பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த மன்னார்- மறிச்சுக்கட்டி மக்களின் காணிகள் மீள வழங்கப்படவேண்டும்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்April 19, 2014 5:25 pm

மன்னார்மறிச்சுக்கட்டி காணி விவகாரம் தொடர்பாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் .அஸ்மின் அவர்கள் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணல்

கேள்வி: மறிச்சுக்கட்டியில் தோன்றியிருக்கும் காணிப்பிரச்சினை குறித்து ஒரு அறிமுகத்தைத் தரமுடியுமா?

மன்னார் மறிச்சுக்கட்டி கிராமம் இலங்கையின் அதிகூடிய வெப்ப வலயம் என்றும் மிகக்குறைவான மழைவீழ்ச்சியைப் பெற்றுக்கொள்ளும் பிரதேசம் என அடையாளப்படுத்தப்படுகின்றது. குறித்த பிரதேசத்தின் தெற்கு எல்லையாக மோதரகம ஆறும், வடக்கு எல்லையாக கல்லாறும் மேற்கு எல்லையாக சிலாவத்துறை மருதோண்டிக்குடா கடலும், கிழக்கு எல்லையாக வில்பத்து விலங்குகள் சரணாலயமும் அமைந்திருக்கின்றன. குறித்த பிரதேசத்தின் பூகோள முக்கியத்துவமும், மற்றும் பொருளாதார முக்கியத்துவம் என்பன அதன் அமைவிடத்தை அறிந்து கொள்கின்றபோது புலப்படுகின்றது.

map

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலக பிரிவின் மறிச்சுக்கட்டி கிராம உத்தியோகத்தர் எல்லைக்குள் அமைந்திருக்கும் பாலைக்குளி, கரடிக்குளி, மரைக்காயர் தீவு ஆகிய மூன்று முஸ்லிம் கிராமங்களில் இருந்தும் 1990ல் முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். 2009ல் மீள்குடியேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டபோது மூன்று கிராம மக்களும் தமது கிராமங்களை நோக்கி வந்தார்கள். தம்முடைய வாழ்விடங்கள் முற்றாக காடுகளால் சூழப்பட்டிருப்பதையும், தமது குடியிருப்புகள் சிதைவடைந்திருப்பதையும், வீதிகள் அழிவுற்று இருப்பதையும் கண்டு மனவேதனையடைந்தார்கள். கரடிக்குளி, பாலைக்குளி ஆகிய கிராம மக்களுக்கு ஏற்படாத ஒரு அதிர்ச்சி மரைக்காயர் தீவு கிராம மக்களுக்கு ஏற்பட்டது. அதுவே தம்முடைய கிராமத்தின் கணிசமான பகுதியில் கடற்படையினர் முகாமிட்டிருந்தமையாகும். மரைக்காயர் தீவு கிராம மக்களுக்கு சொந்தமான குடியிருப்புக் காணிகள் (உறுதிக்காணிகள், அரச அனுமதிப் பத்திரக் காணிகள்) வயற் காணிகள், பொதுத் தேவைக்கான காணிகள் என பல ஏக்கர் காணிகள் கடற்படை முகாம்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருந்தன.

2010களில் மீளக்குடியேறுகின்ற நோக்குடன் பதிவு செய்யப்பட்ட மரைக்காயர்தீவினைச் சேர்ந்த 140 குடும்பங்களும் தமக்கு மாற்றுவழியாக தமது கிராமமக்களுக்குச் சொந்தமான 47 ஏக்கர் விஸ்தீரனமுள்ள காணிகளை (அரச அனுமதிப் பத்திரக்காணிகள்) அரசாங்க அனுமதியுடன் சுத்தம் செய்யத் தொடங்கினர். இதற்கு சுமார் 30 இலட்சம் ரூபாய்கள் செலவிடப்பட்டன, ஒரு சிலரின் நன்கொடைகள் உள்ளடங்கலாக கிராம மக்களின் தனிப்பட்ட நிதியே குறித்த வேலைத்திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.

2011ம் ஆண்டு கிராம மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் குறித்த கிராமத்தில் பொதுநோக்கு மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டது. அத்துடன் குடிநீர்த் தேவைக்கென 2 கிணறுகளும் அமைக்கப்பட்டன.  40 தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு மக்கள் நிரந்தர வீட்டுத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பித்திருந்தனர்.

