வாக்குமாறும் தலைமைத்துவங்களும், அட்டாளைச்சேனையை விட்டுப்போகும் தேசியப்பட்டியலும்..!September 28, 2015 7:55 am

தந்திமகன்-

National Listஅரசியல்வாதிகளால் தேர்தல் காலங்களின்போது மக்களுக்கு வழங்கப்படுகின்ற எந்தவொரு வாக்குறுதியும் முழுமையாக வழங்கப்படுவதில்லை என்பதை ஏன்தான் வாக்காளார்கள் அறிந்து தெரிந்து வைத்திருப்பதில்லை. தேர்தல் ஒன்று வந்துவிட்டால் அரசியல்வாதிகள் மூட்டை முடிச்சுக்களுடன் தத்தமது பிரதேச மக்கள் மத்தியில் தேர்தல் வியாபாரத்தை களைகட்டச் செய்வார்கள். மக்களும் அந்த சில நாட்களில் பேராவலுடன் பங்குபற்றி, பிரச்சாரங்களை கேட்பார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து தேர்தல் வியாபாரிகளான தேர்தலில் போட்டியிடுகின்றவர்களும் புரளுகின் நாக்கைப் பயன்படுத்தி வாயில் வந்த எல்லாவற்றையும் பேசுவார்கள். மக்களும் இந்த மனிஷன் நல்லாத்தானே பேசுகின்றார் இவருக்கே வாக்களிப்போம் என்று நினைத்து வாக்கினையும் அளிப்பார்கள். சிலர் இவ்வாறானவர்களின் கதைகளை முழுமையாக நம்பி நண்பர்களுடனும், அறிந்தவர்கள், தெரிந்தவர்களுடனும் சண்டையும் பிடிப்பார்கள். காலம் செல்லச்செல்ல நாம் சண்டை பிடித்தது வீண் என்று நினைப்பார்கள். இந்த நிலைமைதான் இன்று சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மத்தியில் தோன்றியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் மத்தியமாகாணசபையின் உறுப்பினரும், கடந்த தேர்தலின்போதும், ஜனாதிபதி தேர்தலின்போதும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரச்சார பீரங்கியாக ஜனாதிபதி மைத்திரிக்காவும், ஐக்கிய தேசியக் கட்சிக்காகவும் பாடுபட்டவர் ஆஸாத்சாலி. முஸ்லிம்கள் ஏன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் முழங்கியவர். உண்மையான முஸ்லிம் நல்லாட்சிக்கு வாக்களிப்பதன் கட்டாயம் பற்றியெல்லாம் கிடுகிடுத்தவர். இப்போது தன்வீட்டிற்குள் பெண் ஒருவரை வைத்திருந்தார் என்றும், அந்தப்பெண் ஒரு மாகாணசபையின் உறுப்பினரின் மனைவி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இவர்களைப்போன்றவர்களையா? முஸ்லிம்களின் தலைவர்கள் என்றுகூறுவது? அரசியல்வாதிகளால் வழங்கப்படுகினற் வாக்குறுதிகள் மீறப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவிதமான பொய்க் கதைகளை அவிழ்த்துவிடுவது. பின்னர் அது அரசியலில் சகஜம் என்றெல்லாம் கூறி மக்களை மடையர்களாக நினைத்து சில அரசியல் தலைவர்களும், அரசில் அடிவருடிகளும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வதை இன்னும் மக்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் கவலையான விடயமாகும்.

இன்று நவீன ஊடகங்கள் நிறைந்து காணப்படுகின்றன. பொதுவாக, மக்கள்முன் பேசுகின்றபோது மிக அவதானமாக பேசவேண்டிய ஒரு கட்டாயச்சூழ்நிலை காணப்படுகின்றது. ஏனெனில் பேசுகின்ற பேச்சுக்களை உடன் பதிவு செய்து வெப்பதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அப்படியே பதிவிடப்படுகின்றன. பின்னர் நாம் இப்படியெல்லாம் பேசினோமா என்றுகூட அங்கலாய்ப்பதுண்டு. ஆதலால்தான் வாய்வீச்சில் வீரனாக மட்டும் இருப்பதுபோல வாக்குறுதியளிக்கப்பட்டால் அதனை நிறைவேற்ற வேண்டிய கட்டாயமும் குறிப்பாக முஸ்லிம் தலைவர்களினதும், ஒரு உண்மையான முஸ்லிமினதும் கட்டாய கடமையுமாகும்.

