஏற்படுகின்ற அத்தனை பிளவுகளிற்கும் பிணக்குகளிற்கும் எதேச்சதிகார தலைமைகளே பொறுப் பேற்க வேண்டும்.
அரசியல் கட்சி என்பது எந்த வொரு தனி நபரினதும் ஏகபோகமல்ல, வாக்காளர்கள், அமைப்பாளர்கள், கட்சிப்பிரதானிகள், தொண்டர் படையணிகள் என எல்லோருக்கும் கட்சியில் உரிமை இருக்கின்றது, சகலரையும் அனுசரித்து அரவணைத்து குழுமக்கட்டுப்பாடுகளை, மற்றும் கடப்பாடுகளை வலுப்படுத்துகின்ற பொழுதே ஒரு தலைவன் வெற்றி பெறுகின்றான்.
தனி ஒரு மனிதனால் இவ்வாறான சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலை ஏற்படும் பொழுது நித்திரையும் நிம்மதியும் இழந்து தவிக்கின்ற நிலைமைகளை நாம் கண்டிருக்கின்றோம்.
தலைவர் அஷ்ரஃப் அவர்களது மரணத்திற்குப் பின்னர் ஒவ்வொரு தேர்தலின் பொழுதும் நேற்றைய நண்பர்கள் நாளைய துரோகிகள் என்றநிலை ஏற்படுவதற்கு மேற்சொன்ன காரணங்களே வழிகோலின என்பதில் சந்தேகமில்லை.
ஒரு குழுமச் செயற்பாட்டில் துரோகிகள் அதிருப்தியாளர்களாக அவதாரம் எடுக்கலாம், காட்டியும், கூட்டியும் கொடுக்கலாம்..
ஆனால், அதிருப்தியாளர்கள் எல்லோரும் துரோகிகளாக இருக்கமாட்டார்கள்...உண்மையான துரோகிகள் குழுமத்தின் உச்சத்தில் ,அதிகார மையத்தில் அமர்ந்திருப்பார்கள்...
போராட்டங்கள் சூதட்டங்களாக மாறுகின்ற பொழுது
கொள்கைக்கும்,தேசத்திற்கும், சமூகத்திற்குமான விசுவாசம் உண்மைப் போராளிகள் உள்ளங்களில் மேலோங்கி நிற்கின்றன.
அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் போலிகள் போராட்ட சுலோகங்கள் தாங்கி மக்களின் பாமரத்தனத்தில் சவாரி செய்வார்கள்.. உண்மைப் போராளிகள் புரியப்படாதவர்களாய், புறந்தள்ளப்பட்டு சமூகத் தளத்தில் அனாதரவாகி விடுவார்கள்..
உள்ளிருக்கும் துரோகிகளும்,வெளியேறும் துரோகிகளும்
போராட்டங்களை சலுகைகளுக்காய் விலை போவதை சாணக்கியம்,சாமர்த்தியம் என்பார்கள்.. சாதனைகள் என்பார்கள்...
ஒன்று மட்டும் உண்மை தேசத்தையும், மக்களையும், சமூகத்தையும் ஏமாற்றுபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை புரிந்து கொள்ள நீண்ட காலம் எடுக்க மாட்டது...!


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.