இந்நிலையில் 2012களில் ஏற்கெனவே கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளுக்கு மேலதிகமாக சுமார் 300 ஏக்கர் காணி அடையாளப்படுத்தப்பட்டு  எல்லைகள் இடப்பட்டு சுற்றுவேலியும் அமைக்கப்பட்டது. இவ்வாறு புதிதாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் முஸ்லிம்களின் மையவாடி, மற்றும் விவசாயக் காணிகளும் உள்ளடக்கப்படுகின்றன. இந்நிகழ்வின் பின்னர் இவ்விடயத்தில் குறுக்கிட்ட வனபரிபாலனத் திணைக்களம் மக்கள் துப்பரவு செய்து கூடாரங்களை அமைத்திருந்த காணியை கைவிட்டு வெளியேறவேண்டும் என்றும் அவர்களது கிராமத்துக்கென வேறு ஒரு இடத்தில் அரச காணி அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

2013களின் இறுதிப்பகுதியில் முசலி பிரதேச செயலகத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட (மணங்காடு) புதிய காணியை நோக்கி மரைக்காயர் தீவு மக்கள்  நகர்ந்தார்கள் அடையாளப்படுத்தப்பட்ட காணியை துப்புரவு செய்யத் தொடங்கினார்கள் 4நாட்கள் வேலைகள் நடைபெற்றன சுமார் 3 இலட்சம் ரூபாய்கள் செலவிடப்பட்டன, இவ்வேளையில் அங்கே வந்த இராணுவ உயர் அதிகாரிகள் குறித்த காணி இராணுவத் தேவைக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது; எனவும் மேற்படி காணியை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் பணித்தனர். தகவல் அறிந்த முசலி பிரதேச செயலக அலுவலர்கள் குறித்த இடத்துக்கு வருகை தந்து இராணுவத்தினர்க்கு விடயங்களை தெளிவுபடுத்தியபோதும் இராணுவம் விட்டுத்தருவதாக இல்லை.

மரைக்காயர்தீவு மக்கள் மீண்டும் நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள், தமக்கு சொந்தமான காணிகளை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர். தமது கிராமத்தின் எஞ்சிய காணிகளையும் அதனை அண்டிய பகுதிகளையும் வனவிலங்கு இலாக தம்முடைய புற எல்லைப்பகுதி என அடையாளப்படுத்துகின்றார்கள், அரசாங்கம் அடையாளப்படுத்திய காணியை இராணுவத்தினர் தமது காணி என தெரிவித்து மக்களை அச்சுறுத்துகின்றார்கள். இப்போது அந்த மக்கள் எங்கே செல்வது; எனவே தமது கிராமத்துக்கு உரித்தான அரச பத்திரக் காணிகளில், அமைக்கப்பட்ட பொது நோக்கு மண்டபம், கிணறு ஆகியவற்றை அண்மித்த பிரதேசங்களில் தற்காலிக குடியேற்றங்களை அமைத்து அதனைத் தளமாகக் கொண்டு ஒரு நியாயமான போராட்டத்தை நடாத்தும் நிலைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களிடம் இருக்கின்ற ஒரே கோரிக்கை “1990கள் வரை பரம்பரை பரம்பரையாக தாம் வாழ்ந்துவந்த தமக்கு உரித்தான (உறுதிக்காணிகள், அரச அனுமதிப்பத்திரக் காணிகள்) காணிகளில் இருந்து கடற்படையினர் வெளியேற வேண்டும். எமக்கு வேறு அரச காணிகளோ அல்லது வனவிலங்கு புற எல்லைக் காணிகளோ அவசியமற்றவை என்பதாகும்” இந்தப் போராட்டமும் தீர்மானமும் 2014 மார்ச் 09ம் திகதி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மக்கள் கடுமையான இன்னல்களுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில் மறுக்கப்படுகின்ற தமது அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக முயற்சித்துவருகின்றார்கள்.

கேள்விமேற்படி இருப்பு சார் அடிப்படை உரிமைப் போராட்டம் குறித்து முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் அல்லது விமர்சனங்கள் என்ன? அவற்றின் நியாயத் தன்மை எத்தகையது?