இதன் பின்னணியில் சில விடயங்களை குறிப்பாக எழுதவேண்டியுள்ளது. அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸினால் வழங்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் எம்பி தொடர்பாக தொடர்ந்தும் நாம் இப்பகுதியில் எழுவருகின்றோம். ஆரம்பத்திலேயே அம்பாரைக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டபடி கிடைக்க வேண்டும், வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காண்பித்திருந்தோம். ஆனால் இப்போது இக்கதை மாறிச்செல்லும்போல தெரிகிறது. இது தொடர்பாகவும் அம்பாரைக்கு கிடைக்க சந்தர்ப்பம் இல்லை என்றும் சில கட்டுரைகளில் எழுதியிருந்தோம். இருப்பினும் திகாமடுல்ல மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வழங்கப்படுவதாக முகாவின் தலைவர் அவர்களால் கூறப்பட்ட தேசியப் பட்டியல் விவகாரம் இன்று கைமாறும் ஒருநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவே அக்கட்சியினைச் சேர்ந்த பலரும் கூறிவருகின்றனர். இதற்கான காரணங்கள் பல முன்வைக்கப்படுவதையும் நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது.

இது அட்டாளைச்சேனைக்கு புதிய விடயம் அல்ல. ஏனெனில் தருவேன் என்பதும், பின்னர் கிடைக்காமல் விடுவது என்பதும் வழமையாக நடைபெறுகின்ற ஒருவிடயமாகும். 1977ம் ஆண்டின் பொதுத்தேர்தலின் பின்னர் நடைபெற்ற பொத்துவில் தொகுதிக்கான இடைக்கால தேர்தலின்போது அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஏ.எம். ஜலால்தீன் தெரிவு செய்யப்பட்டு சில ஆண்டுகள் மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை ஒன்றின் அடிப்படையில் பதவியை இழந்திருந்தார். இதன் பின்னர் இப்பிரதேசத்திலிருந்து யாரும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்;லை. ஆனால் சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அதாவது மர்ஹூம் றிஸ்வி சின்னலெவ்வை அட்டாளைச்சேனையில் வாழ்ந்தவர் என்பதால் சொற்ப காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

அதேவேளை மர்ஹூம் மசூர் சின்னலெவ்வை கிழக்கு மாகாணசபையில் உறுப்பினராக இருந்தவர். இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருந்து தேர்தல் பலவற்றில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருந்தார். இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியலில் தருவதாக வாக்குறுதிய வழங்கப்பட்டது. பின்னர் கிடைக்காமலே போனது. இதன் பின்னர்தான் இவர் ஸ்ரீலமுகாவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு மாகாணசபைக்கு சென்றிருந்தார். அந்தவழியில் அவரின் மரணத்தின் பின்னர் அந்த இடத்தை நிரப்பும் ஒருவராக முகாவின் கட்சியில் புதிதாக இணைந்து இன்று மாகாண சபைவரை சென்றிருப்பர் அட்டாளைச்சேனை ஏ.எல்.எம். நஸீர் அவர்கள். அவர் கட்சியில் நம்பிக்கை நட்சத்திரமாகவும், கட்சித் தலைவரின் அன்புக்குப் பாத்திரமாகவும் இருப்பவர்.

இச்சந்தர்ப்பத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கு குறிப்பாக தென்கிழக்குப் பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தை முகா வழங்கவில்லை என்பதற்காக நிந்தவூர், கல்முனை, சம்மாந்துறை பிரதேசத்திலிருந்து மூவரை மாத்திரம் போட்டியிடவைக்கப்பட்டது. தென்கிழக்குப் பிராந்தியத்திலும் இவர்களை வெற்றிபெறவைக்கின்ற பொறுப்பு கௌரவ ஏ.எல்.எம். நஸீர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் கௌரவ ஏ.எல்.எம். நஸீர் அவரகளது விடாமுயற்சி, சிறந்த ஒழுக்கப்பண்பு, மக்களுடன் உறவாடும் தன்மை, மக்களை மதிக்கின்ற தன்மை போன்றன காரணமாக மக்களின் பெரு ஆதரவுடன் மூவரும் வெற்றிபெற்றார்கள். துண்டுப்பிரசுரங்களிலும் 'மூவரையும் வெல்ல வைத்து நாமும் வெற்றிபெறுவோம்' எனவும் தலைவர் றஊப் ஹக்கீம், மாகாணசபை உறுப்பினர் நஸீர் அவர்களின் படமும் அச்சடிக்கப்பட்டு மக்களின் கண்களில் காட்சிப்படுத்தப்பட்டன. மக்களும் மும்முரமாக தேர்தலில் நமக்கு ஒருபிரதிநிதி கிடைக்கப்போகின்றது, தலைவரும் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் 'இம்முறை திகாமடுல்லயில் மூவரையும் வெற்றிபெற வைத்தால் வழங்கப்படுகின்ற தேசியப் பட்டியல் எம்பி இம்முறை இந்த மண்ணுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தலைவர் றஊப் ஹக்கீம்; தெரிவித்திருந்தார்.

