SLMCயின் தேசியப்பட்டியல் தொடர்பான வேண்டுகோள்October 10, 2015 9:49 am

SLMCயின் தேசியப்பட்டியல் தொடர்பான வேண்டுகோள் என்ற தலைப்பில் நேற்றைய விடிவெள்ளி http://img15.deviantart.net/85f6/i/2013/187/1/2/android_mlp_icons__letter_to_princess_celestia_by_dark_samus1-d6cau9i.pngபத்திரிகையில் வெளிவந்த கடிதம்
 
அப்துல் முனாப் பஹ்மியா,
தாருஸ்ஸலாம் வீதி,
காத்தான்குடி
 
அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
தேசியத் தலைவர்,
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,
தாருஸ்ஸலாம் 
கொழும்பு.
மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களுக்கு!
 
SLMCயின் தேசியப்பட்டியல் தொடர்பான வேண்டுகோள்.
 
கடந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தல் முடிவடைந்து ஒரு மாத காலம் கடந்து விட்ட நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸுடன் கூட்டிணைந்து போட்டியிட்டவர்கள் என்ற வகையில் எனது அவதானங்களையும் ஆதங்கங்களையும் தெரிவிக்கும் வகையிலேயே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் அணி உறுப்பினராகிய நான் இம்மடலினை தங்களுக்கு எழுதுகின்றேன்.
நடந்த முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலானது, இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. ஜனவரி 8ம் திகதி இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி மாற்றத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான பாராளுமன்றம் ஒன்று அமையப் பெறவேண்டும் எனும் நன்னோக்கிலேயே இத்தேர்தலில் பலரும் பங்காற்றினர். அந்த வகையிலேயே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி SLMC யுடன் கூட்டிணைந்து தேர்தலில் போட்டியிடுவதினை NFGG யின் மகளிர் அணியின் உறுப்பினராகிய நானும் மிகவும் நம்பிக்கையுடனும் மிகுந்த ஆவலுடனும் வரவேற்றேன். அத்தோடு மட்டுமல்லாது,  இக்கூட்டணியின் வெற்றிக்காக நானும் இன்னும் பல ஆயிரக்கணக்கான சகோதரிகளும் இணைந்து மிகுந்த அர்ப்பணிப்புகளுடனும், தியாகங்களுடனும் செயற்பட்டோம்.அதன் பலனாக நமது கூட்டணி இம்மாவட்டத்தில் வெற்றி பெற்று ஒரு ஆசனத்தினையும் பெற்றுக்கொண்டது. எனவே எமக்கு நீங்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தினை அளித்து எமது உழைப்பினை கண்ணியப்படுத்துவீர்கள் என நாம் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறோம். 
 
இலங்கை வரலாற்றில் அதிலும் குறிப்பாக 100% இஸ்லாமிய கலாச்சாரப் பின்னணியினைக் கொண்ட காத்தான்குடிப் பிரதேசத்தில் இவ்வாறு அரசியல் செயற்பாடுகளுக்காக பெண்கள் தைரியமாக முன்வந்து குரல் கொடுப்பது என்பது மிகவும் அபூர்வமானதும் சவால் மிக்கதுமான ஒன்றாகும். ஆயினும் NFGGயின் மகளிர் அணியுடன் இணைந்து, நானும் இன்னும் பல நூற்றுக்கணக்கான சகோதரிகளும் எங்கள் மீது வீசப்பட்ட கேலிக்கணைகள், அபாண்டமான வார்த்தைப்பிரயோகங்கள், எதிர்த்தரப்பு ஆணாதிக்க அடக்குமுறைகள் போன்ற அனைத்து தடைகளையும் தாண்டி நமது கூட்டணியின் வெற்றிக்காக இரவு பகல் பாராது உழைத்தோம்.இது வரை கால அரசியல் வரலாற்றில் உங்கள் கட்சியைச்சார்ந்த மகளிர்;  அணியினரோ அல்லது உயர் மட்ட உறுப்பினர்களின் குடும்ப பெண் உறவினர்களோ இவ்வாறு வீதிகளில் இறங்கி கட்சிக்காக உழைத்த பதிவுகள் எங்கும் இதுவரை கிடையாது. 
 