ஜெனீவா மனித உரிமைப்பேரவையின் கூட்டம் நடைபெற்ற காலத்தில் இப்போராட்டம் தொடக்கப்பட்ட காரணத்தினால் இதனை நாட்டைக் காட்டிக்கொடுக்கும் செயல் என்ற அடையாளத்தினுள் உள்ளடக்க முனைந்தார்கள். அதனைத் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்ற பிரதான குற்றச்சாட்டாக இருப்பது வில்பத்து சரணாலயத்துக்கு அண்மித்த புற எல்லைப் (Buffer zone) பகுதிக்குள் குறித்த குடியேற்றம் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதாகும். இதற்கும் மேலதிகமாக சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பாகிய பொதுபலசேனா முன்வைக்கும் குற்றச்சாட்டாக இருப்பது குறித்த பிரதேசத்தில் காணப்படுகின்ற புராதன பௌத்த சின்னங்கள் அழிக்கப்படுகின்றன என்பதாகும். இவையே தற்போதைக்கு முக்கியத்துவப்படுத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளாகும்.

இத்தகைய குற்றச்சாட்டுகள் எதுவும் மனிதநலன் சார்ந்து நோக்குகையிலும், தேசியநலன் சார்ந்து நோக்குகையிலும் அர்த்தமற்ற போலியான இட்டுக்கட்டப்படுகின்ற குற்றச்சாட்டுகள் என்பதை மேற்படி விடயத்தை நோக்குகின்ற எவரும் அறிந்துகொள்வார்கள். மக்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கு அல்லது தேசிய நலனில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலத்தை தமது குடியிருப்புக்காக கோரவில்லை, மாறாக தாம் மிக நீண்டகாலமாக வாழ்ந்த பூர்வீக கிராமத்தையே கோரி நிற்கின்றார்கள். ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடருடன் இதனைத் தொடர்புபடுத்தி நோக்குவது கேலிக்கூத்தான விடயமாகும். மக்கள் தமது உரிமைகள் மறுக்கப்படுகின்ற தருணத்தில் அதற்கு எதிராக குரல்கொடுக்கின்றார்கள். சமகாலத்தில் உலகில் அல்லது நாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற முடியும் இதனை தமக்கு சாதகமாக பிரச்சாரப்படுத்த ஒரு சிலர் முனைவார்களேயானால் அதற்கு மக்கள் பொறூப்புக் கூறவேண்டியவர்கள் அல்ல.

“வனவிலங்குகள் சரணாலய புற எல்லைப்பகுதியில் மக்கள் குடியேறியுள்ளார்கள்” என்ற குற்றச்சாட்டே இங்கே முதன்மைப்படுத்தப்படுகின்ற குற்றச்சாட்டாகும். வனவிலங்குகள் சரணாலயத்தினுள் மக்கள் குடியிருக்க முடியாது என்ற சட்டம் இருக்கின்ற நிலையிலும் விபத்து சரணாலயத்தினுள் புத்தளம் மாவட்டதின் வடக்கு எல்லையில் பூக்குளம் என்னும் கிராமம் அமைந்திருப்பதை நாம் அறிகின்றோம். பூக்குளம் என்னும் சிங்களக் கிராமம் வில்பத்து சரணால்யத்தினுள் அமைந்திருக்கின்றது. அது மாத்திரமன்றி இன்னும் சில குக்கிராமங்களும் வலிபாட்டுத்தளங்களும் வில்பத்து சரணாலயத்தினுள் அமைந்திருக்கின்ற என்கின்ற விடயத்தை நாம் இங்கே கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். இது இவ்வாறு இருக்க வனவிலங்குகள் சரணாலய புற எல்லைப்பகுதியில் மக்கள் குடியேறக்கூடாது என்ற விதிமுறை இருக்கின்றதா இல்லையா என்பது இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை. அடுத்து மறிச்சுக்கட்டி மக்களின் கோரிக்கை தம்மை தமது பூர்வீக காணிகளில் குடியேற்றுங்கள் என்பதுதானே தவிர தாம் இப்போது தற்காலிகமாக குடியிருக்கின்ற சரணாலய புற எல்லைப்பகுதியில் எம்மைக் குடியேற்றுங்கள் என்பதல்ல.