ஆனால் தேர்தல் நடைபெற்று மாதங்கள் கடந்தும் இன்றுவரை வழங்கப்படாமல் அட்டாளைச்சேனை மக்கள் கொதித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதன் பின்னர் தலைவரிடமிருந்து தீர்க்கமான ஒரு முடிவு வெளியாகவில்லை என்பதுதான் அந்த மக்களின் ஆதங்கமாகும். பலமுறை பல தலைவர்களால் ஏமாற்றப்பட்ட ஒரு பாவப்பட்ட பூமியாக காட்சிதரும் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக வெளியாகி இன்று வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் ஏ.எல்.எம். நஸீருக்கு வழங்கப்படுவதுதான் சிறந்த தெரிவாக அமையும் என்கிற கருத்துக்களும் அப்பிரதேச மக்களிடம் முழுமையாக காணப்படுகின்றது. அதேவேளை வேறுசிலரும் கட்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர்கள் அவர்களும் சில மாதங்களுக்காவது பாராளுமன்றக் கதிரையை அலங்கரிக்க முகாவின் தலைவரிடம் கோரிய போதிலும் அவர்களுக்கும் சரியான முடிவுகள் கிடைக்கவில்லை. எதுஎப்படியோ அட்டாளைச்சேனைக்கு இம்முறை வழங்கப்படுவதாக உறுதியளித்திருந்த தேசியப் பட்டியல் எம்பி கிடைக்க வேண்டும். அதனையே மக்களும் எதிர்பார்;க்கின்றார்கள், விரும்புகின்றார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் துண்டுப்பிரசுரம் ஒன்றும் வெளியாகியிருந்தது. 'அட்டாளைச்சேனைக்கு வாக்களித்த எம்பியே வேண்டும்' எனும் தலைப்பிலான அந்தப் பிரசுரத்தில் 'முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நாம் அக்கட்சியை தலையில் தூக்கிவைத்திருக்கிறோம். ஆனால் சதிகள், கழுத்தறுப்புக்கள் இக்கட்சிக்குள்ளும் வெளியிலும் நடந்தபோதிலும் தடம்புரளாமல் உறுதியாய் இக்கட்சியோடு இருந்திருக்கிறோம்'. மேலும், 'நிந்தவூருக்கு எம்பியை வழங்கப்போவதாக சிலர் கூறிவருகின்றனர். தருவதாக உறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியில் எம்பி தரவேண்டும் அதுவரை பொறுத்திருப்போம். கட்சி நம்மிடம் வரும் காலம் சீக்கிரமாய் வருகிறது. அப்போது பார்த்துக் கொள்வோம்' என்கிற கருத்துப்பட அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வாக்களித்தபடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வழங்க வேண்டும் என்று பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது. பாலமுனை மத்திய குழுவின் தலைவரும், முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற பல தீர்மானங்களும் தலைமையிடம் சென்றிருக்கின்ற நிலையில் கடந்த வியாழன் முஸ்லிம்களால் கொண்டாடப்பட்ட ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் றஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்தையும் ஞாபகமூட்டுவது சிறப்பாய் அமையும் அதாவது 'ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுகின்ற சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒற்றுமையாக, தியாகச் சிந்தனையுடன் செயலாற்ற இந்த நன்நாளில் உறுதிபூணுவோமாக' என விடுத்திருந்தார்.