அத்துடன் தேர்தலுக்குப் பின்னர் மிக மோசமான அரசியல் வன்முறைக் கலாச்சாரங்களும், பலி வாங்கல்களும், காட்டிக்கொடுப்புகளும் நடைபெற்ற பிரதேசமாகவும் எமது பிரதேசமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலைமையினை தேர்தலுக்கு முன்னரேயே நாம் அறிந்திருந்தும் பெண்களாகிய நாம் இவ்வச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது, மிக வெளிப்படையாக எமது முகங்களை வெளிக்காட்டி, அள்ளாஹ்விற்காக மாத்திரம் பயந்தவர்களாக இந்தக்கூட்டணியின் வெற்றிக்காக பாடு பட்டிருந்தோம். அதன் பிரதிபலிப்பாக கடந்த 22.08.15 அன்று இடம்பெற்ற அரசியல் வன்முறைகளின் போது, எம்மோடு களத்தில் நின்று உழைத்த கற்பிணி சகோதரிகளும் கூட வன்முறையாளர்களினால் தாக்கப்படுகின்ற அளவிற்கு நாம் பாதிக்கப்பட்டோம். இதன் தொடர்ச்சியாக இன்று வரை எமது பல சகோதரிகள் பொலீஸ் நிலையங்களுக்கும், நீதி மன்றங்களுக்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தேர்தலுக்குப் பின்னர்  எமது ஊருக்கு நீங்கள் வருகை தந்து, பாதிக்கப்பட்ட சகோதரிகளை சந்தித்த சமயத்தில் நாம் மிகுந்த கண்ணியத்துடன் இது குறித்து உங்களிடம் எந்த நியாயங்களையும் கோராது பொறுமை காத்தோம். எமது நிலமைகளை நீங்கள் நேரில் அவதானித்துச்சென்ற பின்னர் நீங்கள் மிகச்சரியான முடிவிற்கு வந்து, எமக்கான நியாயமான தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தினை வழங்கி, உங்கள் கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட எமக்கு நடந்த அநியாயங்களுக்காக எம்மை ஆற்றுப்படுத்துவீர்கள்  என நாம் முழுமையாக நம்பினோம்.ஆனால் இன்று  எமது சகோதரிகள் உங்களின் நீண்ட மௌனத்தினால் உளவியல் ரீதியிலும் பெரிதும் சோர்வடைந்துள்ளனர். எனினும் எமக்கு வழங்கப்படப்போகின்ற தேசியப்பட்டியல் ஆசனம் என்பது இந்த நிலைமைகளை தலைகீழாக மாற்றும் எனவும் எமக்கான மிகப்பெரும் ஆறுதலாக அது அமையும் எனவும் நாம் இப்பொழுதும்  பொறுமையுடன் காத்திருக்கின்றோம்.
 
கடந்த 25 வருட கால அரசியல் பின்னணியினைக் கொண்ட சகோதரர் ஹிஸ்புள்ளாஹ்வின் வெற்றி வாய்ப்பு என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMCயின் வெற்றியினை கேள்விக்குட்படுத்தும் என அரசியல் எதிர்வு கூறல்கள் சொல்லப்பட்ட பொழுது, சகோதரர் ஹிஸ்புள்ளாஹ் தனது வெற்றி வாய்ப்பினை அதிகரிக்கும் கருவியாக பெண்களையே தேர்ந்தெடுத்து செயற்பட்டார். பெண்களுக்கான பல மாநாடுகள,; கொடுப்பனவுகள், பல உதவித்திட்டங்கள் என ஒரு கட்டத்தில் SLMCயின் வெற்றி வாய்ப்பு என்பது மிக சந்தேகத்திற்கிடமான ஒன்றாக மாறியது. இந்த இ;க்கட்டான தருனத்தில் நாம் மிகுந்த சமயோசிதத்தினைக் கையாண்டு, ஒரே நாளில் 5000 பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் மாநாடு ஒன்றினை முற்றிலும் பெண்களாகவே நின்று மிக வெற்றிகரமான முறையில் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தோம்.எமது மாநாடு வெற்றி பெற்ற அன்றே சகோதரர் ஹிஸ்புள்ளாஹ்வின் தோல்வி உறுதி செய்யப்பட்டதுடன், எமது கூட்டணிக்கான வெற்றி இந்த மாவட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. எமது மகளிர் மாநாடு பற்றிய செய்திகள் உலகம் பூராகவும் பேசவும் பட்டது. இம்மாநாட்டினை நடாத்தி முடிப்பதற்காக நாம் 10000 இற்கும் அதிகமான அழைப்பிதழ்களை எங்களுடைய கைகளாலேயே விடு வீடாகச்சென்று வழங்கி பெண்களை அழைத்திருந்தோம். இவ்வாறு எங்கள் குடும்பம், பிள்ளைகள், சுயதொழில்கள் என்பவற்றைப் புறந்தள்ளி நாட்கணக்கில் உழைத்திருக்கின்றோம். எனவே எமக்கு நீங்கள் கைமாறாக செய்யப்போகின்ற நன்றிக்கடன் NFGGக்கான தேசியப்பட்டியல் ஆசனம் மட்டுமேயாகும்.
 