இது இவ்வாறு இருக்க தற்போது மக்கள் தற்காலிகமாக குடியிருக்கின்ற பிரதேசம் 1938 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் சரணாலய புற எல்லைப்பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் இருக்கின்றது. அவ்வாறாயின் மக்கள் மத்தியில் பின்வரும் கேள்விகள் எழுகின்றன.

  • 1990கள் வரை குறித்த (மக்கள் தற்போது தங்கியிருக்கின்ற புற எல்லைப்பகுதி எனப்படுகின்ற பிரதேசம்) பிரதேசத்தில் அரச காணி உரிமப்பத்திரங்கள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டன?
  • 2011களில் அரசாங்கம் குறித்த காணியில் 47 ஏக்கர் அளவிலான காணிகளை சுத்தப்படுத்தி மக்கள் குடியேற்றத்திற்காக ஒழுங்கமைப்பதற்கு அனுமதி வழங்கியமை எதற்காக?
  • 2011களில் பொது நோக்கு மண்டபம், மற்றும் குடிநீர் கிணறுகள் அரச நிதியில் கிராம மீள் எழுச்சித்திட்டம் என்ற அடிப்படையில் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதே இது சட்டவிரோதமானதா?
  • இப்போது வனவிலங்கு சரணாலய புற எல்லைப் பகுதி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணிக்கு சமாந்தரமாக இருக்கின்ற காணி கடற்படைத் தேவைக்காக அபகரிக்கப்பட்டுள்ளது எனவே கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி வனவிலங்கு சரணாலய புற எல்லைப் பகுதிக்கு வெளியில் இருக்கின்றதா?

போன்ற முக்கிய கேள்விகள் இங்கே எழுகின்றன. அது மாத்திரமன்றி மக்கள் மத்தியில் இன்னும் பல ஐயங்கள் இருக்கின்றன. தற்போது எமது நாட்டில் பல முக்கியமான வளங்கள் உள்ள பிரதேசங்கள் பல தனியார் நிறுவனங்கள் காணிகளை அபகரிப்பதிலும் ஆக்கிரமிப்பதுலும், அடிமாட்டு விலைக்கு கொள்வனவு செய்வதிலும் தீவிர அக்கறை காட்டுகின்றன. வில்பத்து சரணாலயம், மற்றும் சிலாவத்துறை கடல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட கடறபடையினரால் அபகரிக்கப்பட்டுள்ள மரைக்காயர்தீவு மக்களின் 300 ஏக்கர் காணியும் இவ்வாறான ஆக்கிரமிப்புகளுக்கு கடற்படையினர் என்ற பெயரில் உட்படுத்தப்படுகின்றதா? என்ற ஐயமும் எழுகின்றது

மக்களின் நலன்களுக்கு அப்பால் வனவிலங்கு சரணாலய புற எல்லைப் பகுதியை காப்பதில் இத்தகைய ஆர்வம் எழுந்திருப்பது நான் மேலே குறிப்பிட்ட ஐயப்பாடுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. எனவே வனவிலங்கு சரணாலய புற எல்லைப் பகுதியில் மக்கள் அத்துமீறி குடியேறியிருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் நியாயமற்றது என்பதையும், அது போலியானது என்பதையும் நாம் அறிகின்றோம்.

இறுதியாக புராதன பௌத்த சின்னங்கள் சேதப்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எமது கவனத்தை ஈர்க்கின்றது. அப்பாவி சிங்கள பௌத்த மக்களை உசுப்பேத்தவும் உணர்ச்சியூட்டி பிழையாக வழிநடாத்தவும் கையாளப்படுகின்ற கீழ்த்தரமான உத்தியே இதுவாகும். குறித்த சரணாலயப்பகுதியில் புராதன பௌத்த சின்னங்கள் காணப்பட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் அங்கே காணப்படவில்லை, மாற்றமாக இது போலியான இட்டுக்கட்டல் மாத்திரமே. இதனை முன்வைக்கின்ற பௌத்த பேரினவாத அமைப்பு தம்முடைய அங்கத்தவர்களை சாந்தப்படுத்தவும், அவர்களிடம் இருந்து நிதி மற்றும் வேறு உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் மேற்கொண்ட ஒரு போலியான இட்டுக்கட்டல் மாத்திரமே. இதனை நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதற்கில்லை.