அப்படியானால் கூறப்பட்டதன்படி நல்லிணக்கம் ஏறப்படுவதற்கு தேசியப் பட்டியல் எம்பியை அட்டாளைச்சேனைக்கு வழங்குவதுதான் நியாயமாகும். இவ்வாறு பந்தாடப்படுகின்ற ஒரு பாராளுமன்றக் கதிரைக்கு இப்போது புதுவடிவம்கூட கொடுக்கப்படுகின்றது. கட்சியின் பின்னடைவுகளைப் பொருத்துவதற்காக, முறிவை சரிக்கட்டுவதற்காக வன்னியில் களமிறக்கப்போவதாகவும், அங்கு அமைச்சர் றிஷாட்டை பின்னடையச் செய்து முகாவை வெற்றிபெறச் செய்ய இந்த தேசியப் பட்டியல் உதவும் என்கிற கதைகளும் அடிபடுகின்றது. மாத்திரமன்றி திருகோணமலை அதாவது கிண்ணியாப் பிரதேசத்திலிருந்து முகாவின் எந்தவொரு வேட்பாளரும் வெற்றிபெறவில்லை. பொதுவாகவே கிண்ணியாப் பிரதேசம் முழுமையாக ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சிக்குரிய ஆதரவாளர்களே நிறைந்துள்ள நிலையில் அங்கு தேசியப் பட்டியில் எம்பியை வழங்கி யாரையும் திருத்த முடியாது. மேலும், கல்குடா தொகுதியில் கணக்காளர் ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என்கிற கோஷங்களும் எழுந்துள்ள நிலையில் காத்தான்குடியிலும் ஒருவருக்கு வழங்கினால்தான் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவை எதிர்த்து கட்சியை வளர்க்கலாம் என்கிற கதைகளும் பேசப்பட்டுவருகின்றன.

இவ்வாறு கட்சியின் தலைமை அட்டாளைச்சேனைக்கு வாக்குறுதி வழங்கியதன் பிரகாரம் தேசியப் பட்டியல் எம்பி வழங்கப்படவேண்டும். அவ்வாறு வழங்கப்படாதபோது எதிர்காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்திலிருந்து முகா கட்சியின் நிழலைக்கூட சிலவேளைகளில் காணமுடியாமல் போய்விடும் என்று இன்று அக்கட்சியின் மிக நெருங்கிய ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். எதுவாக இருந்தாலும், கட்சி ஒரு முடிவினை எடுக்கின்றபோது யாரையும் பாதிக்காமல் எடுக்க வேண்டும். இன்று தலைமைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைவலி தேர்தல் காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூறப்பட்ட வாக்குறுதிகள் என்பதை தலைமை உணராமல் போனதன் விளைவா இது. அல்லது வழமைபோன்ற கதைதான் என்று மக்களும் நம்பி மறந்துவிடுவார்களே என்று நினைத்தாரோ தெரியவில்லை.

முகாவின் தலைவருக்கு இன்னுமொரு வலியும் ஏற்பட்டுள்ளது. அமைச்சின்கீழ் வருகின்ற பல திணைக்களங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்தகாலங்களில் அமைச்சு திணைக்களங்களில் தோற்றவர்கள், ஆதரவாளர்கள் பலருக்கு இணைப்பாளர் என்றும், தலைவர்கள் என்றும் பதவிகள் வழங்கப்பட்டன. அதுவும் இப்போது குழுவிடம் சென்றுவிட்டது. அமைச்சர் றிஷாட்டு வழங்கப்பட்டுள்ள திணைக்களங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஏன் முகாவின் தலைவருக்கு குறைக்கப்பட்டுள்ளன என்பதிலும் தவைலி. தேசியப் பட்டியலிலும் தலைவலி, இணைந்து போட்டியிட்டவர்கள், தோற்றவர்களுக்கும் பதவி தேவைப்படுகின்றது. எனவேதான் வாக்குறுதிகள் வழங்கப்பட்டால் அதனை வழங்கவேண்டும். இல்லையேல் வாக்குறுதி கொடுக்கக்கூடாது. இப்போது அன்றிருந்த அரசியல் மக்களிடம் இல்லை. ஒரு காலகட்டத்தில் மாடு ஒன்றைக் காண்பித்து அது முகாவின் மாடு அதற்கு வாக்களியுங்கள் என்றுகூறினாலும் அட்டாளைச்சேனை மக்கள் வாக்களிப்பார்கள் என்று கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. இதனை நினைவிற் கொண்டு மக்களின் ஆதங்கங்களை பூர்த்தி செய்ய முகாவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள அமைச்சுக்கள் ஊடாக சேவை செய்யவும், வாக்களித்த எம்பியே வேண்டும் என்பதையே அந்த மக்கள் இன்னும் எதிர்பார்க்கின்றார்கள்.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.