அவ்வாறே கடந்த பொதுத் தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சிகளும் பெருந்தொகைப்பணத்தினை தொண்டர்களுக்காக செலவழித்திருந்த நிலையில், தேர்தல் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பலர் அதில் குளிர் காயவும் தவறவில்லை. பணமாகவும் பொருளாகவும் பல்வேறு சலுகைகளையும் பல பெண்களும் அனுபவித்துக் கொண்டிருந்த வேளை NFGGயின் மகளிர் அணியோடு இணைந்து செயற்பட்ட நாம் எமது சேமிப்புப் பணங்களையும் எங்களது தங்க ஆபரணங்களையும் இக்கூட்டணியின் வெற்றிக்காக தானமாகக் கொடுத்து உதவியிருந்தோம். இவ்வாறு கட்சியின் வெற்றிக்காக உங்களது குடும்ப உறுப்பினர்களோ உறவினர்களோ கூட பாடுபட்டிருக்க மாட்டார்கள். எனினும் நாங்கள் அதனை மிகப்பெருமையாகக் கருதி கொடுத்துதவினோம்.   
 
அது மாத்திரமல்லாது எமது சகோதரிகள் தங்களது கைப்பிள்ளைகளையும் சுமந்த வண்ணம் எரிக்கும் வெயிலில் வீடு வீடாகச்சென்று இந்தக்கூட்டணியின் வெற்றிக்காக வாக்குக்கேட்டிருந்தோம். இவ்வாறு நாம் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சென்ற வேளைகளில் எதிரணியைச்சேர்ந்த ஆதரவாளர்களின் மிக மோசமான கேலிப்பேச்சுகளுக்கும் பொலீஸ் முறைப்பாடுகளுக்கும் கூட முகங்கொடுத்தோம். எனினும் மிகவும் பொறுமையோடும் மன வலிமையுடனும் நாம் இவற்றை கட்சியின் வெற்றிக்காக செய்து முடித்தோம். அது மட்டுமல்லாது  இரவு பகல் பாராது பல நூற்றுக்கணக்கான பெண்களுக்கான பொக்கெற் மீட்டிங்குகளை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தோம். காத்தான்குடியில் மாத்திரமல்லாது அதனைச்சூழவுள்ள கிராமங்கள், ஏறாவூர் ஓட்டமாவடிப் பிரதேசங்களும் சென்று அங்குள்ள பெண்களையும் இக்கூட்டணிக்கு வாக்களிக்க கோரியிருந்தோம்.
 
இத்தனை தியாகங்களையும்  துன்பங்களையும் நாம் தாங்கிக்கொண்டு இந்தத்தேர்தலில் நாம் அர்ப்பணிப்புடன் உழைத்தமைக்கான காரணம் நாம் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும் நமது சமூகத்திற்காக இக்கூட்டணியின் அவசியம் கருதியுமே ஆகும். தேர்தலுக்கு முன்னர் SLMC NFGG இற்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையானது, எமது உழைப்பினையும் தியாகங்களினையும் மலினப்படுத்தாது என்று நாம் கருதினோம். அதன் காரணமாகவே சுமார் 5000இற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் அணியாக நாம் இணைந்து செயற்பட்டும் கூட இது வரையில் எமது தேசியப்பட்டியலுக்கான எந்தவித அழுத்தங்களையோ கவனயீர்ப்பு நடவடிக்கைகளையோ நாம் மேற்கொள்ளவில்லை. மாறாக நாம் உங்கள் நகர்வுகளை மாத்திரம் மிகக்கவனமாக அவதானித்து வந்;தோம். 
 
எனினும் அண்மைக்காலமாக வெளிவருகின்ற செய்திகளும் தொடர்ச்சியான உங்கள் மௌனமும் எமது சகோதரிகளின் நம்பிக்கையினை ஆட்டங்காணச் செய்துள்ளது. இது குறித்து உங்களுடன் கலந்துரையாடுவதற்கும் தெளிவு படுத்துவதற்கும் நாம் மிகுந்த அவாவினைக்கொண்டுள்ளோம்.   இத்தேசியப்பட்டியல் விவகாரம் குறித்து உங்களுடன் பேசுவதற்கான உரிமையும் கடமைப்பாடும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் அணியின் உறுப்பினர்கள் என்ற வகையில் எமக்கிருப்பதாய் நான் உணர்கிறேன். எனவே உங்கள் அணியின் வெற்றிக்காக பாடுபட்ட எமது அர்ப்பணிப்புகளையும் தியாகங்களையும் உதாசீனம் செய்ய மாட்டீர்கள் எனவும் நான் நம்புகிறேன். எனவே தயவு செய்து எமக்கான தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தினை உடனடியாக உறுதிப்படுத்தித் தரவேண்டுமென நான் உங்களிடம் மகளிர் அணி உறுப்பினர்கள் சார்பாக  வேண்டுகோள் விடுக்கின்றேன்.எமக்கு உங்களுடனான கலந்துரையாடல் ஒன்றிற்கான நேரத்தினை ஒதுக்கித்தர வேண்டுமெனவும் நான் மிக வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்.
 
'நன்றி'


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.