கேள்விமேற்படி விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் ஈடுபாடும் நிலைப்பாடுகளும் எவ்வாறு காணப்படுகின்றன?

மேற்படி விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு எத்தகையது என நான் குறிப்பிடுவது பொறுத்தமாக இருக்காது. அவர்கள் மேற்படி விடயத்தை நன்கு அவதானிக்க முடியும், இப்போது இல்லாவிட்டாலும் அடுத்தடுத்த கட்டங்களில் மேற்படி விடயத்தில் தம்முடைய ஈடுபாடுகளை முன்வைக்க முடியும். எனினும் இதுவரைக்குமான கள நிலைகளை அவதானித்தவன் என்றவகையில் அவர்களது வெளிப்படையான ஈடுபாடுகள் குறித்து மக்கள் மத்தியில் நிலவுகின்ற கருத்துக்களை இவ்விடத்தில் பகிர்வது பொறுத்தமானதாக இருக்கும்.

மன்னார் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது இரண்டு அரசியல் தளங்களில் முக்கியத்துவப்படுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தளங்களே அவையாகும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பொறுத்தவரை மன்னாரில் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அக்கறையுடன் ஈடுபாடு காட்டுவதை நாம் அறிவோம், ஆனால் குறித்த காணிப்பிணக்கில் அவர்களது நிலைப்பாடு மரைக்காயர்தீவு மக்கள் தற்போது தங்கியிருக்கின்ற நிலத்தை வனவிலங்கு சரணாலய புற எல்லைப் பகுதிக்கு விட்டுக்கொடுத்து மாற்று காணியை அடையாளப்படுத்தி குடியேறவேண்டும் என்பதாகும். இதனை அவர்கள் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின்படி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்படி விடயத்தில் இதுவரைக்கும் எவ்வித ஈடுபாடுகளையும் வெளிப்படையாக முன்னெடுக்கவில்லை என்ற கருத்த முன்வைக்கின்றார்கள். தேர்தல்காலங்களில் படையெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசத்திற்கு வருகைதரவில்லை என்று மக்கள் முறைப்பாடுகளை முன்வைக்கின்றார்கள்.

கேள்விபொதுபலசேனாவின் ஈடுபாடும், இந்த மக்களுக்கு எதிரான அவர்களது செயற்பாடுகள் குறித்தும் தங்களது கருத்து என்ன?

பொதுபலசேனாவின் ஈடுபாடு எம்மை பலவழிகளில் சிந்திக்கின்றது. இந்த நாட்டின் அரசாங்கம் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தூண்டும் செயற்பாடுகளுக்கு துணைநிற்கின்றதா என்ற ஐயம் இங்கே எழுகின்றது. வடக்கில் சாதாரணமாக நிகழும் மனித உரிமை மீறல்கள் காணாமல் போதல் போன்ற விடயங்களை தட்டிக் கேற்பதற்கான மக்கள் அமைதி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றபோதும், அல்லது தென்னிலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காக குரல்கொடுக்கின்றபோதும் அவற்றை நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என தடுத்து நிறுத்துவதும் தடையுத்தரவுபோடுவதும் அரசாங்கத்தின் முதன்மைச் செயற்பாடுகளாக இருக்கின்றன, ஆனால் பொது பலசேனா என்னும் இனவாத அமைப்பு, கீழ்த்தரமான செயற்பாட்டாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள அமைப்பு சுமார் 400 கிலோ மீட்டர் பயணம் செய்து மறிச்சுக்கட்டிவரை வந்து அங்கே மீள்குடியேறுகின்ற முஸ்லிம்களை சீண்டு, இனவாதப் பிரச்சாரம் மேற்கொண்டு, மக்களையும், அவர்கள் பின்பற்றுகின்ற மதத்தையும் கேவலப்படுத்தி, அச்சுறுத்திவிட்டு மிகவும் பாதுகாப்பாக கொழும்புவரை மீண்டு சென்றிருக்கின்றார்கள். இது முற்றிலும் அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெறவில்லை என்று கூறினால் அது வியப்பிற்குரியதே.

பொது பலசேனா முதற்தடவையாக வடக்கு எல்லைக்குள் பிரவேசித்திருக்கின்றார்கள். இனங்களுடையிலான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் பொது பலசேனாவின் செயற்பாட்டை வடக்கு மாகாணசபை உறுப்பினர் என்றவகையில் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன், ஒட்டுமொத்த வடக்குமாகாண சபையும் இவர்களது இத்தகைய இனமுரண்பாடான விஜயத்தை கண்டித்து தீர்மானம் மேற்கொள்வார்கள் என நான் நம்புகின்றேன். இவர்களுக்கு எதிரான உரிய சட்ட நடவடிக்கை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். இவ்விடயத்தை நாம் சாதாரணமான ஒரு விடயமாக எடுத்துக்கொள்ளமாட்டோம்.

கேள்விஎத்தகைய தீர்வு அந்த மக்களுக்கும், பிரதேசத்திற்கும் ஏற்புடையது என நீங்கள் கருதுகின்றீர்கள் அல்லது முன்மொழிகின்றீர்கள்

 

இலங்கை முழுவதும் பொதுவாக அரசகாணிகள் மற்றும் தனியார் காணிகள், குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் இருக்கின்ற காணிகள் நகர அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, தேசிய பாதுகாப்பு, வனவளம், ஏனைய அபிவிருத்திகள் என்ற வகையில் சுவீகரிக்கப்படுகின்ற நிலையினை நாம் அண்மைக்காலமாக அவதானித்து வருகின்றோம். காணி சுவீகரிப்பு தொடர்பாக தேசியக் கொள்கையொன்று வகுக்கப்படவேண்டும், இதன் மூலமே இவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளமுடியும். குறிப்பாக வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற காணி சுவீகரிப்புகள் விடயத்தில் வடக்கு மாகாணசபை அறிந்திருப்பது அல்லது அவர்களது அனுமதி பெறப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.

மறிச்சுக்கட்டி மரைக்காயார்தீவு காணிப் பிரச்சினை விடயத்தில் அந்தக் கிராம மக்கள் 1990களுக்கு முன்னர் வாழ்ந்த, தமது ஜீவனோபாயத்தை முன்னெடுத்த சுமார் 300 ஏக்கர்களுக்கும் அதிகமான காணி தற்போது கடற்படையினரால் சுவீகரிக்கப்பட்டிருக்கின்றது எனவே தற்போது மீள்குடியேறுகின்ற மரைக்காயர்தீவு மக்களின் இயல்புவாழ்விற்கு வழியேற்படுத்தும் வகையில் குறித்த கிராமத்தில் இருந்து கடற்படையினர் வெளியேறி குறித்த கிராம மக்களுக்கு அவர்களது பூர்வீக கிராமத்தை திருப்பி வழங்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி மரைக்காயர்தீவு மக்களின் கிராமத்தை கையளிக்க முடியாதபோது அவர்களது கிராமத்தை அண்டியுள்ள பிரதேசத்தில் காணிகளை வழங்கி அவர்களது மீள்குடியேற்றத்துக்கு வழிசெய்தல் அவசியமாகின்றது. அவ்வாறு காணிகள் வழங்கப்படும்போது, மறைக்காயர் தீவு மக்களின் குடியிருப்பு, வாழ்வாதாரம், பொதுத்தேவைகள், குடிப்பெருக்கம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டு காணிகள் ஒதுக்கப்பட்டு, உரிய முறையிலான ஆவணங்கள் மக்களுக்கு கையளிக்கப்படுவதை உறுதிசெய்தல் வேண்டும். அதேவேளை குறித்த காணியானது தேசியப்பாதுகாப்பு சார்ந்த தேவைகள் அல்லாத வேறு எவ்வித தேவைகளுக்கும் பயனப்டுத்த முடியாது என்பதும் சட்டரீதியாக உறுதி செய்யப்படவேண்டும்.

இதுவே எனதும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினதும் நிலைப்பாடாக இருக்கின்றது.

-நன்றி:வீரகேசரி/18.04.2014/வெள்ளிக்கிழமை-


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.